/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பணம் சம்பாதிக்க கிரிக்கெட்டை நோக்கி வராதீங்க!
/
பணம் சம்பாதிக்க கிரிக்கெட்டை நோக்கி வராதீங்க!
PUBLISHED ON : நவ 26, 2025 12:00 AM

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் சாந்தா ரங்கசாமி:
என் அப்பாவின் பூர்வீகம் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம். நாங்கள் ஏழு பெண் குழந்தைகள். ஏழு பேரையும் பாகு பாடு பார்க்காமல் வளர்த்தனர்.
என் அம்மா அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி., படித்தவர்; தொலைநோக்கு சிந்தனை உடையவர். பள்ளி விடுமுறை நாட்களில், குழுவாக கிரிக்கெட் விளையாடுவோம்.
ஜெயித்தால் பென்சில், ரப்பர், பேனா பரிசாக கிடைக்கும். அப்படித் தான் கிரிக்கெட் விளையாடத் துவங்கினேன். அப்பா, 43 வயதில் மாரடைப்பால் இறந்து விட்டார். அம்மா தனியாளாக எங்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்.
கடந்த 1973ம் ஆண்டு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உருவானது. எல்லாவற்றையும் விட்டு விட்டு, முழு கவனத்தையும் கிரிக்கெட் மீது செலுத்த ஆரம்பித்தேன். கர்நாடக மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை ஏற்றேன். சர்வதேச கூட்டுத்தொடர் போட்டிகளில், 'அனைத்து திறமைகளும் படைத்தவர்' என்ற விருது கிடைத்தது.
கடந்த 1974ல் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் பேட்டியில், 'தொடரின் சிறந்த ஆட்டக்காரர்' பட்டம் வென்றேன். 1976ல் இருந்து 1991ம் ஆண்டு வரை, இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினேன். 1976ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிக்கு தலைமை ஏற்றதை பெருமையாக நினைக்கிறேன்.
அப்போதெல்லாம், போட்டிகளில் விளையாட ஒரு ரூபாய் கூட கிடையாது.
ஆனாலும், வெற்றியை கொடுத்தே ஆகணும் என தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டி, ஐந்து நாள் போட்டி என முழு அர்ப்பணிப்போடு விளையாடினோம். அன்றைக்கு அடித்தளத்தை பலமாக அமைத்தோம். அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது நமக்கு கிடைத்த மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வெற்றியை பார்க்கிறேன்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து 16 ஆண்டுகள் விளையாடி, பல வெற்றிகளை குவித்த முதல் தமிழ் பெண் நான் தான். நாங்கள் யாருமே பணத்திற்காக விளையாடவில்லை; இந்திய அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருந்தது.
மகளிர் கிரிக்கெட் இந்திய அணிக்காக முதல் சதம்... முதல் தொடர் வெற்றிக்காக அர்ஜுனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என, பல சாதனைகளுக்கு சொந்தக்காரியானேன்.
பணம் சம்பாதிக்க கிரிக்கெட்டை நோக்கி வராதீங்க... சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் கிரிக்கெட் விளையாட வாங்க. நீங்க எந்த அளவுக்கு கிரிக்கெட்டை நேசிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அது உங்களை உயரத்துக்கு கொண்டு போய் நிறுத்தும்!

