/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பெண்கள் எப்பவும் வைராக்கியத்துடன் இருக்கணும்!
/
பெண்கள் எப்பவும் வைராக்கியத்துடன் இருக்கணும்!
PUBLISHED ON : ஏப் 12, 2024 12:00 AM

மதுரையில் தள்ளுவண்டி கடையில் வாழைப்பழங்கள் விற்பனை செய்யும் நாகராணி:
என் கணவர் முருகன், என்னோட தாய்மாமா தான். அவர், 'டிரை சைக்கிள்' ஓட்டி, அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தோம்.
கடந்த 2010ம் ஆண்டு என்னோட வீட்டுக்காரர் மேல் பஸ் மோதியதில், ஒரு காலை எடுக்க வேண்டியதா போச்சு.
அதுவரைக்கும் அலுக்காமல் வேலைக்கு போயிட்டிருந்த மனுஷன, வீட்டுல படுக்க வச்சிருச்சு, விதி. அவரோட சிகிச்சையிலயே இரண்டு ஆண்டு ஓடி போயிருச்சு. அன்றாடம் பொழுது கழியுறதே பெரிய திண்டாட்டமா இருந்த காலகட்டம் அது.
எவ்ளோ நாளைக்கு தான் சும்மா இருக்க முடியும்? அதனால், 'நான் வேலைக்கு போறேன்'னு அவர்கிட்ட சொன்னேன். அதுவரைக்கும் நான் எந்த வேலைக்கும் போனதில்ல. அதனால், சம்பளமும் பெருசாக கிடைக்காதுங்கிறதால, ஏதாவது தொழில் செய்யலாம்னு முடிவெடுத்தோம்.
விபத்துக்கு முன்னாடி, வாழைப்பழக் கடைகளுக்கு வண்டியில் சென்று, என் வீட்டுக்காரர் சப்ளை செய்ததில், சில கடைக்காரங்க பழக்கம் இருந்துச்சு. அந்தப் பழக்கத்தை வைத்து, நாமளே ஒரு தள்ளுவண்டி கடை போட்டு வாழைப்பழம் வாங்கி விற்கலாம்னு முடிவு பண்ணோம்.
மார்க்கெட்டில் மொத்தமாக பழங்கள் வாங்கி, சின்னதாக தள்ளுவண்டி கடை வச்சோம். மற்ற கடைகளை விட, லாபத்தை குறைத்து விற்றோம். கொடுத்த காசைவிட, அதிகமாகவே பழம் தந்ததால், பலரும் ரெகுலர் கஸ்டமர் ஆகிட்டாங்க.
வியாபாரம் படிப்படியாக வளர்ந்துச்சு. வாங்குன கடனையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடைச்சோம். அவருக்கும் வீட்டுக்குள்ளேயே இருப்பது பிடிக்கவில்லை.
கடை வைக்கிறப்பவே, பைக் போல ஓட்டுற மாதிரி, 'டிரை சைக்கிள்' செய்து வாங்கிட்டார். அந்த வண்டியில் மார்க்கெட்டுக்கு சென்று, பழங்கள் வாங்கி வருவது அவர்தான்.
மனுஷனோட சூழ்நிலையை சொல்லவே முடியாது. யாருக்கு, எப்ப வேணாலும், எது வேணாலும் நடக்கலாம். கொரோனா சமயத்தில் நல்லா இருந்த பலரும் கீழ வந்துட்டாங்க, இல்லையா? வீட்டுக்காரர் முடியாம படுத்துட்டாரேன்னு, நானும் கண்ணீர் மட்டும் வடிச்சிட்டு வீட்டுலேயே இருந்திருந்தால், நிச்சயமாக இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டோம்.
பெண்கள் எப்பவும் வைராக்கியத்தோட இருக்கணும். முதலில் அவங்க வெளி உலகத்துக்கு வரணும். நமக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. நாமதான் அதைத் தேடிக்கணும்.
வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டிருந்தா எப்பவும் ஜெயிக்க முடியாது. அதுக்கு எங்க வாழ்க்கையும் ஓர் உதாரணம்.

