/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன்!
/
10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன்!
10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன்!
10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன்!
PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' ஆலோசகரான, நெல்லையைச் சேர்ந்த வசந்தகுமார்:
நெல்லையில், பள்ளிப் படிப்பை முடித்தபின், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் டிப்ளமா படித்து, இன்ஜினியர் பட்டப் படிப்பை முடித்தேன். ஆனாலும், என் ஆர்வமெல்லாம் மார்க்கெட்டிங் துறை மீதே இருந்தது.
சிறுவயது முதலே முன்னணி பிராண்டுகளையும், அவை மக்களிடம் சென்று சேர மேற்கொள்ளும் மார்க்கெட்டிங் உத்திகளையும் ஆராய்ந்து, அந்த துறையிலேயே களம் இறங்கவும் விரும்பினேன்.
படித்து முடித்ததும், குடும்பச் சூழல் காரணமாக சின்னச் சின்ன வேலைகளை செய்தேன். சிறிது சிறிதாக தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் திறன்களை வளர்த்துக் கொண்டேன்.
கடும் முயற்சிகள் மற்றும் போராட்டங்களுக்குப் பின் கூகுள் மற்றும் எச்.சி.எல்., போன்ற நிறுவனங்களின் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பின் ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, அந்த நிறுவனத்தின் தென்மாநில மார்க்கெட்டிங் பிரிவின் தலைவராக உயர்ந்தேன்.
அதன்பின், என் பெற்றோருடன் சேர்ந்து, என் மொத்த சேமிப்பையும் போட்டு, ஹோட்டல் பிசினசில் இறங்கினேன். பிசினஸ் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்று வர, ஹோட்டலை மூடும் நிலை ஏற்பட்டது.
இந்த இழப்பு, எனக்குள் இருந்த தொழில் முனையும் ஆர்வத்துக்கு பெரும் சவாலாக இருந்தது. மீண்டும் இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. என் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் குறித்த அறிவை பிறருடன் பகிர்ந்து கொண்டேன். பிறருடைய வணிகங்களை மேம்படுத்த உதவினேன்.
அதற்காக, 2022ல் நான் துவங்கியது தான், 'பிராண்ட் மைண்ட்ஸ் குளோபல்' என்ற நிறுவனம். இந்த நிறுவனம் துவங்கி குறுகிய காலத்திலேயே, எட்டு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு சேவைகள் வழங்க ஆரம்பித்துள்ளேன்.
என் நிறுவனத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் கிராமப்புற திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறேன்.
இதுவரை கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் துறையில் என் நிறுவனம், தமிழகத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக வளர்ந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிராமப்புற இளைஞர்களின் திறமைகளை கொண்டு, நெல்லையில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை உருவாக்குவதே என் கனவு!

