'ஒவ்வொருவரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்!'
'ஒவ்வொருவரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்!'
PUBLISHED ON : ஜூலை 09, 2026 12:00 AM

இரண்டு முறை இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் இந்திய பெண்ணான, பெங்களூரை சேர்ந்த ரீனா ராஜு:
'பெண்களுக்கு விளையாட்டு எல்லாம் சரியாக வராது' என்று பலரும் கூறிய காலத்தில், நான் ஹாக்கி விளையாட ஆசைப்பட்டேன்; ஆனால், அது நடக்கவில்லை. இதனால், மனோதத்துவம் படித்தேன்.
கடந்த 2006ல் திடீரென காய்ச்சல் வந்தது. சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. ஒரு மாதம் கழித்து, 'உங்கள் இதயம், 15 சதவீதம் தான் இயங்குகிறது. அதனால் பிழைக்க வாய்ப்பில்லை' என்று மருத்துவர்கள் கூறினர். ஒரு கட்டத்தில் உடல்நலம் மோசமானதால், 'இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு' என கூறினர்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் காத்திருந்தும், எனக்கு மாற்று இதயம் கிடைக்கவில்லை. அப்போது தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் முன்னணியில் இருப்பது தெரியவந்தது. சென்னையில் இருந்த பிரபல இதய மருத்துவர் கே.எம்.செரியன் தான் எனக்கு மாற்று இதயம் பொருத்தினார்.
'இனி பிரச்னையில்லை' என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில், எனக்கு பொருத்தப்பட்ட மாற்று இதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. அதனால் மீண்டும், 2016ம் ஆண்டில், இரண்டாவது முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பின் உடல் எடை கூடியது. அதை குறைப்பதற்காக நடனம், நடைபயிற்சி, 'சைக்கிளிங்' பயிற்சிகளை மேற்கொண்டேன்.
முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்த ஆறு மாதத்தில், 3.5 கி.மீ., மாரத்தானில் பங்கேற்றேன். அதன்பின் பல மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். 13,000 அடி உயரத்தில் இருந்து, 'ஸ்கை டைவிங்' செய்தேன். 'இந்தியாவின் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்ற பெண் விளையாட்டு வீரர்' என்ற பெருமையும் எனக்கு உண்டு.
என் அனுபவத்தில் இருந்து மக்களுக்கு சொல்லவும், செய்யவும் பல விஷயங்கள் இருப்பதை உணர்ந்து, 'லைட் எ லைப் ரீனா ராஜு பவுண்டேஷன்' என்ற பெயரில், தன்னார்வ அமைப்பு ஒன்றை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறேன்.
ஒவ்வொரு மனிதரும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும். ஏனெனில், அந்த தானம் மற்றொருவருக்கு வெறும் உயிரை மட்டும் தருவதில்லை. அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் வாழ வைக்கிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என ஒன்று இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும், அதற்கு செலவு செய்யும் அளவுக்கு எல்லாருக்கும் வசதி இருப்பதில்லை. எங்கள் அமைப்பு வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, நிதி திரட்டி, இந்தியா முழுதும் மருத்துவ தேவை உள்ள உறுப்பு மாற்று நோயாளிகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன்.
