/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
6.20 லட்சம் விதை பந்துகளைதுாவியிருக்கிறேன்!
/
6.20 லட்சம் விதை பந்துகளைதுாவியிருக்கிறேன்!
PUBLISHED ON : டிச 22, 2024 12:00 AM

பனை விதைகள் நடுதல், விதை பந்துகள் வீசுதல் போன்ற பசுமை பணிகளில் ஈடுபட்டு வரும், வேலுார், ரங்காபுரத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தினேஷ் சரவணன்: என் அப்பா, பால் வியாபாரி. நான், பி.இ., படிச்சிருக்கேன். என் அண்ணன், 2014-ல் திடீர் விபத்துல இறந்துவிட்டார். அதனால், அப்பாவோடு சேர்ந்து குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பால் வியாபாரம் செய்தபடியே வேலை தேடினேன்.அண்ணனின் முதலாமாண்டு நினைவு நாளில், 1,000 மரக்கன்றுகள் வாங்கி, ஊர் பொது இடங்களில் நட்டு பராமரிக்க ஆரம்பித்தேன்.
அண்ணனின் நினைவுகள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்.
அதற்காக நாம் செய்யும் செயல், மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டினேன்.நான் நட்ட மரங்கள் வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பித்ததால், மரம் வளர்ப்பில் ஆர்வம் அதிகமானது. வேலுாரை, பசுமை நகரமாக மாற்ற
வேண்டும் என எண்ணி, நானே சைக்கிள் ரிக் ஷா ஓட்டிச்சென்று, வீட்டுக்கு ஒரு மரக்கன்று என, இலவசமாக வழங்கினேன்.அந்த வகையில, கிட்டத்தட்ட 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்கியிருக்கிறேன். மேலும், ஆலம், அரசு, வேம்பு, வேங்கை, கடம்பு, மருது, வாகை,
பூவரசு, இலுப்பை உள்ளிட்ட நாட்டு மர விதைகளை சேகரித்து, அதனுடன் மண், மணல், எரு கலந்து விதை பந்துகள் தயார் செய்து, மலை பகுதியில வீசினேன்.
வேலுார் சுற்று வட்டார மலைகளில் இதுவரை, 6.20 லட்சம் விதை பந்துகளை ட்ரோன் வாயிலாக துாவியிருக்கிறேன். கொரோனா காலத்துல இருந்து, வீட்ல இருந்தபடியே, மென்பொருள் நிறுவனத்துக்கான பணிகளை செய்ய ஆரம்பித்த பின், பசுமை செயல்பாடுகளில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த முடிகிறது.வேலுாரில் உள்ள மத்திய சிறை வளாகத்தில், 8,000 நாட்டு மரக்கன்றுகளை நட்டு குறுங்காட்டை உருவாக்கினேன்.
பாலாற்றில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி துாய்மைப்படுத்த, என்னால் இயன்ற முயற்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறேன்.வெயில் காலங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் தாகம் தீர்க்க, எங்கள் பகுதியில் வளரக்கூடிய மரங்களில் ஆயிரக்கணக்கான கொட்டாங்குச்சிகளை அமைத்து, தண்ணீர் ஊற்றுகிறேன். எங்கள் மாவட்டத்தை, சோலைவனமாக மாற்ற வேண்டும் என்பது தான், என் வாழ்க்கை லட்சியம்.
என் பசுமை பணியை பாராட்டி, தமிழக அரசு எனக்கு இரண்டாவது முறையாக, 'பசுமை முதன்மையாளர்' என்ற விருதும், 1 லட்சம் ரூபாய் வெகுமதியும் வழங்கி கவுரவித்து உள்ளது.
தொடர்புக்கு97913 25230
**************************
எங்க மகளை போலீசாக்கணும் என்று ஆசை!
சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மாலின் பிளாட்பாரத்தில், பேன்சி நகைகள் தயாரித்து விற்பனை செய்யும் திலகவதி:
நாங்கள் நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவங்க. பாசி விற்பதும், பச்சை குத்துறதும் தான் குலத்தொழில். சொந்த ஊர், பழனிக்கு பக்கத்துல பெத்தநாயக்கன்பட்டி. 6 வயதிலேயே மணி கோர்க்க ஆரம்பித்து விட்டேன்.
தொழிலுக்காக ஊரு ஊராக சுற்றியதில் படிக்க முடியாமல் போச்சு. உறவினரையே திருமணம் செய்து கொண்டேன்; எங்களுக்கு, 10 வயதில் ஒரு பொண்ணு இருக்கு.
பழனியில் ருத்ராட்சம் கோர்ப்பது, மாலை கோர்ப்பது, பாசி, கம்மல் செய்யுறது என தெரிஞ்ச தொழிலை நானும், கணவரும் செய்து வந்தோம். அப்போது, பழனி கோவிலை சுத்தி கடை போடுவதில் நிறைய சிக்கல் ஏற்பட்டது; உடனே சென்னைக்கு வந்து விட்டோம்.
சென்னையில ருத்ராட்ச மாலைகள் வியாபாரம் ஆகவில்லை. அதனால் கொலுசு, பிரேஸ்லெட் என டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி அலங்கார நகைகள் செய்ய ஆரம்பிச்சோம்.
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 100 - 200 ரூபாய் என, விற்பனை ஆனது. அதன்பின், வாடிக்கையாளர்கள் கேட்கும் டிசைன்களில் செய்ய ஆரம்பித்தோம். தற்போது, ஒரு நாளைக்கு 8,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
சென்னையில் வீடு கிடைக்கவில்லை; ரூம் எடுத்து தங்கியிருக்கோம். தினமும் காலையில 4,000 ரூபாய்க்கு பிராட்வேயில் பொருள் வாங்கி, மதியம் 2:00 மணிக்கு வருவோம். இரவு 8:00 வரை கடை போட்டிருப்போம்.
கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட டிசைன்கள் எங்களுக்கு தெரியும். மணியை கூர்ந்து பார்த்தபடியே இருப்பதால் கண்ணும், ஒயரை பிடித்தபடியே இருப்பதால், விரலும் வலிக்கும். ஆனால், இதை விட்டால் வேறு தொழில் தெரியாதே!
என் மகளை போலீஸ் ஆக்கணும் என்று ஆசை. அதனால், என் மகளுக்கு படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லி வளர்க்கிறோம். அவ என்ன படிக்கணுமோ படிக்கட்டும்.
இத்தனை ஆண்டு கள் சரியான வீடு, வாசல் இல்லாமல் கிடைக்கிற இடத்தில் வாழ்ந்து விட்டோம். பாத்ரூம் போக, டிரஸ் மாத்தக்கூட சரியான இடம் இருந்ததில்லை. இந்த வாழ்க்கை என் மகளுக்கு வேண்டாம் என்று தான், மகளை ஊரில் விட்டுட்டு இங்கு வந்து போராடுகிறோம்.
எங்களுக்கும் ஸ்பென்சர் பிளாசா உள்ளே கடை வைக்கணும்னு ஆசை. ஆனால், நம் பொருளை எங்கு விற்கிறோம் என்பது முக்கியம் இல்லை; தரமான பொருளாக விற்கிறோமா...
வாடிக்கையாளர்கள் மனநிறைவாக வாங்கி செல்கின்றனரா என்பது தான் முக்கியம். அந்த திருப்தியில் தான் நாங்கள் பிசினஸ் செய்கிறோம்.