தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'குறைந்த லாபமே எங்களுக்கு போதுமானது!' : 'இயற்கை தான் நம்மை காக்கும் முதல் கடவுள்!'

'குறைந்த லாபமே எங்களுக்கு போதுமானது!' : 'இயற்கை தான் நம்மை காக்கும் முதல் கடவுள்!'

'குறைந்த லாபமே எங்களுக்கு போதுமானது!' : 'இயற்கை தான் நம்மை காக்கும் முதல் கடவுள்!'


PUBLISHED ON : ஆக 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஷைன் மகளிர் சுய உதவிக்குழு' அமைப்பின் மூலம் சுயதொழிலில் அசத்தும், திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 43 வயதாகும் ஜெயந்தி:

எங்கள் குழுவில், 12 பெண்கள் பணிபுரிகின்றனர். குளியல் சோப், சத்துமாவு, மசாலா பொருட்கள் என, பல தயாரிப்புகளை விற்பனை செய்கிறோம்.

கொரோனா ஊரடங்கில், எங்கள் கிராமத்தில் உள்ள பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். அதையெல்லாம் பார்த்தபோது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த நேரத்தில், 'சத்துள்ள உணவுகள் சாப்பிடுங்கள்' என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.

நான் சத்துமாவு கஞ்சி தயார் செய்து, எங்க ஊர் மக்களுக்கு இலவசமாக கொடுத்தேன். 'சத்துமாவு கஞ்சி சுவையாக இருக்கிறது; நீங்களே விற்பனை செய்யலாமே' என்று பலரும் ஆலோசனை கூறினர்.

எங்கள் கிராமத்து பெண்கள் ஒரு குழுவாக சேர்ந்தோம். அந்த நேரத்தில் எங்களுக்கு கைகொடுத்தது, மத்திய அரசின் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம். இந்த திட்டத்தில், வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம்.

அந்த நிதியில் சோப் தயாரிக்கும் இயந்திரம், சத்துமாவு கலவை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கினோம். வரவு - செலவுகளை பொறுப்புடன் பார்த்துக் கொண்டோம்; தெளிவான திட்டமிடலால், இரண்டே ஆண்டுகளில் கடனை முழுதாக திருப்பி செலுத்தினோம்.

மூலப்பொருட்கள் தேர்வு, தயாரிப்பு, தர பரிசோதனை, விற்பனை என அனைவரும் சேர்ந்து செயல்படுகிறோம். தினசரி உற்பத்தியை பொறுத்து, ஏழு பேர் வரை வேலைக்கு வருவர். எங்கள் தொழில் வளர்வது மட்டுமல்லாமல், கிராமப்புற மக்களுக்கும் வருமான வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி.

பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள் என பெரிய, 'ஆர்டர்'கள் கிடைப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்கு விபரம் தெரிந்தவர்களும், படித்தவர்களும் நம் பொருட்களை வாங்குகின்றனர் எனில், அதற்கு தரம் தான் முக்கிய காரணம். இதனால், எங்கள் தயாரிப்புகளில் தரத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

மாதம், 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது; அனைத்து செலவுகளும் போக, 30,000 ரூபாய் லாபம் வருகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப்பை, 40 ரூபாய்க்கு தான் விற்பனை செய்கிறோம். ஒரு சோப்பில், 5 ரூபாய் லாபம் கிடைத்தால் போதும்.

இயற்கையான பொருட்களை சாதாரண மக்களும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம். எங்கள் தயாரிப்புகளை, தமிழகம் முழுதும் கொண்டு சேர்ப்பதே எங்கள் கனவு!

தொடர்புக்கு: 99431 14264.



'இயற்கை தான் நம்மை காக்கும் முதல் கடவுள்!'


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தில், குறுங்காட்டை உருவாக்கி வரும், 37 வயதாகும் மீனா அன்புநிதி:

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை தான். ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்ததும் திருமணமானது. கணவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்; அவர், மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.

கொரோனா ஊரடங்கில், மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு, உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. அப்போது தினமும், 200 பேருக்கு மூன்று வேளை என, 75 நாட்கள் இலவசமாக உணவு கொடுத்தோம்.

சாப்பிட்டவர்களின், 'ரொம்ப நன்றிங்க' என்ற குரல்களால், எங்கள் வாழ்வுக்கே ஒரு அர்த்தம் கிடைத்தது போல் உணர்ந்தோம். அந்த அனுபவத்திற்கு பின், சேவை எண்ணம் அதிகமானது.

கடந்த 2023ல் மீனாட்சி அம்மன் கோவிலில், அறங்காவலர் குழு உறுப்பினராக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சாதாரண பெண்ணான எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கிடைத்தபோது, அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்.

நிறைய கோவில் நிலங்கள் தரிசாகவும், பயன்பாடின்றி இருப்பதும் தெரியவந்தது. மதுரை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள, 164 ஏக்கர் மீனாட்சி அம்மன் கோவில் நிலத்திலும், சீமை கருவேல மரங்கள் முளைத்திருந்தன.

அங்கு பூச்செடிகள், பழ மரக்கன்றுகளை நடவு செய்தால், அவை வளர்ந்து, கோவில் தேவைக்கு பயன்படும் என்பதுடன், மீதியை விற்பனை செய்வதன் வாயிலாக கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்று தோன்றியது.

நானும், கணவரும் அறநிலையத் துறையிடம் பேசி அனுமதி வாங்கினோம். முதற்கட்டமாக, 65 ஏக்கர் நிலத்தை ஆறு மாதங்களில் சீர் செய்தோம். அதன்பின், மீனாட்சி அம்மனுக்கு உகந்த கடம்பம், சரக்கொன்றை, மனோரஞ்சிதம், மகிழம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்தோம்.

கூடவே தென்னை, நெல்லி உள்ளிட்ட 7,000 மரக்கன்றுகளை நடவு செய்தோம். கிணற்று பாசனம் அமைத்து, ஒவ்வொரு மரக்கன்றுக்கும் சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் கிடைக்கச் செய்தோம். அவற்றை கவனித்துக் கொள்ள, இரு பணியாளர்களையும் நியமித்தோம்.

இவை ஓங்கி வளர்ந்து மரங்களாகும்போது, இவற்றின் மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைக்கும். இயற்கை தான், நம்மை காக்கும் முதல் கடவுள். சக மனிதர்களுக்கும், பூமிக்கும் நம்மால் முடிந்தவற்றை செய்வதே, இறைவனை அடையும் வழி தான்.

தமிழகம் முழுக்க கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளம் உள்ளன; பெரும்பாலும் அவை தரிசாகவே கிடக்கின்றன. அவற்றையும் குறுங்காடுகளாக மாற்றினால், மிகப்பெரிய பசுமை குடையை உருவாக்க முடியும்.

தொடர்புக்கு:

98943 77758

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us