/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எங்கள் ஆசையை மகள்கள் மேல் திணிக்கலை!
/
எங்கள் ஆசையை மகள்கள் மேல் திணிக்கலை!
PUBLISHED ON : மே 27, 2024 12:00 AM

திரைப்பட இயக்குனர் ராஜகுமாரன்: குழந்தைகள் கத்துக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒண்ணு, அவங்க, தாய் -- --தந்தையோட வாழ்க்கை. அவங்க எங்கேருந்து வந்தாங்க; எப்படியெல்லாம் வாழ்ந்தாங்கன்ற தகவல்களை ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து வெச்சிருக்கணும்.
துரதிர்ஷ்டவசமாக, பல குழந்தைகள் யார், யார் வாழ்க்கையை பற்றியெல்லாமோ தெரிஞ்சுக்கறதுல காட்டும் ஆர்வத்தை, தன் பெற்றோரோட கதையை தெரிஞ்சுக்கறதுல காட்டறதில்லை.
ஆனால், நாங்கள் எங்கள் குழந்தைங்களுக்கு, எங்கள் இரண்டு பேரோட கதைகளையும் சொல்லி தான் வளர்த்திருக்கோம். நான், 'குழந்தையே வேண்டாம்'னு சொல்ல, தேவயானி, 'குழந்தை வேணும்'னு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சாமிக்கு வேண்டிக்கிட்டு, 'கன்சீவ்' ஆனாங்க.
'கிரியேட்டிவ்'வாக யோசிக்கிறது, எல்லா விஷயங்களிலும் பங்கெடுத்துக்கிறது, சினிமா ஆர்வம், கேரக்டர்லயும், மூத்த மகள் இனியா அப்படியே நான் தான்.
அம்மா மாதிரி சாப்பிடறது, டிரஸ் பண்றது, வொர்க் - அவுட் பண்றது, நடிப்பார்வம்னு, இரண்டாவது மகள் ப்ரியங்கா எல்லா விஷயங்களிலும் அப்படியே தேவயானி தான்.
அம்மா -- அப்பாவோட, 'ஜீன்'கள் அவங்ககிட்ட இருக்கும்ல... இரண்டு பேருக்குமே சினிமா ஆசை இருக்கு.
நானோ, தேவயானியோ எங்கள் ஆசைகளை அவங்க மேல திணிக்க விரும்பலை. அதே நேரம், அவங்க ஆசைகளுக்கு மதிப்பு கொடுக்கிறோம். அந்த வகையில் இனியாவுக்கு என்னை மாதிரியே டைரக் ஷனில் தான் ஆர்வம் அதிகம்.
ப்ரியங்காவுக்கு நடிப்புல ஆர்வம் அதிகம். ரெண்டு பேரோட கனவுகளுக்கும் நாங்க துணையாக இருந்து வழிகாட்டுவோம். அப்புறம் அவங்கவங்க துறைகளில் வெற்றியை தக்க வெச்சுக்கிறது அவங்க திறமை.
மகள்களை படிக்க வைக்கிறதோட முடிந்து விடுவதில்லை, அப்பாவோட கடமை. அதை தாண்டி, அவங்களோட தன்னம்பிக்கையை அதிகரிக்கிற விஷயங்களை சொல்லி தருவது தான் முக்கியம்.
அந்த வகையில் என் மகள்களுக்கு பரத நாட்டியம், கீ - போர்டு, பாட்டு, பியானோ, கிடார், சிலம்பம், வேல் சண்டை, குங்பூ, சுருள் கத்தி, நெருப்பு பந்தம் சுத்தறதுனு பல விஷயங்களை கற்று கொடுத்திருக்கேன்.
-குழந்தை வளர்ப்பில் ரொம்ப இக்கட்டான காலகட்டம்னா அது, 'டீன் ஏஜ்' தான். டீன் ஏஜில் அடியெடுத்து வெச்சதுமே, பிள்ளைங்களுக்கு தான் பெரிய ஆளாயிட்டதாக நினைப்பு வந்துடுது.
ஆனால், அப்பா - அம்மாவுக்கு அவங்க எப்போதும் குழந்தைங்களாவே தெரியறாங்க. அதில் தான் முரண்பாடே வரும். அந்த பருவத்தில் பிள்ளைங்க மனசு கோணாமல், பக்குவமாக, சரியாக வழிநடத்தறதுங்கிறது ஒவ்வொரு பெற்றோருக்குமே பெரிய சவால் தான்.
மகள்களுக்கு தேவையானதை செய்கிறேன். அவங்க அம்மா, 'பிசி'யாக இருக்கும் போது, அம்மா ஸ்தானத்தில் இருந்து அவங்களை கவனிச்சுக்கிறேன். அவங்க சந்தோஷமாகவும், பாதுகாப்பாவும் இருக்காங்களா என்பதை உறுதிபடுத்திக்கிறேன். அதை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு விஷயத்திலும் செய்கிறேன். அதை சிறப்பாக செய்ய முயற்சி செய்யறேன்!

