/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உப்புக்கண்டம் விற்பனை செய்யும் திட்டமும் இருக்கு!
/
உப்புக்கண்டம் விற்பனை செய்யும் திட்டமும் இருக்கு!
PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

ஆட்டு பண்ணை தொழிலில், லட்சங்களில் சம்பாதிக்கும் திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த சசிரேகா: எனக்கும், கணவருக்கும் முசிறி தான் பூர்வீகம். 10 லட்சம் ரூபாய் பேங்க் லோன் போட்டு நிலத்தில் ஒரு இரும்பு ஷெட் அமைத்தோம்.
சமயபுரத்தில் ஆடு வளர்க்கிறவங்க கிட்ட 30 தாய் ஆடுகள், ரெண்டு கிடா ஆடுகளை வாங்கி, 2019ல் ஆட்டு பண்ணை தொழிலை துவங்கினோம்.
முதலில் சேலம் கருப்பு, கொடி கன்னின்னு இரண்டு ஆடுகளை வைத்து தான் தொழிலை துவங்கினோம். 32 ஆடுகள், ஒரே ஆண்டில் 110 ஆடுகளாக பெருகின. ஆனால் பி.பி.ஆர்., என்ற நோய் தாக்கிவிட்டது.
அது என்ன மாதிரியான நோய், அதை எப்படி தடுப்பது என்று நாங்கள் சுதாரிப்பதற்குள், ஆடுகள் கொத்து கொத்தாக செத்துப் போயி, கடைசியாக, 35 ஆடுகள் தான் நின்னுச்சு.
அதனால், நாங்கள் செய்த முதல் விஷயம், ஆடுகளுக்கு வர வாய்ப்பிருக்கும் நோய்கள், அதற்கான தீர்வுகள் குறித்து, நாமக்கல், ராஜபாளையத்தில் உள்ள கால்நடை பயிற்சி மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நானும், கணவரும் சென்று தெரிந்து கொண்டது தான்.
அதிக எண்ணிக்கையில் ஆடுகள் இருந்தால், மாதம் முழுக்க மாற்றி மாற்றி குட்டி போடும். இதனால், எப்போதும் அந்த வேலைகளை கவனிப்பதிலேயே நேரம் போய் விடும்.
அப்படி இல்லாமல், மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே ஆடுகள் ஈனும் வகையில், அவற்றை சினைப்படுத்துதல் துவங்கி, நிறைய நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டோம்.
தாய் ஆடுகள் ஈனும் குட்டிகளை ஆறு மாதங்கள் வளர்த்து உள்ளூர் வியாபாரிகள், கறிக்கடை உரிமையாளர்கள் என விற்றோம். 2021ல் 100 குட்டிகள் வரை விற்றபோது நம்பிக்கை வந்தது.
லோனும் முடிய, அடுத்து தொழிலை விரிவுபடுத்த நினைத்தோம். அதற்காக கணவர், வேலையை விட்டார்.
எங்களிடம் இருக்கிற ஆடுகளில் வெள்ளாட்டு ரகம் தான் அதிகம். ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிகள் கூட போடும். 500 தாயாடுகள் ஆன பின், மாதம் சராசரியாக 100 குட்டிகள் வரை விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்தோம்.
மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பல ஊர்களில் அம்மன் கோவில்களில் கிடா வெட்டு திருவிழா களைகட்டும்.
மற்ற மாதங்களில் விற்பனை சுமாராக இருக்கும் என்பதால், ஆடு வியாபாரிகளும், கறிக்கடை நடத்துவோரும் குறைவான ரேட்டுக்கு ஆட்டை விலைக்கு கேட்பர்.
இதனால், சமீபத்தில் நாங்களே கறிக்கடையும் ஆரம்பித்து விட்டோம். அடுத்து, கறியை மதிப்பு கூட்டி உப்புக்கண்டமா விற்கவும் இருக்கிறோம். ஆடு வளர்ப்புக்கு ஒரு மாதத்திற்கு லட்சக்கணக்கில் செலவாகுது. அதே சமயம், வருமானமும் கைநிறைய வர ஆரம்பித்துள்ளது.