PUBLISHED ON : மார் 19, 2026 03:48 AM

சமீபத்தில் வெளியாகி, வெற்றி பெற்றுள்ள, தாய் கிழவி கதாபாத்திரம் உருவாக காரணமாக இருந்த, மதுரை மாவட்டம், செல்லுாரைச் சேர்ந்த, 84 வயதான பவுனுத்தாயி: என் சொந்த ஊர், பழைய ராமநாதபுரம். என் கணவர் பெயர் வேலுச்சாமி. கணவருக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி. எங்களுக்கு திருமணமானபோது கரும்பு வியாபாரம் செய்து வந்தார். உதவிக்கு நானும் செல்ல ஆரம்பித்தேன்.
அதன்பின் கடலை, கரும்பு, நெல்லிக்காய் என்று நிறைய வியாபாரங்கள் செய்தோம்.
எங்களுக்கு ஏழு மகன்கள்; ஒரு மகள். ஒரு ரூபாய் கூட வீணாக செலவு செய்ய மாட்டேன். வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வட்டிக்கு விடுவேன். வட்டிக்கு விட்ட பணத்தை வசூல் செய்ய போனால், பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பர். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று வசூலுக்கு செல்வேன்.
என்னை பார்த்தாலே, 'பவுனுத்தாய் வருதுடோய்' என்று எல்லாரும் தெறித்து ஓடுவர். படத்தில் காட்டி இருந்ததெல்லாம் நிஜம் தான். நானும், கணவரும் இந்த ஊருக்கு வரும்போது, சின்ன இடம் கூட எங்களுக்கு கிடையாது.
தற்போது, இந்த ஊரில் சொந்த வீடு, நிலம், நகை என்று சொத்துக்கள் சேர்த்திருக்கிறேன். ஒரு ஹோட்டல் வாடகைக்கு விட்டுள்ளேன். படத்தில், 300 பவுன் சேர்த்து வைத்திருப்பதாக காட்டுவர். ஆனால், நான் அதற்கும் மேல் சேர்த்து வைத்துள்ளேன். இன் னும் சேர்த்து வருகிறேன்.
எங்களுக்கு மொத்தம், 30 பேரப்பிள்ளைகள். அனைவரையும் கூப்பிட்டு சமமாக சொத்தை பிரித்து கொடுத்து விட்டேன். எனக்கு பின், நான் இருக்கும் வீடு, நான் அணிந்துள்ள நகைகளை யார் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெளிவாக கூறிவிட்டேன்.
இது, நான் சம்பாதித்து வாங்கிய வீடு; என் கணவர் வாழ்ந்த வீடு. கடைசி வரை இங்கு தான் இருப்பேன். யார் சமைத்துக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லி விடுவேன்.
என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும்; 84 வயதானாலும் நான் தனியாக இருப்பதற்கு காரணம், என் மன தைரியம் தான்.
குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எனில், பெண் தான் திறமைசாலியாக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருக்கிறேன். பெண்கள் வெளியே வர வேண்டும்.
குடும்பத்தை பெண்களால் மட்டுமே கரை சேர்க்க முடியும் என்று நம்பி, வெளியே வந்தேன்; சம்பாதித்தேன்; குடும்பத்தை கரையேற்றினேன்.
பெண் குழந்தைகள் வேண்டாம் என்று கூறுவோர், நம்மை பார்த்து நமக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு வாழ்ந்து காட்ட வேண்டும்.
பிள்ளைகளுடன், தாய் கிழவி படம் பார்த்தேன். படத்தில் சில விஷயங்களை மட்டும் மாற்றியிருந்தனர். நான் இதுவரைக்கும் மருத்துவமனைக்கு சென்றதில்லை; இனியும் செல்ல மாட்டேன். நீண்ட ஆயுசுக்காரி நான்!
