/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கடலுாரில் மிளகு சாகுபடி செய்கிறேன்!
/
கடலுாரில் மிளகு சாகுபடி செய்கிறேன்!
PUBLISHED ON : ஏப் 28, 2025 12:00 AM

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பூமாலை: எங்கள் குடும்பத்திற்கு, 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆரம்பத்தில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தோம்.
விவசாய பணியாளர்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகளால், 2 ஏக்கரில் தேக்கு மற்றும் குமிழ் மரக்கன்றுகளை நடவு செய்தேன்.
ஒருமுறை சபரிமலைக்கு சென்றிருந்த போது, கேரளாவில் உள்ள தோட்டங்களில் செழிப்பாக மிளகு விளைந்திருந்ததை பார்த்தேன்.
'சோதனை முயற்சியாக நம் தோட்டத்தில் இதை பயிர் செய்து பார்க்கணும்' என, ஆர்வம் ஏற்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலை பண்ணையில், 500 மிளகு கொடிகள் வாங்கி வந்து பயிர் செய்தேன்.
அவை செழிப்பாக வளர்ந்து, மகசூல் கொடுக்க ஆரம்பித்தன. 2017ல், மீண்டும், 500 கொடிகள் வாங்கி வந்து நடவு செய்தேன். அதே ஆண்டு, தேக்கு மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக, 50 மலைவேம்பு கன்றுகளை நடவு செய்தேன்.
மிளகு கொடிகள் செழிப்பாக விளைவதற்கு போதுமான நிழலும், குளிர்ச்சியான சூழலும் தேவை. தேக்கு மரங்களில் இருந்து இலைகள் அதிகமாக உதிர்ந்ததால், நிழல் குறைந்து, உஷ்ணம் அதிகரிக்க ஆரம்பித்தது.
அதனால் மிளகு கொடிகளில் செழிப்புத்தன்மை குறைய ஆரம்பித்தது. அதை சரிசெய்ய, 500 பாக்கு மரங்களை ஊடுபயிராக நடவு செய்ததில், அதிக நிழலும், குளிர்ச்சியான சூழலும் கிடைத்ததால், மிளகு கொடிகள் நன்கு வளர்ந்து விளைச்சல் கொடுக்க ஆரம்பித்தன.
மொத்தம், 2 ஏக்கரில், 1,500 மிளகு கொடிகள் பயிர் செய்திருக்கிறேன். இதில், ஆண்டுக்கு சராசரியாக, 1,500 கிலோ பச்சை மிளகு கிடைக்கிறது. அதை பதப்படுத்தினால், 500 கிலோ காய்ந்த மிளகு கிடைக்கும். 1 கிலோ, 800 ரூபாய் என, விற்பனை செய்கிறோம்.
மக்கள் நேரடியாக என் தோட்டத்துக்கு வந்து வாங்கி செல்வர். மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் விற்பனை செய்கிறேன்.
விவசாய கண்காட்சிகளில் கடை அமைத்து, விற்பனை செய்கிறேன். ஆண்டுக்கு, 500 கிலோ மிளகை விற்பனை செய்வதன் வாயிலாக, 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கடலுார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், சமீப காலமாக நிறைய விவசாயிகள் மிளகு சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுவதால், மிளகு கொடிகள் உற்பத்தி செய்து, ஒரு கொடி 50 ரூபாய் என, விற்பனை செய்கிறேன்.
ஆக, மிளகு மற்றும் மிளகு கொடிகள் விற்பனை வாயிலாக, ஆண்டுக்கு மொத்தம், 5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் எல்லா செலவுகளும் போக, 4 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது!
தொடர்புக்கு
84898 28211