/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
என் மகனை இன்ஜினியர் ஆக்கியிருக்கேன்!
/
என் மகனை இன்ஜினியர் ஆக்கியிருக்கேன்!
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

திருமண விழாக்களுக்கு பூக்களால் ஜடை பின்னி தரும், சென்னை கோயம்பேடைச் சேர்ந்த லட்சுமி: எனக்கு இப்ப 46 வயசாகுது; 36 வருஷமா ஜடை தைக்கிறேன். கூட பொறந்தவங்க நாலு பேரு. அப்பா லாரி டிரைவர். அம்மா பிராட்வேயில் பூ வியாபாரம் பண்ணிட்டு இருந்துச்சு.
சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழல். 7 வயசுலயே அம்மாகூட பூ வியாபாரத்துக்கு போய்ட்டேன்.
பூ ஜடை தைக்க கத்துக்கிட்டேன். 13 வயசுல பிராட்வேயில் தனியா கடை போட்டு ஜடை தைக்க ஆரம்பிச்சேன். 200-க்கும் மேற்பட்ட டிசைன்களில் ஜடை அலங்காரம் செய்யத் தெரியும்.
என், 18 வயசுல கல்யாணம் முடிஞ்சுது. வீட்டுக்காரர் லாரி டிரைவர். ராணி மாதிரி பார்த்துப்பாரு. பூ வாங்குறது, மந்தாரை இலை வாங்குறது, ஆர்டர் எடுக்குறதுன்னு என்னோட வேலைகளையும் சேர்த்து செய்வாரு. 1996-ல் கோயம்பேடு மார்க்கெட் திறந்தாங்க.
அதனால், பிராட்வேயில் இருந்து கோயம்பேடுக்கு வந்துட்டோம். கிடைச்ச வருமானத்துல வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருந்துச்சு. திடீர்னு ஒரு நாள் எங்க வீட்டுக்காரர் நெஞ்சு வலியால் இறந்து போயிட்டார்.
வயசான அம்மா, 4 வயசு மகன் ரெண்டு பேரையும் பார்த்துக்க வேண்டிய பொறுப்போட தனியா நின்னேன்; சொந்த பந்தம் யாரும் உதவல. அவரு செத்த 10வது நாள் ஜடை தைக்க ஆரம்பிச்சிட்டேன்.
காலையில 3:00 மணிக்கு பூ வாங்கிட்டு வர்றது, ஜடை தைக்கிறதுன்னு எல்லாத்தையும் மகனை இடுப்புல வெச்சுக்கிட்டே பண்ணுவேன்.
முடிஞ்ச வேலைகளை எங்க அம்மா எனக்கு செஞ்சு கொடுக்கும். அவங்களுக்கு இப்போ, 100 வயசு; இன்னும் கடைக்கு வந்து எனக்காக உதவி செய்யும்.
முந்தின நாளே ஆர்டர் வந்துரும். ஆர்டருக்கு தகுந்த மாதிரி பூக்களை எல்லாம் காலையிலேயே வாங்கிருவேன். ஜடை தைக்க நார், தங்க நிற ஜரிகை பேப்பர், மந்தாரை இலையெல்லாம், 20 நாளைக்கு ஒரு முறை பிராட்வேயில் இருந்து வாங்கி வருவேன்.
காலையில 5:00 மணிக்கு ஜடை தைக்க ஆரம்பிச்சா, ராத்திரி 7:00 மணி வரைக்கும் வேலை இருக்கும்.
பியூட்டி பார்லர்கள் நடத்துறவங்க எங்களுக்கு ரெகுலர் கஸ்டமர்கள். 300 ரூபாய்ல இருந்து, 1,500 ரூபாய் வரைக்கும் ஜடை பண்ணி கொடுக்கிறோம். ஒரு ஜடைக்கு 50 முதல் 100 ரூபாய் வரைக்கும் லாபம் இருக்கும்.
எனக்கு கையெழுத்து கூட போடத் தெரியாது. ஆனா, என்னோட ஒரு ஆள் வருமானத்துல தான், மகனை சிவில் இன்ஜினியர் ஆக்கிஇருக்கேன்.
உடம்பு சரியில்லன்னு ஒரு நாள் கூட வீட்டுல முடங்கியதில்லை. உயிர் வாழ சாப்பாடு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் உழைக்கிறது!

