PUBLISHED ON : மார் 25, 2024 12:00 AM

பெண்கள் அதிகம் கால் பதிக்காத, பிரின்டிங் பிரஸ் துறையில், கடந்த, 10 ஆண்டுகளாக கோலோச்சி வருவது பற்றி கூறும், தென்காசி மாவட்டம் பெரும்பத்துாரில் இயங்கும், 'ஸ்ரீ சாய் மகளிர்' குழுவைச் சேர்ந்த ஆண்டாள் மேரி மற்றும் கண்மணி:
ஆண்டாள் மேரி: படிக்கல, எந்த வேலையும் தெரியாது. ஏதாவது தொழில் ஆரம்பிக்கணும்னா, முதலீடுக்கு பணம் கிடையாது. அப்போது தான், சிறு வெளிச்சமாக, மகளிர் குழு இருப்பது தெரிந்தது.
எங்களில் பலருக்கு தையல் தெரியும் என்பதால், சில ஆயிரங்களில் முதலீடு போட்டு, சின்னதாக கார்மென்ட்ஸ் பிசினசை, 2009ல் ஆரம்பித்தோம்.
நைட்டி, பிளவுஸ், உள்ளாடைகள் தைத்து, சிறு கடைகளுக்கு ஆர்டர் எடுத்து, செய்து கொடுத்தோம். அப்போது தான் அரசு, மகளிர் குழுக்களுக்கு பிரின்டிங் பிரஸ் ஆரம்பிப்பதற்கான பயிற்சி வகுப்பு கொடுப்பதாக கூறியது.
பிரின்டிங் பிரஸ் ஆரம்பிக்க தயாராக இருந்த, 20 பெண்களை வெவ்வேறு குழுக்களில் இருந்து இணைத்து புதுக்குழுவை ஆரம்பித்தோம். 10 நாட்கள் பயிற்சி முடித்ததும் பிரின்டிங் பிரஸ் ஆரம்பித்தோம். இப்போது ஜெயித்து காட்டுகிறோம்!
கண்மணி: தமிழக அரசின், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் வாயிலாக, புதிய தொழில் துவங்க, எங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் மானியத்துடன் கடனுதவி கிடைத்தது.
கூடுதலாக ஒவ்வொருவரும், 15,000 ரூபாய் முதலீடு செய்து புது பிரின்டிங் மெஷின் வாங்கி, பிசினசை ஆரம்பித்தோம். ஒவ்வொருவர் வீட்டிலும், வெளியிலும் ஏகப்பட்ட விமர்சனங்களை முன்வைத்தனர்.
மேலும், ஆர்டர் கேட்டுப் போன இடங்களில், 'பொம்பளைங்களா இருக்கீங்க... பிரின்டிங் முடித்த பின், 'பினிஷிங்' எப்படி இருக்கும்னு தெரியலை' என, சொல்லி ஆர்டர் கொடுக்க மறுத்தனர்.
நாங்க முயற்சியை கைவிடாமல், 'பிட் நோட்டீஸ், விசிட்டிங் கார்டு' அடித்து, வீடு வீடாக வினியோகம் செய்தோம். அரசு அலுவலகங்களுக்கு ஏறி, இறங்கி, ஆர்டர் கேட்டோம்.
அப்போது தான், புதுவாழ்வு திட்டம் வாயிலாக, 25 மாவட்டங்களில் இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு நோட்டு, புத்தகம் ஆர்டர் எடுத்து செய்து கொடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.
அது, எங்கள் வாழ்க்கையை மாற்றியது. கூடுதலாக சில அலுவலகங்களிலும் ஆர்டர் எடுத்தோம். வருமானம் வர ஆரம்பித்தது; வாங்கிய கடனை அடைத்தோம்.
கிடைத்த லாபத்தில், கூடுதலாக பைண்டிங் மிஷின், ஸ்பைரல் மிஷின் வாங்கினோம். சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்திலேயே எங்களுக்கு இடம் கொடுத்து, பிரஸ் நடத்த அனுமதியும் கொடுத்தனர். அதனால் வாடகை செலவும் குறைந்தது.
எங்களது வேலை திருப்தியாக இருந்ததால், மற்ற அரசு அலுவலகங்களில் இருந்தும் ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' செய்றோம். எங்களை கிண்டல் பண்ணவங்க கூட இப்போது புகழ்ந்து பேசுறாங்க!

