/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நச்சு காற்றை சுத்தமாக்கும் மாடி தோட்டம்!
/
நச்சு காற்றை சுத்தமாக்கும் மாடி தோட்டம்!
PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

வீட்டைச் சுற்றி, 50க்கும் மேற்பட்ட பழ மரங்கள், மாடித் தோட்டத்தில், 100க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் வளர்த்து வரும், சென்னை மணலியைச் சேர்ந்த ஜம்புலிங்கம்:
எங்கள் வீட்டில் இருந்து கண்ணுக்கெட்டிய துாரத்தில் தான் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையமும், ரசாயன உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.
அங்கிருந்து வெளியேறும் வாயுக்களால், காற்று நச்சுத்தன்மை அடைகிறது. அந்த காற்றை சுவாசித்து தான், நாங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதை சுத்திகரித்து துாய்மைப்படுத்த, எங்கள் வீட்டைச் சுற்றிலும் நிறைய மரங்கள் வளர்த்ததுடன், மாடித் தோட்டமும் அமைத்து, நன்றாக பராமரித்து வருகிறேன்.
எனக்கு பூர்வீகம், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பக்கத்துல உள்ள கொட்டமேடு கிராமம். வேலை நிமித்தமாக, 1970-களில் மணலியில் குடியேறி விட்டேன்.
கம்பெனி பக்கத்திலேயே வீடு இருந்தால் வசதியாக இருக்கும் என்று, இங்கு இடம் வாங்கி வீடு கட்டினோம். அதன்பின் தான், இப்பகுதியில் வீசும் காற்றில், ரசாயன நச்சுத்தன்மை கலந்திருப்பதை உணர முடிந்தது.
இதனால் தான், ஆரம்பத்திலேயே வீட்டைச் சுற்றி தென்னை, பப்பாளி, வாழை என்று பலவிதமான மரங்களை நட்டு வளர்த்து வந்தேன். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், கையில் மீதமிருந்த பணத்தை வைத்து, வேறு ஒரு பகுதியில் மனை வாங்கி, வீடு கட்டியிருக்கலாம்; ஆனால், எனக்கு இங்கிருந்து போக மனமில்லை.
துாய்மையான காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழ, எங்கள் வீட்டை, இயன்ற வரை பசுமையான சூழலுக்கு மாற்ற முடிவெடுத்தேன். வீட்டைச் சுற்றி ஏற்கனவே நிறைய மரம், செடி, கொடிகள் வளர்த்து வருகிறோம். இத்துடன், மாடித் தோட்டமும் அமைத்து, ஏராளமான தாவரங்களை வளர்க்கத் துவங்கினேன்.
எங்கள் வீட்டு காய்கறி கழிவுகள், தோட்டத்தில் விழும் இலை தழைகள் உட்பட, எதையுமே வெளியில் கொட்டுவதில்லை. வீட்டில், 200 லிட்டர் கொள்ளளவு உள்ள டிரம் வைத்திருக்கிறேன். அதில் காய்கறி கழிவுகள், இலை தழைகள் போட்டு மட்க வைத்து, உரமாக்கி, செடிகள் மற்றும் மரங்களுக்கு பயன்படுத்துகிறேன்.
எங்கள் தோட்டத்தில் துத்தி, அம்மான் பச்சரிசி, ஆவாரம் பூ, நித்திய கல்யாணி, கீழாநெல்லி, பீழை, வசம்பு, அருகு, திப்பிலி, ஆடாதொடா, நொச்சி, துளசின்னு 100-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் இருக்கின்றன.
புளிய மரம், மனோரஞ்சிதம், இலந்தை, எலுமிச்சை, கிச்சிலி, மியாசாகி மாம்பழம், பலா, வாழை, மாதுளை, பப்பாளின்னு, 50-க்கும் மேற்பட்ட பழ மரங்களும் இருக்கின்றன.
தொடர்புக்கு:
99627 44275.
**************************
பெண்கள் பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கணும்!
பிளவுஸ்களில், 'ஆரி ஒர்க்' எனப்படும் சித்திர வேலைப்பாடுகளை சிறப்பாக செய்து தரும், சென்னையைச் சேர்ந்த பூர்ணிமா:
நான் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவுடனே திருமணம் செய்து கொண்டதால், பணிக்கு செல்லவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து, வாழ்க்கையின் நெருக்கடிகள் தந்த அழுத்தத்தால், 'பேஷன் டிசைனிங் கோர்ஸ்' படித்தேன்.
கிரியேஷன் தொடர்பான கலை வேலைகளில், சிறுவயது முதலே எனக்கு ரசனை அதிகம். அதன் நீட்சியாகத்தான் இந்த துறையில் கால் பதித்து, விளையாட்டாகவே ஈடுபட்டு வந்தேன். அதுவே, பின்னாளில் என் தொழில் முறையாக மாறிவிடும் என்று நினைக்கவில்லை.
இப்போது என்னிடம், 20 பேர் பணிபுரிகின்றனர். சென்னையில் இரு கிளைகள் உள்ளன. ஆரம்பத்தில் சாதாரண ஜாக்கெட்டுகள் தான் தைத்து கொடுத்தேன்.
கடந்த 12 ஆண்டுகளாகத் தான், 'ஆரி ஒர்க்'கில் ஈடுபடுகிறேன். என் வேலைப்பாடுகளை நன்கு அறிந்தவர்கள், சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் என்னை தேடி வருகின்றனர்.
வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல. துாக்கணாங்குருவி தன் கூட்டை பார்த்து பார்த்து கட்டுவது போல, இந்த நன்மதிப்பை கட்டமைத்துஇருக்கிறேன்.
பெண் சுதந்திரம் என்பது, பொருளாதார சுதந்திரத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். என் விடாமுயற்சியின் வெற்றியாகத்தான் இந்த தொழிலை பார்க்கிறேன்.
நடுத்தர வர்க்கத்தினர் சிலர், 'பார்க்க அழகாக இருக்கணும். எங்களுக்கு கட்டுப்படியாகும் கட்டணத்தில் ஆரி ஒர்க் செய்து தாருங்கள்' என்பர்.
வசதியானவர்களோ, 'விலை மதிப்பற்ற கற்களை பதித்து, உயர்தரமான வகையில் ஜாக்கெட் வேண்டும்' என்பர்.
ஆரி கைவேலைப்பாடில் ஜர்தோஸி, சிகான்கரி, காஷ்மீர் ஒர்க், கண்ணாடி வேலைப்பாடுகள், குந்தன் புரூச் ஒர்க்குகள், தங்க நாணயம், முத்து வைத்த வேலைப்பாடுகள், ராஜஸ்தானி வேலைப்பாடுகள், கோரா ஒர்க், பேட்ச் ஒர்க் என்று பட்டியல் நீளும். அனைத்தையும் நாங்கள் சிறப்பாக செய்து தருகிறோம்.
'வேர்ல்டு ரெக்கார்ட் ஆப் இண்டியா' விருதை ஏழு முறையும், 'இண்டியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்' விருதை மூன்று முறையும் பெற்றுள்ளேன்.
இது தவிர, 'இண்டியன் ஐகான் விருது, ஷேரோ விருது' ஆகியவற்றையும் பெற்றுள்ளேன். 2024-ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு பிசினஸ் எக்ஸலன்ஸ்' விருதை சமீபத்தில் பெற்றதில் மிகவும் மகிழ்கிறேன்.
தொடர்புக்கு: 78258 28282.