தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ விறகு அடுப்பால் ருசிக்கும் காரக்கறி வறுவல்!

 விறகு அடுப்பால் ருசிக்கும் காரக்கறி வறுவல்!

 விறகு அடுப்பால் ருசிக்கும் காரக்கறி வறுவல்!


PUBLISHED ON : பிப் 04, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில், 'ஆயா கடை' என்ற உணவகத்தை நடத்தி வரும் பழனியம்மாள்: கணவருக்கு என் சமையல் மிகவும் பிடிக்கும். 'உனக்கு நல்ல கைப்பக்குவம் இருக்கிறது; நான்கு பேருக்கு சமையல் செய்து போடு.

உன் வேலைக்கு நியாயமான காசு வாங்கிக் கொள்' என்று கூறியபடியே இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், அவர் இறந்து விட்டார். அவர் இறப்புக்கு பின், அவர் கூறியபடி சாப்பாட்டுக் கடை ஆரம்பித்தேன்.

முதலில், குடிசையில் சின்ன கடையாகத் தான் வைத்திருந்தேன்; வாடிக்கையாளர்கள் அதிகரிக்கவே, கடையை வாடகைக்கு எடுத்து சமைக்க ஆரம்பித்தேன்.

ஆரம்ப காலத்திலும் சரி, இப்போதும் சரி, சம்பாதிக்கிற வேலை என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. என் உழைப்புக்கு தகுந்த கூலி எனக்கு வருகிறதா என்று தான் பார்க்கிறேன்.

மற்றவர்களுக்கு சோறு போடும் புண்ணியமான தொழில் இது. என் கணவர் சொல்லிட்டு போன மாதிரி, இதில் கணக்கு பார்த்து வேலை செய்தால் உடம்பில் ஒட்டாது.

வியாபார நோக்கில் எதுவும் செய்வது இல்லை. வீட்டில் நம் குழந்தைகளுக்கு எப்படி செய்து போடுவோமோ, அதே மாதிரி தான் இங்கும் செய்கிறேன்.

கடைகளில் விற்பனையாகும் கண்ட கண்ட மசாலாக்களை பயன்படுத்துவதோ, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதோ இல்லை.

நம்மை நம்பி வந்து சாப்பிடுவோர் குழந்தையாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும், அவர்கள் உடல்நலத்திற்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. எனக்கு அதுதான் முக்கியமான கவலை.

காய்ந்த மிளகாயை கொளப்புதுாரில் இருந்தும், சின்ன வெங்காயத்தை பெருந்துறையில் இருந்தும் வாங்கி வருகிறேன். எண்ணெய் எல்லாம், செக்கில் ஆட்டுற இடத்தில் வாங்கி வருகிறேன். இதில், எந்த பொருள் தரம் குறைந்து இருந்தாலும், தொட்டுக்கூட பார்க்க மாட்டேன்.

என் கடையின் காரக்கறிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். ஆட்டுக்கறியில் செய்யும் காரக்கறி வறுவலுக்கு சின்ன வெங்காயம் தான் முக்கியம்.

எந்தளவுக்கு சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்கிறோமோ, அந்தளவுக்கு ருசியாகவும் இருக்கும்; உடம்புக்கும் நல்லது. காய்ந்த மிளகாயைக் கூட நன்கு இடித்து, அதில் இருக்குற விதைகள் முழுதையும் எடுத்து விடுவேன். அப்போது தான் கறி ருசியாக இருக்கும்.

அதேபோன்று, விறகு அடுப்பில் சமையல் செய்வதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்னு நினைக்குறேன். விறகு அடுப்பில் தான் சரியான முறையில் கறி வேகும்; கறியிலும் ருசி ஏறும். கடையில், சாதம் கூட இன்னும் பழைய மாதிரி வடித்து தான் சமைக்கிறேன்.

அந்த வடிசோறும் ருசிக்கு காரணமாக இருக்கும். அதனால் தான், கறி சோறு சாப்பிட, நம் கடைக்கு ஏராளமானோர் வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us