/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மதிப்புமிக்க வாழ்வை உணர வைப்பதே கலை!
/
மதிப்புமிக்க வாழ்வை உணர வைப்பதே கலை!
PUBLISHED ON : டிச 04, 2024 12:00 AM

முகமறியா மனிதர்களின் கதைகளை கேட்டு, அவற்றை கவிதை, பாடல், சிறுகதையாக வடித்து தரும், 'மெட்ராஸ் பஸ்கிங்' நிறுவனர் நிரோஷா சண்முகம்:
நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னை தான். மருத்துவம் படிக்க சென்ற பெங்களூரில் தான் எனக்கு, 'பஸ்கிங்' அறிமுகமானது.
ஐரோப்பிய கலாசாரமான பஸ்கிங்கை செய்யும் கலைஞர்களுக்கு காலம், நேரம், இடம் ஒரு பொருட்டே இல்லை. எழுத வேண்டும் என தோன்றினால், டைப்ரைட்டரை துாக்கிக் கொண்டு வீதிக்கு சென்று விடுவர்.
முகமறியா மனிதர்களின் கதையை கேட்டு ஒரு கவிதையோ, பாடலோ, சிறுகதையோ, ஓவியமோ, இசையோ அவர்களுக்கு தந்து மகிழ்வர்.
பூங்கா, சாலை, நுாலகம் என எங்கெல்லாம் கதைகேட்டு கவிபாட முடியுமோ, அங்கெல்லாம் டைப்ரைட்டரை துாக்கி செல்வேன். இப்படித்தான் என் பஸ்கிங் பயணம் துவங்கியது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பெங்களூரில் பஸ்கிங் செய்த நான், அதை சென்னைக்கும் கொண்டுவர முடிவு செய்து, தமிழில் கவிதை, கடிதம் எழுதுவோர், ஓவியம் வரைவோரை வைத்து ஒரு அணியை உருவாக்க முயன்றேன்.
இதற்குள் வர, கலைஞர்களாக இருப்பதை விட, நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்; ஏனெனில் நாங்கள் செய்வது கலை என்பதை தாண்டி, ஒருவரின் நம்பிக்கைக்கு அருகில் இருக்கும் செயல். அதனால், உணர்வுகளை புரிந்துகொள்வோரை மட்டும் அணியில் சேர்த்தோம்.
முதல் நிகழ்வு, மெட்ராஸ் தினத்தில் வெற்றிகரமாக நடந்தது. எங்கள் நிகழ்வுகளை ஒரு முடிவில்லா நாவலாக கருதும் நாங்கள், அதற்கு, 'அத்தியாயம்' என்று பெயரிட்டோம். இதுவரை நான்கு அத்தியாயங்கள் முடிந்துள்ளன.
முதல் அத்தியாயத்தில், 30 டைப்ரைட்டர்கள் பயன்படுத்தினோம். அடுத்து ஒரு பத்திரிகை அலுவலகம், கபே, பிரெஞ்ச் கலாசார மையம் என நான்கு இடங்களில் நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒவ்வொன்றிலும் நுாற்றுக்கணக்கான கதைகளும், கவிதைகளும், ஓவியங்களும் உருவாகியிருக்கின்றன.
ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தான் கலையாக பார்க்கிறேன். சக மனிதர்களின் பிரச்னையை காது கொடுத்து கேட்பது தானே அன்பின் துவக்கம். இப்போது, ஒருவருக்கொருவர் பேசும் சூழலே குறைந்து வருகிறது.
இதற்கு, அவசரமான வாழ்க்கை சூழல் காரணமாக இருந்தாலும், அவர்களை நிறுத்தி ஒரு உரையாடலை நிகழ்த்துகிறோம். பங்கேற்பாளர்கள் தங்களை வெளிப்படுத்துகின்றனர்.
பின், அது கலையாக உருவெடுத்து, நினைவு பொருளாக மாறுகிறது. சுருக்கமாக சொன்னால், அவர்களின் வாழ்வு மதிப்புமிக்கது என்பதை உணர வைப்பது தான் எங்கள் கலை.