/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஒவ்வொரு மாதமும் 1,200 புடவைகள் விற்பனையாகும்!
/
ஒவ்வொரு மாதமும் 1,200 புடவைகள் விற்பனையாகும்!
PUBLISHED ON : நவ 09, 2024 12:00 AM

வாழை நார் பட்டுப் புடவை தயாரிப்பில், கோடிகளில் வருமானம் ஈட்டும், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தேவிபிரியா: என்னிடம், 16 கைத்தறிகளும், 10 மிஷின் தறிகளும் இருக்கு. ஒன்பது ஆண்டுகளுக்கு முன், 20,000 ரூபாய் முதலீட்டில் தான் பிசினஸ் ஆரம்பித்தேன்.
கணவரின் குடும்பத் தொழில் நெசவு. மாமனாரும், மாமியாரும் புடவைகளை நெசவு செய்து, மொத்த வியாபாரிகளுக்கு வித்துட்டு இருந்தாங்க. இந்த பிசினசில் புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்து, டிஜிட்டல் விற்பனையை ஆரம்பித்தேன்.
புடவைகளை போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். மாதத்திற்கு, 100 புடவைகள் விற்பனையாகும் அளவிற்கு வாடிக்கையாளர்களை உருவாக்கினேன்.
எங்கள் வீட்டு தறியில் புடவைகள் தயாரானதும், போட்டோ எடுத்து பதிவிடுவேன். அதை வாடிக்கையாளர் பார்த்துவிட்டு, உடனே ஆர்டர் கொடுக்கணும்.
சிறிது தாமதமானாலும் கேட்கும் புடவை இருக்காது; மொத்த வியாபாரிகள் வாங்கிச் சென்று விடுவர். சில நேரம், 'ஸ்டாக் இல்லை' என சொல்ல வேண்டி இருந்ததால், சில வாடிக்கையாளர்களை இழந்தேன்.
இதற்கு தீர்வாக, புடவைகளை நானே ஸ்டாக் வைத்து, விற்பனை செய்ய முடிவு செய்தேன். முதல் கட்டமாக, 20,000 ரூபாயை முதலீடு செய்து, சொந்த பிராண்டை ஆரம்பித்தேன்; 2019ம் ஆண்டு, 80,000 ரூபாய் முதலீட்டில் ஐந்து கைத்தறி போட்டு நெசவை ஆரம்பித்தேன்.
அந்த நேரத்தில் தான், வாழை நார் பட்டுப் புடவை, 'டிரெண்ட்' ஆனது. மாமனார், மாமியார் வழிகாட்டுதலுடன், அதை நெசவு செய்ய ஆரம்பித்தேன்.
தற்போது, டிரெண்டிங்கில் இருக்கும் இது, பல ஆண்டுகளுக்கு முன்பே, 'சின்னாள பட்டு' என்ற பெயரில் வழக்கத்தில் இருக்கிறது. அதே புடவையை வாழை நார் பட்டுப் புடவை என்ற பெயரில் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிட்டாங்க.
கைத்தறி வாயிலாக ஒரு நாளைக்கு ஒரு புடவை தான் நெய்ய முடியும் என்பதால், மிஷின் தறியும் ஆரம்பித்தேன். தறி ஓட்டுறது, பாவு போடுவது, நுால் சுற்றுவது, பேக்கிங் செய்வது என, 20 பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறேன்.
விற்பனையை பொறுத்தவரை சமூக வலைதளங்கள் தான் என் சந்தை. 'வாட்ஸாப்' வாயிலாக, 8,000 வாடிக்கையாளர்கள் புடவைகளை வாங்குகின்றனர்.
வாழை நார் பட்டுப் புடவையை, 1,100 ரூபாய் முதல் விற்பனை செய்கிறேன். ஒவ்வொரு மாதமும், 1,200 புடவைகள் விற்பனையாகின்றன.
தற்போது ஆண்டுக்கு 2 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறேன். உழைக்கணும்; இன்னும் உயரணும்!
தொடர்புக்கு
83443 25917