/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
10,000 கி.மீ.,க்கும் அதிகமா புல்லட் ஓட்டியிருக்கேன்!
/
10,000 கி.மீ.,க்கும் அதிகமா புல்லட் ஓட்டியிருக்கேன்!
10,000 கி.மீ.,க்கும் அதிகமா புல்லட் ஓட்டியிருக்கேன்!
10,000 கி.மீ.,க்கும் அதிகமா புல்லட் ஓட்டியிருக்கேன்!
PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM

புல்லட் பைக்கில் வலம் வரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கல்லுாரி பேராசிரியை பவானி பிரியா:
எங்கப்பா, ஜோதிடர் வெள்ளைக்கண்ணு; 1997ல் டீசல் புல்லட் வாங்கினார். அவரை எல்லாரும், 'புல்லட் ஜோசியர்'னு தான் சொல்வாங்க. ஊர்ல பலருக்கும் அந்த புல்லட் மேல ஆசை; எனக்கும் தான்.
எங்க வீட்டுக்கு வர்ற பலர், 'உங்களுக்கு ரெண்டும் பொண்ணுங்க. உங்களுக்கு அப்புறம் புல்லட்டை யாரு ஓட்டுவா? விக்கிறதா இருந்தா எங்ககிட்ட கொடுங்க'ன்னு கேட்பாங்க.
எங்கப்பா, 'பொண்ணுக்கு பொண்ணா, ஆணுக்கு ஆணா இருப்பாங்க என் பிள்ளைங்க. அவங்களே இதை ஓட்டுவாங்க'ன்னு சொல்லி அவங்க வாயடைப்பார்.
அப்பா மைதானத்துக்கு கூட்டிட்டு போய் எனக்கும், அக்காவுக்கும் புல்லட் ஓட்ட கத்துக் கொடுத்தார். அதிக எடை காரணமா, ஆரம்பத்துல பேலன்ஸ் பண்ண முடியாம கீழ விழுந்திருக்கோம். பார்க்கிறவங்க, 'பொம்பள புள்ளைக்கு இதெல்லாம் தேவையா? அடிபட்டா யாரு கட்டிக்குவா?'ன்னு கேட்பாங்க.
'ஆம்பள புள்ளையா இருந்தாலும், கீழ விழுந்து தான் பைக் ஓட்ட கத்துக்குவாங்க'ன்னு மறுபடியும் அப்பா அவங்க வாயடைப்பார். முக்கிய சாலைகளில் ஓட்ட கத்துக்கிட்டதும், அப்பா, 'லைசென்ஸ்' எடுக்க வெச்சார்; அப்புறம், தனியா புல்லட் ஓட்ட அனுமதிச்சார்.
ரைஸ் மில், கடைகளுக்கு போறது, சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களுக்கு அம்மாவை அழைச்சுட்டு போறது, திருச்சி அத்தை வீட்டுக்கு போறது, புதுக்கோட்டையில் நான் வேலை பார்க்குற கல்லுாரிக்கு என, அப்பப்ப புல்லட்டில் செல்வேன்.
ஒருநாள் எங்கள் கல்லுாரி முதல்வர் அழைத்து பாராட்டியதோடு, மற்ற பேராசிரியர்கள், மாணவர்கள் முன், 'பெண்களால் எதுவும் முடியும்னு மாணவி பிரியா செய்து காட்டிட்டு இருக்காங்க; இந்த தன்னம்பிக்கையை நீங்களும் கத்துக்கணும்'னு பெருமையா பேசினார்.
இதுவரை, 10,000 கி.மீ.,க்கும் மேல புல்லட் ஓட்டியிருக்கேன். அப்பா வேலைக்கு புல்லட்டை எடுத்துட்டு போறதால, எனக்கு தனியா புல்லட் கேட்டேன். 2019-ல் வின்டேஜ் பெட்ரோல் புல்லட் வாங்கிக் கொடுத்தார். ஆனாலும், நான் அதிகமா ஓட்டுறது அப்பாவோட டீசல் புல்லட் தான்.
இதை ஓட்டுறதாலயே என் தன்னம்பிக்கை அதிகரிச்சிருக்கிறதை உணர்றேன். என்னை பார்த்து, இப்ப எங்க ஊர்ல, 15-க்கும் மேற்பட்ட பொண்ணுங்க அவங்க வீடுகள்ல இருக்குற கியர் வண்டிகளை ஓட்டுறாங்க.
கிராமங்கள்ல பெண்களுக்கான கட்டுப்பாடுகள் பத்தி நமக்கு தெரியும். அதை சின்ன அளவுல உடைச்சிருக்கிறதுல என் பங்கும் இருக்கு என்பது சந்தோஷம்!

