/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
முயற்சி உங்கள் அடையாளத்தை மாற்றும்!
/
முயற்சி உங்கள் அடையாளத்தை மாற்றும்!
PUBLISHED ON : டிச 05, 2025 03:43 AM

திருப்பூர் மாவட்டம், பெரிச்சிபாளையத்தில் இயங்கும், 'அஷ்டா பொட்டிக்' என்ற துணிக்கடையின் உரிமையாளர் நந்தினி: படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு போகணும் என்றால், உலகத்தில் பாதி பேர், வேலையின்றி தான் இருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்க விரும்பியே, பி.எஸ்சி., - ஐ.டி., படித்தேன். ஆனால், படிப்பை முடிக்கும் போது, 'பொட்டிக்' எனும் பிரத்யேக துணிக்கடை ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது.
'பொட்டிக்' ஆரம்பிக்க போவதாக பெற்றோரிடம் கூறியதும், 'அதெல்லாம் வேண்டாம்' என, அறிவுரை கூறினர். ஆனால், 'பொட்டிக்' ஆரம்பித்தால், வெற்றி அடைவேன் என தோன்றவே, 2011ல், சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில், எங்கள் ஊரிலேயே கடையை துவக்கினேன்.
ஆரம்பத்தில் துணிகளை வெட்டுவது, தைப்பது, வினியோகம் எல்லாமே, நான் தான் செய்வேன்.
துணிகள் தைக்க வந்த வாடிக்கையாளர்கள், என்னுடைய வடிவமைப்பு வேலைப்பாடுகளை பார்த்து, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுக்காக, என்னை தேடி வர ஆரம்பித்தனர்.
திருமணத்திற்கு பின், கணவரும் உறுதுணையாக இருந்ததால், வியாபாரத்தை சிறிது விரிவாக்கி, சிலரை வேலைக்கும் சேர்த்து கொண்டேன். திருப்பூர், கோவையில் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆனால், தமிழகம் முழுக்க தெரிய வேண்டும் என்பதற்காக, சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் செய்தோம்.
இதன் வாயிலாக காஞ்சிபுரம், கடலுார், திண்டுக்கல், மதுரை மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். 15 ஆண்டு உழைப்பை திரும்பி பார்க்கும் போது, கொஞ்சம் பிரமிப்பாகத் தான் உள்ளது. இப்போது, வெற்றிகரமான தொழில் முனை வோராகி இருக்கிறேன்.
தற்போது, என் நிறுவனத்தில், 20 பேர் வேலை செய்கின்றனர். ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. ஒருவேளை, புதிய முயற்சி எடுக்க தயங்கி, எனக்கு பிடித்த வேலையை செய்யாமல் போயிருந்தால், இன்று இந்த வெற்றியும், இவ்வளவு வருமானமும் சாத்தியமில்லை.
எனவே, முயற்சி செய்தபடியே இருந்தால், நிச்சயம் உங்கள் அடையாளம் மாறும்.

