தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'உணவு உற்பத்திக்கு உத்தரவாதம் தரும் வேளாண் பாடம்!'

'உணவு உற்பத்திக்கு உத்தரவாதம் தரும் வேளாண் பாடம்!'

'உணவு உற்பத்திக்கு உத்தரவாதம் தரும் வேளாண் பாடம்!'


PUBLISHED ON : ஜூலை 20, 2026 10:50 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2026 10:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இயற்கை ஆய்வகம்' எனும் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும், புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயக்குநர் சுதர்சன் ராமச்சந்திரன்:

இளம் பருவத்திலேயே உணவு உற்பத்தி குறித்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தி விட்டால், விவசாயம் மீது ஈடுபாடு ஏற்பட்டு, நாளடைவில் அது படிப்படியாக வளர்ச்சி அடையும். எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும், பகுதி நேரமாக விவசாயத்தில் ஈடுபட முயற்சி செய்வர்.

இந்த எண்ணத்தில் பிறந்தது தான், இயற்கை ஆய்வகம். இது ஒரு பாடத் திட்டம் மட்டுமல்ல; ஒரு புதிய கல்வி திசை. ஐந்தாம் வகுப்பு வரை இதற்கென தனிப் பாடத் திட்டத்தை உருவாக்கி உள்ளோம்.

எங்கள் பள்ளியில் பசுமையான மரத்தடியில் நிழற்குடை அமைத்து, இயற்கையான சூழலில் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த அடிப்படைப் பாடம் கற்பிக்கப்படுகிறது. சுய சார்புடன் வாழ, இது உறுதுணையாக இருக்கும். உணவுப் பொருள் உற்பத்தி குறைந்தாலோ, விவசாயத்தைக் கைவிட்டாலோ, எதிர்கால தலைமுறையினரின் நிலை என்னவாகும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

எங்கள் பள்ளியில் 2,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை ஆய்வகத்தில் பலவித பயிர்களும், பலவகை மரங்களும் செழிப்பாக வளர்ந்துள்ளன.

* இயற்கை ஆய்வகம் பாடத் திட்ட பணியில் இணைந்து செயல்படும், 'விதைக்கலாம்' என்ற அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான மலையப்பன்:

இந்த இயற்கை ஆய்வகத்தில், மாணவர்கள் இயற்கை முறையில் மண்ணை வளப்படுத்துதல், விதைப்பு, நடவு, களையெடுப்பு, உரமிடுதல் உள்ளிட்ட அனைத்தையும் ஆறு மாத களப் பயிற்சியில் துல்லியமாக கற்றுக் கொள்வர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவர்களின் வீட்டுச் சூழலுக்கேற்ற செடிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.



* சுற்றுச்சூழல் ஆர்வலரும், 'கைபா' அமைப்பின் பொருளாளருமான தங்க.கண்ணன்: இயற்கை ஆய்வகத்தில் உருவாக்கப்படும் ஒவ்வொரு மரத்திலும், 'க்யூ.ஆர்., கோடு' எனப்படும் அட்டை பொருத்தப்பட வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் பரிந்துரை செய்துள்ளேன். மாணவர்கள் அதை, 'ஸ்கேன்' செய்தால், மரத்தின் பெயர், சிறப்புகள், அதன் பலன்கள் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பமும், இயற்கையும் இணையும்போது, மாணவர்களின் ஆர்வம் இன்னும் அதிகரிக்கும். வகுப்பறை பாடங்கள் அறிவை தரலாம். ஆனால், வேளாண்மை பாடங்கள் எதிர்கால உணவு உற்பத்திக்கு உத்தரவாதம் அளிக்கும்!

தொடர்புக்கு: சுதர்சன் ராமச்சந்திரன் - 85088 14007.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us