PUBLISHED ON : டிச 16, 2024 12:00 AM

பெற்றோருக்கு வீடு கட்டிக்கொடுத்தது முதல், தன் திருமணத்தை சொந்த செலவில் நடத்தி முடித்தது வரை, 28 வயதுக்குள் பல செயல்களை முடித்துள்ள, பெரம்பலுாரைச் சேர்ந்த விபிதா: எங்கள் முன்னோர், இரண்டு தலைமுறைகளுக்கு முன், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தேயிலை தோட்டத்துக்கு பணிபுரிய சென்று அங்கேயே தங்கி விட்டனர்.
தற்போது, பெற்றோர் மற்றும் தங்கை அருகருகே தான் வசிக்கின்றனர்.
'டிவி' பார்த்து தான் கம்ப்யூட்டர் இன்ஜினியர்னு ஒரு வேலை பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். அதுவா தான் ஆகணும், நல்லா சம்பாதிக்கணும்னு உறுதியா இருந்தேன். நல்ல மார்க் எடுத்து, அரசு பொறியியல் கல்லுாரியில, பி.இ., சேர்ந்தேன்.
படிப்பை முடிச்சு சென்னையில உறவினர் வீட்டுல இருந்து, ஐ.டி., கம்பெனி வேலைக்கு முயற்சி செய்தேன். ஆறு மாசத்துல, ஒரு தனியார் நிறுவனத்துல, மாதம், 18,000 ரூபாய் சம்பளத்துல வேலை கிடைச்சது.
முதல் மாச சம்பளம் கைக்கு வந்தப்போ எனக்குக் கிடைச்ச சந்தோஷமும், தன்னம்பிக்கையும் அதுவரை நான் பார்க்காதது.
வேலைங்கிறது சிலருக்கு சம்பளம். எனக்கும், என் குடும்பத்துக்கும் அது தான் ஒரே வெளிச்சம். என் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம், நான் வேலை பார்த்த நிறுவனத்தில கிடைச்சது.
வேலைக்குச் சேர்ந்த குறுகிய காலத்துலேயே, எங்க கம்பெனியில இருந்து, வெளிநாட்டுக்கு என்னை அனுப்பினாங்க. எட்டு மாசம் அங்க இருந்தேன்.
என் வாழ்க்கையின் பெரிய திருப்புமுனையா அந்தக் காலம் அமைஞ்சது. அந்த, எட்டு மாசத்துல மட்டும் நான் சம்பாதிச்சது சில லட்சங்கள்.
எங்கம்மா, 'உங்க அப்பாவும், நானும் சேர்ந்து ஆயுசுக்கும் உழைச்சாலும் பார்க்க முடியாத காசு இது'னு ஆனந்தக் கண்ணீர் விட்டாங்க. 'எம் புள்ள வெளிநாட்டுல வேலைபார்க்குது'னு எங்கப்பாவுக்கோ பெருமை தாங்கலை.
கிட்டத்தட்ட குழந்தை பருவத்திலிருந்தே தினக்கூலி வேலைகளுக்கு போயிட்டிருந்த எங்கம்மா, அப்பாவை, 'இனி நீங்க வேலைக்குப் போக வேண்டாம்'னு சொல்லி நிறுத்தி விட்டேன்.
எங்களுக்குனு சின்னதா ஒரு வீட்டை கட்டினேன். அடிப்படை தேவைகளையெல்லாம் நிறைவேத்தினேன்.
என்னை பார்த்து இப்போ பலரும் தங்களோட மனசை மாத்திட்டு வராங்க; பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கிறாங்க. நாம மாத்துறவரை இங்க எதுவும் மாறாது.
நம்ம சூழலை மாத்துறது நம்ம கையில தான் இருக்கு. பெண்கள், தங்களுக்குப் பிடிச்ச மாதிரி தங்களோட வாழ்க்கையை மாத்த, ஒரு வேலையை உங்களுக்கு உருவாக்கிக்கோங்க. நம்புங்க... எல்லாம் மாறும்!

