/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பெண்களின் கஷ்டத்தை உடைக்கும் கருவிகள் கல்வி, வேலை தான்!
/
பெண்களின் கஷ்டத்தை உடைக்கும் கருவிகள் கல்வி, வேலை தான்!
பெண்களின் கஷ்டத்தை உடைக்கும் கருவிகள் கல்வி, வேலை தான்!
பெண்களின் கஷ்டத்தை உடைக்கும் கருவிகள் கல்வி, வேலை தான்!
PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM

கணவரை இழந்து, கல்வியின் உதவியால் வறுமையை ஜெயித்த கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் வசிக்கும் வினோதினி: என் அப்பா, கொத்தனார் வேலைக்கும், அம்மா விவசாய கூலி வேலைக்கும் போவாங்க. அக்கா, நான், தங்கை, தம்பின்னு ஆறு பேருக்கும் சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழல்.
பெரும்பாலும் காலையில் சாப்பிட ஒண்ணும் இருக்காது. மதியம் சத்துணவுக்காகவே எங்களை பள்ளிக்கு அனுப்பினர்.
நான் ரொம்ப சூப்பரா எல்லாம் படிக்க மாட்டேன். ஒருவழியா பிளஸ் 2 முடித்தபோது, ரொம்ப பெருமையா, சந்தோஷமா இருந்தது.
ஆனால், படிப்பு முடித்தவுடனேயே, எனக்கு திருமணமாகியது. கணவர், நான்கு ஆண்டுகள் நன்றாக பார்த்துக் கொண்டார்.
ஆனால், 2012-ல் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்து விட்டார். 22 வயதில் கணவரை இழந்து, கைக்குழந்தையுடன் நின்ற காலம் கொடூரமானது என்றாலும், எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் எனக்குள் வந்தது.
அப்பா வீடு இருந்த வறுமையில், அங்கு போய் உட்கார முடியவில்லை. மாமியார் வீட்டில் என்னை நடத்திய விதத்தை கூற விரும்பவில்லை.
என்னையும், என் மகளையும் காப்பாற்றிக் கொள்ள, எனக்கு ஒரு வேலை தேவைப்பட்டது; கிடைக்கிற வேலைகளை செய்தேன். பிளஸ் 2 கல்வி தகுதிக்குட்பட்ட அரசு பணி, வங்கி பணி தேர்வுகளை எழுதினேன்.
ஒரு வழியாக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பியூன் வேலை கிடைத்தபோது, வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை கிடைத்தது.
என்னோட முதல் போஸ்டிங் ஈரோட்டில்... ஆனால், குழந்தையை பார்த்துக் கொள்ள யாருமில்லாத சூழல். நான் வேலை பார்த்த வங்கிக்கு எதிரில் இருந்த டீக்கடையில் குழந்தையை கொடுத்து விட்டு வேலைக்கு செல்வேன்.
மகளை பள்ளிக்கு சேர்க்கும் வயது வந்தபோது, தனியார் பள்ளியில் சேர்த்தேன். அதே சமயம், நானும் தபால் வழியில் இளங்கலை தமிழ் படித்து, எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆனேன்.
அடுத்து தேர்வு எழுதி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளர்க் வேலையில் சேர்ந்தேன். தற்போது என் மகள், 10ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள்.
சின்னதாக சொந்த வீடு கட்டியிருக்கேன். சமீபத்தில் தான் காரும், நகைகளும் வாங்கியிருக்கிறேன். இன்சூரன்ஸ் போட்டிருக்கேன். மகளின் எதிர்கால படிப்புக்கு பணம் சேர்த்து வருகிறேன். என் பெற்றோரின் தேவைகளையும் பார்த்துக் கொள்கிறேன்.
இங்கு, பெரும்பாலான பெண்களோட கஷ்டங்களை உடைக்கிற கருவிகள், கல்வியும், வேலையும் தான்.
எத்தனையோ பொண்ணுங்க படிக்கவும், வேலைக்கு போகவும் போராட்டங்கள் நடத்திட்டு இருக்கும்போது, படித்து விட்டு வீட்டில் இருப்பதும், பார்த்துக் கொண்டு இருக்கிற வேலையை விடுவதும், நமக்கு நாமே உருவாக்கி கொள்ளும் தடைகள். அது வேண்டாம்! -