/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மூர்க்கமான குதிரைகளும் பழகினால் கட்டுப்படும்!
/
மூர்க்கமான குதிரைகளும் பழகினால் கட்டுப்படும்!
PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM

'சூர்யா குதிரை வளர்ப்பு கலைக்கூடம்' என்ற பெயரில், குதிரை வளர்ப்பு, விற்பனையில் ஈடுபட்டு வரும், திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன்:
நாட்டு ரக குதிரைகளை வளர்ப்பதிலும், அதை பரவலாக்கம் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்காகத் தான் வங்கி மேலாளர் பணியையே ராஜினாமா செய்தேன்.
கடந்த 2015ல், கதியாவாரி ரகத்தைச் சேர்ந்த ஒரு குதிரையை வாங்கி, வளர்ப்பு முறை பற்றி தெரிந்து கொண்டேன். சொந்த முயற்சியிலேயே குதிரை ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
அடுத்த சில நாட்களில் எங்கள் பகுதி இளைஞர்களுக்கு குதிரை சவாரி பயிற்சி கொடுக்க துவங்கினேன்.
குதிரை சவாரி மற்றும் வளர்ப்பு முறை பயிற்சி அளிக்க ஒரு நபருக்கு, 5,000 ரூபாய் கட்டணம் வாங்குகிறேன்; இதில் மாதம், 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
குதிரையை திருமண நிகழ்ச்சிகளுக்கும் அனுப்பியதில், அதன் வாயிலாகவும் வருமானம் கிடைக்க துவங்கியது.
இந்தியாவைச் சேர்ந்த பல வகையான நாட்டு ரக குதிரைகள் வாங்கி வளர்க்கணும் என்ற ஆர்வம் அதிகரித்ததால், அவற்றை வாங்கி இங்கு விற்பனை செய்ய துவங்கினேன்.
ஒரு குட்டி குதிரை, 70,000 ரூபாய்க்கும், பெரிய குதிரை 1.25 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன்.
ஒரு மாதத்திற்கு சராசரியாக மூன்று பெரிய குதிரைகளும், நான்கு குட்டி குதிரை களும் விற்பனை செய்வதன் வாயிலாக, 50,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
இதுதவிர பெண் குதிரைகள் இரண்டு இருக்கு. இவற்றில் ஏதாவது ஒரு குதிரை வாயிலாக தினமும் 1 லிட்டர் பால் கிடைக்கிறது. 100 மி.லி., பால், 250 ரூபாய் என, விற்பனை செய்கிறோம். இதில், ஒரு மாதத்திற்கு, 56,250 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
குதிரை ரோமங்கள், நகங்கள், லாடங்கள் விற்பனை என, பல வழிகளிலும், ஒரு மாதத்திற்கு, 1.61 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. தீவனம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் போக, 1 லட்சம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.
குதிரை வளர்க்கணும் என ஆசைப்படக் கூடியவர்கள், சில காரணங்களால தயங்குகின்றனர்... குதிரை மூர்க்கமாக இருக்கும், கடிக்கும், உதைக்கும் என பொதுவான பேச்சு இருக்கு.
எல்லா குதிரைகளும் அப்படியிருக்காது. சாந்தமான, சொன்னா கேட்கக்கூடிய சமத்தான குதிரைகளும் இருக்கு.
அவை மாதிரியான குதிரைகளை பார்த்து வாங்கி வளர்க்கலாம். மூர்க்கமான குதிரைகள் வாங்கினாலும் கூட, பயப்பட வேண்டியதில்லை; பழகி விட்டால் நமக்கு கட்டுப்படும்.
தொடர்புக்கு:
95008 77344