PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

விவசாய குடும்பங்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்து நடத்தும், சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும், களஞ்சிய ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சிவராணி:
இந்த நிறுவனத்தில் அங்கம் வகிக்கக்கூடிய பெண்கள் எல்லாம் விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவங்க தான். இதில் பெரும்பாலான பெண்கள், நேரடியாக நிலத்தில் இறங்கி விவசாயம் செய்யக் கூடியவங்க. விவசாயத்தை லாபகரமான தொழிலா மாற்றணும், இயன்றவரை செலவுகளை குறைக்க வேண்டும்.
விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை துவக்கினோம்.
தலா 1,000 ரூபாயை 2,555 பெண்கள் பங்குத் தொகையாக செலுத்தி, இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைந்து இருக்கின்றனர். இதன் வாயிலாக, 25.55 லட்சம் முதலீடு கிடைத்தது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் நபார்டு வங்கி வாயிலாக, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி உதவி கிடைத்தது.
நிலக்கடலை, எள், தேங்காய் போன்ற எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்து, அதை எண்ணெயாக மதிப்பு கூட்ட மூன்று மரச்செக்குகளும், நான்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் செக்குகளும் அமைத்துள்ளோம். எண்ணெயை பேக்கிங் செய்ய, அதிநவீன இயந்திரமும் வைத்துள்ளோம்.
ஒரு மாதத்திற்கு 10,000 லிட்டர் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். மேலும் சிறுதானியங்கள், உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, சோளம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களையும் கொள்முதல் செய்து பாக்கெட் போட்டு, நறுமுகை என்ற பிராண்டில் விற்பனை செய்கிறோம்.
சேலம் துவங்கி சென்னை வரை ஏராளமான மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக எங்கள் பொருட்களை விற்பனை செய்கிறோம்.
கிடைக்கக்கூடிய லாபத்தை பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையாக பிரித்து கொடுத்து விடுவோம். 2017ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், 2024 பிப்ரவரி வரை, 66.37 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது.
எங்கள் நிறுவனம் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் மிகவும் தரமாக இருக்கும் என்ற நம்பகத்தன்மை வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாகி இருக்கு. அதை தொடர்ந்து தக்கவைக்க, தீவிர முனைப்பு காட்டுகிறோம்.
லாபம் குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை; தரம் குறையக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் எந்த பொருட்களிலும் நாங்கள் ரசாயனம் சேர்ப்பதில்லை.
தொடர்புக்கு:
99439 99755.
