PUBLISHED ON : மே 21, 2026 12:00 AM

ஆட்டினங்களில் மிகவும் அரிதான கச்சைக்கட்டி செம்மறியாடுகளை வளர்த்து வரும், மதுரை மாவட்டம், கச்சைகட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகு செல்வம்: இந்தியாவில், 44 வகையான ஆட்டினங்கள் உள்ளன. அவற்றில், 10 இனங்கள் தமிழகத்தில் தான் வளர்க்கப்படுகின்றன. அந்த இனங்களில் அரிதான ஓர் இனம் கச்சைகட்டி கருப்பாடு.
கரிய நிறம், வெறித்து பார்க்கும் கண்கள், சிறிய காதுகள், சுருள் கொம்புகள், அடர்த்தியான ரோமத்தை கொண்டுள்ள இந்த செம்மறி ஆடுகள், கிடா சண்டைக்கு ஏற்ற மிகத்துடிப்பான இனம். மேலும், இறைச்சி தேவைக்கும், ரோம உற்பத்திக்கும் பயன்படுகிறது.
எனக்கு விபரம் தெரிந்து, மூன்று தலைமுறைகளாக இந்த ரக ஆடுகளை வளர்க்கிறோம். அந்தக் காலத்தில் எங்கள் ஊர் மக்கள், கிடா சண்டைக்காக இதை வளர்த்தனர்.
கருப்பசாமி, அய்யனார் என்று காவல் தெய்வங்களுக்கு கருப்பு ஆட்டுக்கிடாவைத் தான் பலி கொடுப்பர். நேர்த்திக்கடனுக்காகவும், கச்சைக்கட்டி கருப்பாடுகளை வளர்க்கின்றனர்.
மற்ற ஆடுகளை விட, கச்சைக்கட்டி கருப்பாடுகள் வேகமாக செயல்படும்; மூர்க்கமாக சண்டை போடும். இதை வளர்ப்போரே சுலபமாக இவற்றை பிடிக்க முடியாது; இப்போதும் பலர் தேடி வந்து இந்த ஆடுகளை வாங்கிச் சென்று, கிடா சண்டைக்கு பயிற்சி கொடுக்கின்றனர்.
இந்த ஆடு, இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை கன்றுகள் ஈனும்; ஒரு முறை ஒரு குட்டி தான் கிடைக்கும். இதை வளர்க்க மேய்ச்சல் முறை தான் சிறந்தது.
பணத் தேவை ஏற்படும் போது, கிடாக்குட்டிகளை விற்பனை செய்வோம். மூன்று மாத பெண் குட்டி, 7,000 முதல் 8,000 ரூபாய் வரை விலை போகும்.
கிட்டத்தட்ட, எட்டு மாதங்கள் வளர்ந்த கிடா, 25,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும். வளர்ப்புக்காக கேட்போருக்கு கிடாரி குட்டியையும் விற்பனை செய்வோம். மேய்ச்சல் முடிந்து, இரவில் கொட்டகையில் அடைப்போம்.
கொட்டகையில் இந்த ஆடுகள் போடும் புழுக்கைகளை சேமித்து, உரமாக விற்பனை செய்கிறோம். கேரள விவசாயிகள் தேடி வந்து, ஆட்டு புழுக்கைகளை வாங்கி செல்கின்றனர்.
குட்டிகள் மற்றும் பெரிய ஆடுகளுக்கு சரியான இடைவெளியில், குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்க வேண்டும். வாய் மற்றும் காலில் புண்கள் வந்தால், மூலிகை மருந்துகள் வாயிலாகவே குணப்படுத்தி விடுவோம்.
