PUBLISHED ON : ஆக 09, 2024 12:00 AM

வன்கொடுமை, தீண்டாமை, இணைய மிரட்டல் போன்ற சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக, வித்தியாசமான ஆடை அலங்கார அணுவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கும், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி: பேஷன் நம் வாழ்வியலுடன் கலந்த ஒன்று என்பதை நிரூபிக்கவே இந்நிகழ்ச்சியை நடத்தினோம்.
இணைய மிரட்டல், தீண்டாமை, உருவ கேலி, மனிதக்கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் அவலம், போர், வன்முறை, பாலியல் வன்கொடுமை, ஜாதி ஆணவக் கொலைகள் என சமூகத்தில் பேசப்பட வேண்டிய கருத்துகளை இதில் முன்வைக்க திட்டமிட்டோம்.
நான் சில கல்லுாரிகளுக்கு ஆடை வடிவமைப்பு வகுப்புகளுக்கு கவுரவ பேராசிரியராக செல்வதுண்டு. மாணவர்களிடம் பேசும் போது படிப்பு முடித்ததும் சொந்தமாக தொழில், ஒரு நிறுவனத்தில் வேலை என தங்கள் ஆசைகளை கூறுவர்.
ஆனால், சினிமாவில் பிரபலங்களுக்கு ஆடை வடிவமைக்க வேண்டும் என்று இதுவரை பெரும்பாலான மாணவர்கள் கூறியதே இல்லை.
ஏனெனில், திரைத்துறையைப் பொறுத்த வரை, ஆடை வடிவமைப்பாளராக இருப்போர், பிரபலங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்து இருக்கிறது.
பேஷன் துறையில் நுழையும் சாமானிய மாணவர்கள், பிரபலங்களுடன் பணிபுரிவதை நினைத்துக்கூட பார்க்க முடியாதென்ற நிலையே இருந்தது.
இதை உடைக்கும் விதமாக நிகழ்ச்சிக்கு 20க்கும் மேற்பட்ட இயக்குனர்களை விருந்தினர்களாக அழைத்திருந்தோம். நிகழ்ச்சியில் நானும், ஆடை வடிவமைப்பு மாணவர்களும் வடிவமைத்த 25க்கும் மேற்பட்ட ஆடைகள் இருந்தன.
நாங்கள் தேர்வு செய்த எட்டு கருத்துகளுக்கு தேவையான ஓவியங்களை முன்பே தீர்மானித்தோம்.
ஆடைகளில் எங்கள் கருத்துகள் ஓவியமாக வரையப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டன. ஒவ்வொரு கருத்துக்கும் ஒவ்வொரு விதமான ஓவியத்தை வரைந்து வண்ணம் தீட்டியிருந்தோம்.
ஆணவப் படுகொலை குறித்த ஆடையில், படுகொலை செய்யப்பட்டு துாக்கி எறியப்படும் உடலில் கழுத்து, கை, கால் என ஏதோ ஒரு பாகம் வெட்டப்பட்டு இருக்கும். அதை உணர்த்தும் விதமாக அந்த ஆடை கை, கால், கழுத்து என ஊக்குகளால் தனித்தனியாக இணைக்கப்பட்டிருந்தது.
அதேபோல் ஜாதி ஒழிப்பு குறித்த கருத்தை தெரிவிக்க, நான்கு தலைமுறை பெண்களின் ஓவியங்களை வரைந்திருந்தோம். அதில் முதல் தலைமுறை பெண், அடுத்த தலைமுறை பெண்ணுக்கு ஜாதி என்ற ரிப்பனை கண்களில் கட்டி விடுவார்.
இரண்டாம் தலைமுறை பெண் அதை இறுக்கமாக கட்டியிருப்பார். மூன்றாம் தலைமுறை பெண்ணின் ஓவியத்தில் ரிப்பன் லேசாக விலகியிருக்கும். நான்காம் தலைமுறை பெண் முழுதுமாக ரிப்பனை நீக்கியிருப்பார்.
அந்த ஆடையின் பின்புறத்தில் அம்பேத்கர் ஓவியம் வரைந்திருந்தோம். தொடர்ந்து சமூக கருத்துகளை பேசுவோம்; மாற்றத்துக்காக கைகோர்ப்போம்.