/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வெண்கல உருளியில் சமைக்கும் உணவில் ஊட்டச்சத்து குறையாது!
/
வெண்கல உருளியில் சமைக்கும் உணவில் ஊட்டச்சத்து குறையாது!
வெண்கல உருளியில் சமைக்கும் உணவில் ஊட்டச்சத்து குறையாது!
வெண்கல உருளியில் சமைக்கும் உணவில் ஊட்டச்சத்து குறையாது!
PUBLISHED ON : ஜன 13, 2026 03:50 AM

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பழமையான, 'ஆனந்த விலாஸ்' பாத்திரக்கடை உரிமையாளரான, 68 வயதாகும் பழனியப்பன்: ஒரு காலத்தில் புதுமண பெண்கள், தலை பொங்கலுக்கு, உருளி எனும் வெண்கல பாத்திரத்தில் தான் பொங்கல் வைப்பர். இன்றும் பரவலாக எல்லாருமே உரு ளியில் வைக்கத் தான் விரும்புகின்றனர்.
மண் பானை எனில், ஒவ்வொரு ஆண்டும் வாங்க வேண்டும். உருளியை ஒரு முறை வாங்கிவிட்டால் போதும் என நினைக்கின்றனர். அது மட்டுமல்லாமல், உருளி கீழே விழுந்தாலும் உடையாது.
வெண்கல உருளியில் பொங்கல் செய்து, கடவுளுக்கு படைத்தால் உடல் நலம் பெருகும்; மகிழ்ச்சி கூடி, ஆண்டு முழுதும் செல்வச் செழிப்புடன் இருக்கலாம் என்பது ஐதீகம்.
கும்பகோணத்தைச் சுற்றி, பல கிராமங்களில் வெண்கல உருளி தயாரிப்பு நடக்கிறது. சிலர் உருளி என்றும், சிலர் வெண்கல பானை என்றும் சொல்வர்.
மண்பானை வடிவத்தில் தான் உருளி இருக்கும். பித்தளையிலும் உருளி கிடைக்கும். வெண்கல உருளிக்கு முதலில் களிமண்ணில் அச்சு செய்து வைத்துக்கொள்வோம்.
வெண்கலத்தை உருக்கி, அதில் ஊற்றி, அச்சில் இருந்து எடுத்து பிசிறு தட்டினால், வெண்கல உருளி தயாராகி விடும்.
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு சீர் கொடுக்கும்போது இரண்டு உருளிகள், சட்டுவம் எனப்படும் வெண்கல அகப்பையும் சேர்த்து கொடுப்பர். நாங்கள் டிசம்பரிலேயே உற்பத்தியை முடித்து, கடைகளில் விற்பனைக்கு வைத்து விடுவோம்.
பித்தளை, வெண்கல பாத்திரங்கள் விற்பனையில் தமிழகத்துக்கும், ஆந்திராவுக்கும் விரிவான தொழில் தொடர்பு உண்டு. கும்பகோணத்தில் இருந்து பித்தளை உருளிகள், பாத்திரங்கள், ஆந்திராவுக்கு அனுப்பப்படும்.
அதேபோல் ஆந்திராவில் இருந்து வெண்கல உருளிகள், பாத்திரங்கள் இங்கு வரும். ராஜமுந்திரியில் இருந்து வெண்கல உருளிகள் இப்போது நிறைய வருகின்றன.
இங்கு வெண்கல உருளிகள், 1,750 முதல் 5,500 ரூபாய் வரை கிடைக்கும். பித்தளை உருளிகள், 1,350 முதல் 2,500 ரூபாய் வரை கிடைக்கும். வெண்கல அகப்பையின் விலை, 250 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை கிடைக்கிறது.
வெண்கல பாத்திரத்தில் செய்யும் உணவு பொருட்கள், ஊட்டச்சத்து குறையாமல் அப்படியே இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.
செரிமான கோளாறு இருக்காது; சுவையும் மாறாது என்று கூறுகின்றனர். அதனால், வெண்கல உருளிக்கு எப்போதும் மவுசு இருக்கிறது.
ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பித்து, பொங்கல் நெருங்க நெருங்க கும்பகோணம் டி.எஸ்.ஆர்., பெரிய தெருவில் நடக்க முடியாத அளவுக்கு கூட்டம் களை கட்டும்.
தொடர்புக்கு: 80565 30340.

