PUBLISHED ON : ஜூலை 22, 2026 12:00 AM

'லீலாவதி பை சுமா ஹாரிஸ்' என்ற பெயரில், சென்னை நுங்கம்பாக்கத்தில் புடவை கடை நடத்தும், பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமா ஹாரிஸ்:
அன்பான மனைவி, பாசமான அம்மா, எல்லாருக்கும் நல்ல தோழி... என்னை தெரிந்தவர்களுக்கு இதுதான் நான். இதையெல்லாம் தாண்டி, எனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்ற எண்ணம், பல ஆண்டுகளாக இருந்தது.
அம்மாவின் பெயரில், 'லீலாவதி' புடவை வியாபாரம் ஆரம்பித்தேன். கணவர் எந்த விஷயத்திலும், எதற்காகவும் என்னை நச்சரிக்க மாட்டார். தொழில் ஆரம்பிக்க இருப்பது குறித்து, நான் அவரிடம் கூறியது கூட கிடையாது. ஆரம்பித்த பின் ஒருநாள் கேள்விப்பட்டு, 'அப்படியா...' என்று ஆச்சரியமாக கேட்டார்; அவ்வளவு தான்.
நான் என்ன செய்தாலும், சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கும், சரியான விஷயத்தை செய்யும்போது நிச்சயம் அவர் சரி என்று கூறுவார் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு.
தொழில் ஆரம்பிக்கும்போதே என் கடை, எல்லா பெண்களுக்குமானதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். விலை குறைவு என்பதால், தரம் குறைவாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு புடவையும் எனக்கு பிடித்தால் மட்டுமே கடைக்குள் கொண்டு வருவேன்.
இங்குள்ள புடவைகள் அனைத்துமே எனக்கு பிடித்தமானவை. ஒரு புடவையை தேர்வு செய்யும்போது, அதை நான் கட்டுவேனா என்று யோசித்து தான் வாங்குவேன். நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதால், கைத்தறி நெசவை தான் ஊக்கப்படுத்துகிறோம்.
இப்போதைக்கு சிறிய அளவில் தான் ஆரம்பித்துள்ளேன். இன்னும் அதிக நேரம் ஒதுக்கி, இதை இன்னும் பெரிதாக்குவது தான் அடுத்த திட்டம்.
என்னுடைய இன்னொரு குடும்பம், என் நண்பர்கள் என்று சொல்லலாம். எங்கள் நண்பர்கள் குழுவில், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள், பெண் தொழில் முனைவோர் என, அனைவரும் உண்டு.
எங்களுக்குள் ஒரு வழக்கம் உள்ளது. யார் வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், வளைகாப்பு என எந்த நிகழ்வு வந்தாலும், யாராவது ஒருவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடுவோம். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் இருந்து ஸ்பெஷலாக உணவு செய்து, எடுத்து வந்து அந்த தருணத்தை கொண்டாடுவோம். நாங்கள் ஒன்று கூடும்போது, எங்களுக்குள் சிரிப்பு, சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்.
