/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அனைவருக்கும் ஆரோக்கிய உணவு அவசியம்!
/
அனைவருக்கும் ஆரோக்கிய உணவு அவசியம்!
PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ரேகா சிவகுமார்:
'தினம் ஒரு ஆரோக்கிய சமையல்' என்ற பெயரில் நான் ஒவ்வொரு நாளும், நம் முன்னோர் பின்பற்றிய பாரம்பரிய சமையல் முறைகளை பின்பற்றி வர்றேன். தற்போது, 400 நாட்களுக்கு மேல் ஆகுது.
நானும், என் குடும்பத்தில் உள்ளோர் மட்டுமின்றி, ஆரோக்கியமான உணவு எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், உணவு திருவிழா நடத்துவதுடன் பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறோம்.
திருவண்ணாமலை, வேலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி என பல ஊர்களிலும் உணவுத் திருவிழா நடத்துவதுடன், நம் பாரம்பரிய உணவுகளை சமைத்துக் கொடுத்து வருகிறேன்.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், என் கர்ப்பப்பையை எடுக்கணும்ன்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க.
ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் நம் முன்னோர் கடைப்பிடித்த பாரம்பரிய உணவுமுறைகளை பின்பற்றினேன். எண்ணி, 45 நாளில் என்னோட கர்ப்பப்பை பிரச்னை முடிவுக்கு வந்தது.
அது மட்டுமல்லாமல், 'சொரியாசிஸ்' எனும் அரிப்பு நோயால் சிரமப்பட்ட என் கணவருக்கு, மூன்று மாதத்தில் நல்ல தீர்வு கிடைத்தது.
அதனால் நாங்கள், நாம் சாப்பிடக்கூடிய உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்.
அடுப்பில்லா சமையல் முறையை தான் முதலில் துவங்கினேன். 'அன்பா சமைக்கலாம் வாங்க, நோ ஆயில் நோ பாயில்' என்ற பெயரில், கட்டணமில்லாத பயிற்சியை துவங்கினேன். படிப்படியாக, எல்லாராலும் எளிதில் பின்பற்றக்கூடிய ஆரோக்கிய உணவு முறைக்குள் நுழைந்தேன்.
அதாவது, அனைவருக்கும் ஆரோக்கிய உணவு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். தினமும் ஓர் ஆரோக்கிய சமையல் செய்ய வேண்டும் என்பதை, இன்று வரை பின்பற்றி வருகிறேன்.
கண்ணமங்கலம் பகுதியில் உணவு திருவிழா என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சி நடத்துகிறோம். அதில், 'ஆர்கானிக்' உணவு என்றாலே அதிக விலையில் விற்கப்படும் இந்த கால கட்டத்தில், நாங்கள், 10 ரூபாயில் துவங்கி, 50 ரூபாய் வரைக்கும், பல உணவுகளுக்கு விலை வைத்திருந்தோம்.
இதில், 50 ரூபாய்க்கு இலுப்பைப்பூ சம்பா - பழகேசரி, கிச்சிலி சம்பா சாதம், வாடன் சம்பா சாதம், சோளச்சோறு, வெப்பாலை காரக்குழம்பு, மண் கட்டிய துவரை சாம்பார், குடம்புளி ரசம், மாஇஞ்சி மோர், வெற்றிலை வள்ளிக்கிழங்கு மற்றும் வாழைக்காய் நாட்டுக்காய் கறி, பாரம்பரிய அப்பளம், ஊறுகாய் கொடுத்தோம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில், நாங்கள் ரசாயனமில்லாத, நல்ல ஆரோக்கியமான உணவுகளை மக்களுக்கு கொடுக்கணும் என்பதற்காகவே, சமையல் கலைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இதற்கு, இயற்கை ஆர்வலர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருக்கின்றனர்!