/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஆரம்பித்தபோது இருந்ததை விட பிசினசில் நல்ல முன்னேற்றம்!
/
ஆரம்பித்தபோது இருந்ததை விட பிசினசில் நல்ல முன்னேற்றம்!
ஆரம்பித்தபோது இருந்ததை விட பிசினசில் நல்ல முன்னேற்றம்!
ஆரம்பித்தபோது இருந்ததை விட பிசினசில் நல்ல முன்னேற்றம்!
PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM

'மாத்தி யோசி' பிசினஸ் முயற்சியை கையிலெடுத்து, அதில் வெற்றி பெறும் முனைப்புடன் முன்னேறி கொண்டிருக்கும், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த லாவண்யா:
என் மாமியார் உமாவதி, டெய்லரிங் டிப்ளமா முடிச்சி, தாம்பரத்தில் டெய்லரிங் இன்ஸ்டிடியூட் வெச்சிருக்காங்க. அவங்ககிட்ட தான் டெய்லரிங் கற்றுக் கொண்டேன். அதன்பின், 'பேஷன் டிசைனிங்' சம்பந்தமாக ஆன்லைனில் இரண்டு பயிற்சிகளை முடித்தேன்.
'ஸ்டிச் கார்ட்' என்ற வெப்சைட் துவங்கி, அதன் வாயிலாக, ஆர்டர்ஸ் எடுக்கிறோம். குரோம்பேட்டையில் டெய்லரிங் யூனிட்டும் வெச்சிருக்கேன்.
வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுக்கப் போற இடத்திலேயே, நிறைய ஆர்டர்கள் கிடைப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தோன்றியது தான், 'கேரவன்' திட்டம். அதற்காக, எங்கள் சேமிப்பு பணத்தை வைத்து ஒரு வண்டியை வாங்கினோம்.
அளவெடுக்க, 'பிட்' சரியாக உள்ளதா என்று பரிசோதிக்க, கேரவனுக்குள்ளயே இடம் தயார் செய்துள்ளோம். இந்த கேரவனை தயார் செய்ய, 25 லட்சம் ரூபாய் செலவானது.
பெண்களுக்கான எல்லாவிதமான ஆடைகளையும் தைத்துக் கொடுக்கிறோம். குறைந்தது, 300 வீடுகள் இருக்குற மாதிரியான அபார்ட்மென்ட், 'கேட்டடு கம்யூனிட்டீஸ், வில்லா'க்களுக்குத் தான் செல்கிறோம்.
என்னென்ன ஆடைகள் தைக்கிறோம், இதற்கு முன் தைத்துக் கொடுத்த போட்டோக்கள், கட்டணம் குறித்த விபரங்கள் என அனைத்தையும், ஒரு வாரத்திற்கு முன்பே அபார்ட்மென்ட்டில் உள்ள ஒருவருக்கு, 'ஷேர்' செய்து, அதை, அபார்ட்மென்ட்டில் இருக்கும் நண்பர்கள் மற்றும் பெண்கள், 'வாட்ஸாப் குரூப்'பில் பகிரச் சொல்வோம்.
அப்பாயின்ட்மென்ட் கொடுத்த தேதிக்கு, கேரவனோடு சென்று விடுவோம். வாடிக்கையாளர்கள் கேரவனுக்கே வந்து ஆர்டர் கொடுப்பர். டெலிவரி பண்ணும்போதும், கேரவனை எடுத்துச் செல்வோம்; 'ஆல்ட்ரேஷன்' இருந்தால், அங்கேயே உடனடியாக சரி செய்து தந்து விடுவோம்.
தற்போது, கேரவன் வாயிலாக மட்டுமே வாரத்துக்கு சராசரியாக 40 ஆர்டர்கள் வரை வருது. பிசினஸ் ஆரம்பித்தபோது இருந்ததைவிட தற்போது நல்ல முன்னேற்றம் உள்ளது.
'கேரவன் கான்செப்ட் வேலைக்கு ஆகாது' என, பலர் கூறினர். ஆனால், அதெல்லாம் என் நம்பிக்கையை உடைக்கவில்லை. எப்படியும் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி தான் மனதில் இருந்தது. என் குடும்பத்தின் ஆதரவு இருக்கும்வரை, டாப் கியரில் சென்று கொண்டே இருப்பேன். தொடர்புக்கு: 72001 68295.
*********************
முதுமையையும் இனிமையானதாக மாற்ற முடியும்!
'பிசியோதெரபி' துறையில், 18 ஆண்டு களாகவும், அறிவாற்றல் நடத்தை சிகிச்சையில் சிறப்பு நிபுணராகவும் உள்ள சென்னையை சேர்ந்த கோகிலா விஜயன்:முதுமை என்றதும், அது ஒரு நோய் என்றே நினைப்பவர்கள் பலருண்டு. ஆனால், அது நோய் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், அந்த பருவத்தில் சில நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதே உண்மை. பொதுவாக, வயதானவர்களுக்கு வரும் நோய்களை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.அந்த நிலையில், முதியோருக்கு சிகிச்சை தருவதும் ரொம்ப கஷ்டமான விஷயம். ஒரு நோய்க்கு மருந்து கொடுத்தோம் என்றால், அது பக்க விளைவுகளை ஏற்படுத்தி, வேறு ஒரு நோய்க்கு காரணமாகி விடும்.அதனால் நோய் வந்த பின் மருந்து சாப்பிடுவதை விட, நோய் வராமல் தடுப்பது தான் புத்திசாலித்தனம். இதற்கு, 'ப்ரிவென்டிவ் ஜெரியாட்ரிக்ஸ்' என்று பெயர்.ஓய்வு காலத்தில் நேரம் இருக்கிறது என்பதற்காக நடைப்பயற்சி, உடற்பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக கவனம் செலுத்துகிறோம். அது, நம் உடலுக்கு தேவையான ஆற்றலை
ஓரளவுக்கு தான் தரும்.
சிறுவயது முதலே உடற்பயிற்சி செய்து வருபவர்களுக்கும், முதுமை நிலையை அடைந்தபின் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.
சிறு வயது முதல் முறையான உடற்பயிற்சி செய்பவர்கள், '70 இயர்ஸ் யங்' என்று தான் சொல்வர்; 'ஓல்டு' என்று சொல்ல மாட்டார்கள்.
முதியோரை பொறுத்தவரை, ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்ய பழகிக் கொள்ளலாம். மூச்சுப் பயிற்சி, யோகா, சைக்கிளிங் என்று எது வேண்டு மானாலும் செய்யலாம். குறைந்தபட்சம் தினமும் நடக்க வேண்டும்; இதனால் எடை குறையும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் எல்லாம் கட்டுப்படும். எலும்புகள் வலுவாகும்.
இது, வயதானவர்களுக்கு சொல்லப்படும் சாதாரணமான விஷயமாக இருந்தாலும், இள வயதிலேயே உடம்பை சரியாக பராமரித்து இருந்தால், இந்த பிரச்னைகள் சீக்கிரத்தில் தாக்காது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். படிப்பு, வேலை, திருமணம், குடும்பம் என்று அவசரமாக ஓடிக் கொண்டிருப்பவர்கள், 40 வயதை கடந்த பிறகாவது, முதுமை பருவத்துக்கான ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.அப்படி செய்தால் முதுமையையும், மற்ற பருவங்களை போல், இனிமையானதாக மாற்றும் வித்தை நம்மிடம் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்.
**********