sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

ஆண்கள் கோலோச்சும் தொழிலில் வளர்கிறேன்!

/

ஆண்கள் கோலோச்சும் தொழிலில் வளர்கிறேன்!

ஆண்கள் கோலோச்சும் தொழிலில் வளர்கிறேன்!

ஆண்கள் கோலோச்சும் தொழிலில் வளர்கிறேன்!


PUBLISHED ON : அக் 06, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 06, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசப்பட்டியில், 'எஸ்.கே.ஈவென்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனம் நடத்தி வரும் மீனா:

கேரளாவின், மூணாறு தேயிலை எஸ்டேட்டில் பிறந்தேன்; 10ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. மதுரை, செல்லுாரைச் சேர்ந்த அருண் என்பவர், டெக்கரேஷன் தொழில் தொடர்பாக மூணாறு வந்தபோது அவருடன் அறிமுகம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

ஜாதியை காரணம் கூறி இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை. அதனால், எல்லாவற்றையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

எங்களுக்கு இரட்டையராக மகன்கள் பிறந்தனர். ஆரம்பத்தில் பலுான்களை மட்டும் டெக்கரேஷன் செய்தோம். மண்டப நுழைவாயில், மேடைகளில் பலுான்களால் ஆர்ச் போட்டு கொடுப்போம்.

கணவருக்கு டெக்கரேஷனில் மதுரை, தேனி என்று அனுபவம் இருந்ததால், தனியாக ஆர்டர் எடுத்து வேலை செய்ய முடிவெடுத்தோம். தேனியில் உள்ள சிறிய மண்டபங்கள், ஹோட்டல்களில் பேசி ஆர்டர் பெற்றோம். ஒருநாள் துாங்கிய அருண் எழவேயில்லை. மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார்.

பெற்றோர், உறவினர் யாருமின்றி ஒரே பிடிப்பாக இருந்த கணவரும் இறந்தது, என் வாழ்வில் பெரிய இழப்பாக இருந்தது. என் தங்கையும் பிரசவத்தில் இறந்துவிட, தங்கை கணவர் குழந்தையை விட்டு சென்று விட்டார். அவளது மகனையும் என் மகனாக வளர்த்து வருகிறேன்.

அழுகையை சீக்கிரமே முடித்து, அருண் இறந்த மூன்றாவது நாளே ஒப்புக்கொண்ட வேலைகளை முடித்துக் கொடுத்தேன். குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற வைராக்கியமும், டெக்கரேஷன் துறையில் எனக்கிருந்த ஆர்வமும் படிப்படியாக வளர செய்தது.

திருமண நிகழ்ச்சி என்றால் மூன்று நாட்கள் வேலை இருக்கும். இரவு முழுதும் துாங்காமல் இருந்து மண்டபத்தை அலங்கரிப்போம். வண்ண மலர்களை பெங்களூரில் இருந்து வரவழைத்து டிசைன் செய்வோம்.

வண்ண விளக்குகள், சீரியல் விளக்கு அலங்காரங்கள் என ஜொலிக்கும். சிறிய அளவிலான அரங்கம் என்றாலும் கூட, அதை சிறப்பாக டெக்கரேஷன் செய்து பிரமாண்ட அரங்கம் போல் மாற்றி விடுவோம்.

அந்த அழகும், நேர்த்தியும் அரங்கில் கூடும் உறவுகள், நண்பர்கள் விழிகளை விரிய வைக்கும். பள்ளி, கல்லுாரி, வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர் எடுத்து செய்கிறோம். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு உறவுகளை இழந்து, குழந்தைகளுடன் தனி மனுஷியாக ஆண்கள் கோலோச்சும் தொழிலில் வளர்ந்து வருகிறேன் என்றால், நீங்கள் எல்லாம் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம் தானே!

**************************

5,000க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி முகாம்களில் பயன் அடைந்தனர்!

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் தொழில் முனைவோர் மையத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்ப துறை தலைவர், முனைவர் கார்த்திகேயன்:

மதிப்புக் கூட்டல் தொழிலில் ஆர்வமுள்ள விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை சேர்ந்தோர் எங்கள் மையத்தை பயன்படுத்தி, பலன் அடைந்து வருகின்றனர்.

மசாலா பொருட்கள், பேக்கரி பொருட்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள் தயாரித்தல், சிறுதானியங்களில் இருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரித்தல் உள்ளிட்ட பலவித பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மாதத்திற்கு, இரண்டு அல்லது மூன்று பயிற்சிகள் நடைபெறும். ஒரு பயிற்சிக்கு, 1,700 ரூபாய் வீதம் கட்டணம். இந்த மையத்தில் உறுப்பினராக பதிவுசெய்து, ஓராண்டு 10,000 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு கட்டணம் செலுத்திய தொழில் முனைவோர், ஒரு குறிப்பிட்ட இயந்திரத்தை இயக்கி, மதிப்புக் கூட்டலில் ஈடுபடும் நேரங்களில் எங்கள் மையத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர், அந்த தொழில் முனைவோருக்கு உறுதுணையாக இருப்பார்.

இயந்திர தேய்மானம், பராமரிப்பு காரணங்களுக்காக ஒரு நாளைக்கு சராசரியாக 200 ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறோம்.

பழக்கூழ் தயார் செய்யும் இயந்திரம், பழரசம் பிழியும் இயந்திரம், பழரசம் பதப்படுத்தும் கலன்கள், சர்க்கரை பாகு தயாரிக்கும் இயந்திரம் உட்பட பலவிதமான அதிநவீன இயந்திரங்கள் இம்மையத்தில் உள்ளன.

மேலும், குளிர்பதன வசதியும் இங்குள்ளது. உணவு பொருட்களை தர சோதனை மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான ஆய்வகமும் உள்ளது. இது, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஆய்வகமாகும்.

தொழில் முனைவோர், தாங்கள் செய்யக்கூடிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்து அறிந்து கொள்ள, இங்குள்ள ஆய்வகத்திலேயே பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இங்கு சான்று பெற்ற உணவு பொருட்களை விற்பனை செய்ய, வேளாண் பல்கலைக் கழகத்தின் லோகோவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால், மக்களுக்கு தங்களுடைய பொருட்கள் மீது அதிக நம்பிக்கையும், மதிப்பும் உண்டாகும்.

கடந்த 2004 முதல் தற்போது வரை 52 பெரு நிறுவனங்கள், இம்மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளன.

புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க, இதுவரை 284 பயிற்சி முகாம்கள் நடத்தி உள்ளோம். அதில், 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயனடைந்து உள்ளனர்.

தொடர்புக்கு: 0422 - 6611 268, 6611 340.






      Dinamalar
      Follow us