/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கொடி மிளகில் ஆண்டுக்கு 12 கிலோ மகசூல் கிடைக்கும்!
/
கொடி மிளகில் ஆண்டுக்கு 12 கிலோ மகசூல் கிடைக்கும்!
PUBLISHED ON : அக் 11, 2024 12:00 AM

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை அருகே இயங்கி வரும், நறுமணப் பயிர்கள் நாற்று உற்பத்தி பண்ணையின் மேலாளரும், தோட்டக்கலைத் துறை துணை அலுவலருமான ஞானத் தயாசிங்:
வனத்துறைக்கு சொந்தமான இந்த இடத்தில், 1967ல் துவங்கப்பட்ட இந்த பண்ணையில், ஆரம்ப காலங்களில் கருமிளகு மேம்பாட்டு திட்டத்தில், மிளகு நாற்றுகள் தான் அதிகமாக உற்பத்தி செய்தனர்.
அதே காலகட்டத்தில், இந்த பண்ணையில் கொக்கோ நாற்றுகளும் உற்பத்தி செய்தனர். நாளடைவில் லவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் நாற்றுகள் உற்பத்தி துவங்கப்பட்டு, தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்துட்டு இருக்கு.
இவை மட்டுமல்லாமல், திப்பிலி, பாக்கு, பழ வகை நாற்றுகளும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த பண்ணையில் ரசாயன இடுபொருட்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை. விற்பனை செய்யப்படும் நாற்றுகள் தரமாகவும், தனியார் நர்சரிகளை விட மிகக் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்பதால், வெளி மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து வாங்குகின்றனர்.
மாடித் தோட்டத்தில் மிளகு உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டக்கூடிய மக்களுக்காக, புதர் போல் படரும் தன்மை கொண்ட மிளகு ரக நாற்றுகளை உற்பத்தி செய்கிறோம்.
இதற்கு தாங்கு மரம் தேவையில்லை; தொட்டியிலோ, நிலத்திலோ நட்டு எளிதாக வளர்க்கலாம். வீட்டு தேவைக்கான மிளகு கிடைத்து விடும். தோட்டங்களுக்கு மட்டுமே இதை பரிந்துரை செய்கிறோம்.
வணிக ரீதியாக பயிர் செய்வதற்கு, கொடி வகை மிளகு தான் சிறந்தது. கரிமுண்டான், பன்னியூர் போன்ற ரகங்களைச் சேர்ந்த கொடி மிளகை பயிர் செய்தால், ஒரு கொடியில், ஆண்டுக்கு 12 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
இந்த பண்ணை வனப்பகுதியில் அமைந்திருப்பதால், இயற்கையாகவே மண் வளம் சிறப்பாக இருக்கிறது. நாற்றுகள் நல்லா செழிப்பாக வளர்வதுக்கான தட்ப வெப்ப நிலையும் இங்கு அருமையாக அமைந்துள்ளது. ஆண்டுக்கு, 110 நாட்கள் மழை கிடைக்குது.
லவங்கப்பட்டை நாற்றை, 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இந்த பண்ணையில், 1,200 லவங்கப்பட்டை மரங்கள் இருக்கின்றன. இவற்றில் இருந்து பட்டை எடுத்து, 50 கிராம் பாக்கெட்டுகளாக போட்டு, 35 ரூபாய் என விற்பனை செய்கிறோம்.
இந்த பண்ணையில் ஆண்டுக்கு, 4 லட்சம் முதல் 4.50 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு நேரடியாகவும், தோட்டக்கலைத் துறை சிறப்பு திட்டங்கள் வாயிலாகவும் விற்பனை செய்கிறோம்.
தொடர்புக்கு:
94435 80495.

