/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மருத்துவ பணிக்கு ஓய்வு என்பதே கிடையாது!
/
மருத்துவ பணிக்கு ஓய்வு என்பதே கிடையாது!
PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM

மதுரை, தோப்பூர் காசநோய் மருத்துவமனையை தமிழகத்தின் ஆகச்சிறந்த மருத்துவமனையாக மாற்றியிருக்கும், ஓய்வு பெற்ற மருத்துவர் காந்திமதிநாதன்:
என் பெற்றோர், 1950களில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள். என்னோடு சேர்த்து ஐந்து சகோதர, சகோதரிகள். மிகவும் கஷ்டமான சூழலில் தான் வளர்ந்தோம். 10 மற்றும் பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்.
மதுரை மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது. பின், கேரளாவில் கிராமப்பகுதி மருத்துவமனையில் 2,250 ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்ந்தேன்.
அதன்பின், அரசு மருத்துவர் பணிக்கு தேர்வெழுதி, மதுரை ராஜாஜி மருத்துவமனையிலேயே ரேடியாலாஜிஸ்ட் பணி கிடைத்தது. ஆனால், பெற்றோர் இருவருமே நோய்வாய்ப்பட்டதால், நீண்ட விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது.
பின், ராஜாஜி மருத்துவமனையில் நிர்வாக பணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த இடத்தில் எளிய மக்களுக்கு எந்த உதவிகளும் செய்ய முடியவில்லை. அதனால், 'வேறு துறைக்கு மாற்றுங்கள்' என்றதும், தோப்பூர் மருத்துவமனைக்கு மாற்றினர்.
'அது பனிஷ்மென்ட் மருத்துவமனை. அங்கு ஏன் போகிறாய்?' என்று சக மருத்துவர்களே கவலையாக கேட்டும், நான் இங்கு வந்து விட்டேன். இங்கு வந்து பார்த்த போது, பராமரிப்பு எதுவுமின்றி, புதர் காடாக கிடந்தது. கட்டடங்கள் இடிந்து விழுந்து நிலையில் இருந்தன. படுக்கைகள் மோசமாக இருந்தன.
அந்நேரத்தில் தான், கல்லுாரி மாணவர்கள் பலர் என்.எஸ்.எஸ்., முகாம் நடத்த மருத்துவமனைக்கு வந்து, புதர்களை சுத்தப்படுத்தி கொடுத்தனர்.
வனத்துறை அலுவலரை பார்த்து மரக்கன்றுகள் வாங்கி வந்தேன். சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகள் ஒவ்வொருவரையும் ஒரு மரம் நடச் செய்தேன்.
ஆர்.ஓ.பிளான்ட் அமைத்தோம். நோயாளிகளின் மனச்சோர்வை போக்க, 'டிவி' ரேடியோ, நுாலக வசதிகள் ஏற்படுத்தினோம். சுற்றுச்சுவர் எழுப்பி, கதவுகள் அமைத்தோம்.
பல ஊடகங்கள் இதுகுறித்து எழுதியதால், பலர் உதவி செய்ய முன்வந்தனர். புது படுக்கைகள், நவீன சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன. யோகா மையமும், நடை பயிற்சிக்கான பாதைகளும் அமைக்கப்பட்டன.
இந்த மருத்துவமனை, என்றும் எனக்கு தாய்வீடு போன்று தான். இங்குள்ள அனைவருமே எனக்கு உறவினர் தான்.
கடந்த 10 ஆண்டுகளில் வீட்டில் இருந்ததை விட இங்கு இருந்தது தான் அதிகம். ஓய்வென்பது வயதிற்கு தான்; மருத்துவ பணிக்கு அல்ல.
தோப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட மாற்றம் என்னால் மட்டுமே நடந்தது அல்ல; பலரின் பங்களிப்பு இதில் இருக்கிறது. நான் இதில் சிறு பாலமாக செயல்பட்டிருக்கிறேன்.
தொடர்புக்கு:
94420 91965