/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'புளூட்டோ'வால் குணமடைந்த 1,000 பேர்!
/
'புளூட்டோ'வால் குணமடைந்த 1,000 பேர்!
PUBLISHED ON : ஏப் 01, 2025 12:00 AM

'புளூட்டோ' எனப்படும் ரோபோ கையை உருவாக்கிய, மூவர் குழுவில் ஒருவரான, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையின் உயிரி பொறியியல் துறை பேராசிரியர் சிவகுமார் பாலசுப்ரமணியன்: பக்கவாதம் மற்றும் முதுகு தண்டு காயத்தால், ஒருவருக்கு கை செயலிழந்து போகலாம்.
இதற்கு முழு தீர்வு இல்லாத பட்சத்தில், 'பிசியோ' அல்லது 'ஆக்குபேஷனல் தெரபி' வாயிலாக அவர்களுக்கு உதவ முடியும்.
புளூட்டோ இதை செய்கிறது. புளூட்டோவில் மோட்டார் இருப்பதால், அது நம் கையை எளிதாக நகர்த்துவதற்கு உதவுகிறது.
கை செயலிழந்து போனால், அதற்கு உதவி செய்யும் வகையில் ஒரு நல்ல கருவி வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்தது. விரல், மணிக்கட்டு என்று அனைத்திற்கும் தனித்தனி கருவிகளை உருவாக்க முடியாது; அப்போது தான், புளூட்டோ ஐடியா தோன்றியது.
எப்படி ஒரே மிக்சியில் பல ஜார்களை போட்டு அரைக்க முடிகிறதோ, அதேபோல் புளூட்டோவில் ஒரேயொரு மோட்டார் தான்.
ஆனால், கையின் அனைத்து நகர்வுகளையும் அது செய்கிறது. 2014ல், ஐ.ஐ.டி., இயந்திர பொறியியல் துறை பேராசிரியை சுஜாதா சீனிவாசனுடன் சேர்ந்து, இதை உருவாக்க ஆரம்பித்தேன்.
எங்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., இயந்திர பொறியியல் துறை மற்றும் வேலுார் சி.எம்.சி., உயிரி பொறியியல் துறைகளில், டாக்டர் அரவிந்த் நேருஜி பக்கபலமாக இருந்தார்.
கைகள் செயல் இழந்து போனால், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு, 'பிசியோதெரபி' செய்ய வேண்டும். ஆனால், அனைவராலும் தினமும் மருத்துவமனைக்கு வந்து செல்ல இயலாது.
இப்போது புளூட்டோ இருந்தால், வீட்டிலேயே பயனடைய முடியும். இது, கை செயலிழந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருவி. வெறும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி, குணமாக முடியும்.
இந்த ரோபோ வாயிலாக, இரண்டு மணி நேரம் வரை எளிதாக பயிற்சி பெறலாம். நம் நாட்டில் பயிற்சி பெற்ற, 'தெரபிஸ்ட்'கள் மிகவும் குறைவு.
ஆனால், நோயாளிகள் அதிகம். இதனால், பல பேருக்கு பிசியோதெரபி பயிற்சி கிடைக்காமல் போய் விடுகிறது. புளூட்டோ இருந்தால், ஒரே நேரத்தில் ஒரு மருத்துவரால் பல நோயாளிகளை பார்க்க முடியும்.
உதாரணமாக, ஒருவர் தினமும் ஒரு மணி நேரம் மருத்துவரை பார்த்து பயிற்சி பெற வேண்டும் என்றால், புளூட்டோவை பிசியோதெரபிஸ்ட்கள் பரிந்துரைக்கின்றனர். இப்போது, சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரியின் 11 கிளைகளிலும் இது பயன்பாட்டில் உள்ளது.
இதுவரை, 1,000 பேர் புளூட்டோவால் குணமடைந்துள்ளனர். மின்சாரம் மட்டுமின்றி, சூரிய ஒளியில் செயல்படும் விதமாகவும் இதை தயாரிக்கும் முன்னெடுப்புகளில் இருக்கிறோம்.
தொடர்புக்கு: 0416 2285098.

