/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அதலைக்காய் சாகுபடியில் அதிக லாபம்!
/
அதலைக்காய் சாகுபடியில் அதிக லாபம்!
PUBLISHED ON : ஜன 19, 2026 12:00 AM

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள அதலைக்காயை மதிப்புகூட்டி விற்பனை செய்யும், விருதுநகர் மாவட்டம், குல்லுார் சந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகாலட்சுமி: இயற்கை விவசாயத்தில் பருத்தி, எள், துவரை, சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களை, 2018 முதல் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்.
பருத்தியில் ஊடுபயிராக அதலைக்காய் சாகுபடி செய்து, விளைந்த பின் அவற்றை விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்று பலரும் கூறினர். கணவரும் என்னை ஊக்கப்படுத்தினார்.
அதனால், 1 ஏக்கரில் மட்டும் நாட்டுப்பருத்தி பயிரிட்டு, ஊடுபயிராக அதலைக் கிழங்குகளை நட்டு தேவையான பராமரிப்புகளை செய்தேன். பருத்திக்கு முன்னாடியே அதலைக்காய்கள் அறுவடைக்கு வந்துவிட்டன.
அதை, வற்றலாக மதிப்புகூட்டி விற்பனை செய்தேன். ஊடுபயிரான அதலைக்காய் சாகுபடியில் நல்ல லாபம் கிடைத்தது.
எனவே, கடந்த ஆறு ஆண்டுகளாக அதலைக்காயை பயிர் செய்கிறேன். எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என்றாலோ, அதிக மழை உள்ளிட்ட காரணங்களால் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலோ, காய்களை பறித்த அன்றே புளிக்கும் மோரில் போட்டு பதப்படுத்தி, வற்றலாக மதிப்புகூட்டி விடுவேன்.
அதை, பல மாதங்கள் வரை சேமித்து, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்வேன்.
அதலைக்காய்கள், விதைப்பு செய்த 60ம் நாளில் இருந்து மகசூல் கொடுக்கும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை காய்கள் பறிப்பது வழக்கம். இதன்படி, 40 பறிப்புகள் வரை கிடைக்கும்.
கடந்தாண்டு மொத்தம், 1,170 கிலோ காய்கள் மகசூல் கிடைத்தது. அதில், 750 கிலோ பச்சைக் காய்களாக விற்பனை செய்தேன்.
கிலோ, 200 ரூபாய் வீதம், 1 லட்சத்து, 50,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. மீதமிருந்த, 420 கிலோ காய்களை மதிப்பு கூட்டியதில், 42 கிலோ வற்றல் கிடைத்தது.
அதலை வற்றல், 1 கிலோ 2,500 ரூபாய் என விற்பனை செய்ததன் வாயிலாக, 1 லட்சத்து, 5,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.
ஆக, 1 ஏக்கர் நாட்டுப்பருத்தியில் ஊடுபயிராக சாகுபடி செய்த அதலைக்காய்கள் மூலம், 2 லட்சத்து, 55,000 ரூபாயும், பருத்தி விற்பனையில், 1 லட்சத்து, 40,000 ரூபாயும் வருமானம் கிடைத்தது.
மொத்தத்தில், ஒரு ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த பருத்தி மற்றும் ஊடுபயிரான அதலைக்காய் வாயிலாக ஈட்டிய, 3 லட்சத்து, 95,000 ரூபாய் வருமானத்தில், எல்லா செலவுகளும் போக, 2 லட்சத்து, 80,000 ரூபாய் லாபம் கிடைத்தது!
தொடர்புக்கு
73971 89330

