/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்கியது இல்லை!
/
ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்கியது இல்லை!
PUBLISHED ON : மார் 30, 2025 12:00 AM

பெண் குழந்தைகளுக்கான தற்காப்புக் கலைகளை, 37 ஆண்டுகளாக இலவசமாக கற்றுத் தரும், தேனி மாவட்டம், சின்னமனுாரை சேர்ந்த, ரத்னவேல்: அப்பா விவசாயி. அத்துடன், சிலம்ப ஆசானாகவும் இருந்தவர். ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன். காலையில் விவசாய வேலைக்கு செல்வேன்.
வேலை, பயிற்சி என படாதபாடு பட்டு, என், 19 வயதில் ஆசான் ஆனேன். அந்த சிரமம் மற்றவர்களுக்கு இருக்கக் கூடாது என்று, இலவசமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.
பெண்களுக்கு தற்காப்புக்கலை முக்கியம் என்பதால், என் பயிற்சி மையத்தில் அவர்களுக்கு தான் முக்கியத்துவம். பெண்கள் கற்றுக் கொண்டால், தன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பாங்க.
கடந்த 37 ஆண்டுகளுக்கு முன், 'இலவசமாக சிலம்பம் சொல்லி தர்றேன்'னு வீடு வீடாக சென்று, 'பெண் குழந்தைகளை எப்படி அனுப்புவது' என்று, பலர் தயங்கினர்.
அவர்களுக்கு புரியவைத்து, ஐந்து பிள்ளைகளுடன் பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். சிலம்பம் கற்றுக்கொண்ட பெண்களை, ஊர் திருவிழாக்களில் கம்பு சுற்ற வைத்தேன்.
எனக்கு திருமணம், குழந்தைகள் என, குடும்பப் பொறுப்புகள் அதிகமாகி, வருமானம் பிரதானமானதும், எல்லாரும், 'சிலம்பம் கற்றுக் கொடுக்க காசு வாங்கு' என கூறினர். ஆனால், அதை நான் செய்யவில்லை.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் பெண்களை பார்த்து, 'மான் மாதிரி இருக்க, மயில் மாதிரி இருக்க' என்று வர்ணிப்பது...? 'புலி மாதிரி கம்பீரமா இருக்க' என்று சொல்ல வேண்டாமா?
அதனால்தான் பெண் குழந்தைகளுக்கு புலியாட்டம் கற்றுக் கொடுக்கிறேன். புலியாட்டம் கற்றுக்கொண்டால், நிராயுதபாணியாக நின்றாலும் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.
புலியாட்டம் என்பது, புலி போன்று பாவனை செய்வது மட்டுமல்ல; புலி மாதிரி தாக்குவதையும் குறிக்கும். இதை பிடிவர்மம் என்று சொல்வோம்.
கடந்த 2017ல் தான், ஓசூரில் சிலம்பப் போட்டி நடக்க இருப்பதாக தகவல் வந்தது. என் சொந்தக்காசை செலவு செய்து பிள்ளைகளை அழைத்துச் சென்றேன். அதில் ஏழு பேர் பங்கேற்று, இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் வாங்கினர்.
தொடர்ந்து போட்டிகள், நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதால், எங்கள் மாணவர்கள் வெளியே தெரிய ஆரம்பித்தனர். அதனால், தேனியை சுற்றியிருக்கும் அரசு பெண்கள் விடுதி மாணவியருக்கு நேரடியாக சிலம்பம் கற்றுக் கொடுக்குற வாய்ப்பை கொடுத்தாங்க.
இந்த கலையை வைத்து, இதுவரை நான் எவரிடமும் 1 ரூபாய் கூட வாங்கியது இல்லை. கலை வாழ்ந்தால் போதும், கலையை வைத்து நான் வாழ மாட்டேன்! தொடர்புக்கு 99652 89849
மருந்து, மாத்திரை இல்லாத வாழ்க்கை வாழலாம்!
இயற்கை விவசாய மருத்துவர்களை உருவாக்கி வரும், சென்னை, திருவான்மியூரை சேர்ந்த மகாலட்சுமி நரசிம்மன்: சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை என விமானத்தில் பறந்து பறந்து, ஏற்றுமதி வியாபாரம் செய்து வந்தேன். புத்தருக்கு அரச மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டது போல், விமானத்தில் சாப்பிட்ட போதுதான், எனக்கு இயற்கை விவசாயம் குறித்த ஞானோதயம் வந்தது.
என் கணவரின் சொந்த கிராமமான உத்திரமேரூருக்கு அருகில் இருக்கும் மலையாங்குளத்தில், 4 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கித் தந்தார். இயற்கை விவசாயத்தில் எனக்கிருந்த ஈடுபாடு, உழைப்பால் கிடைத்த லாபத்தில், பிற்காலத்தில் மேலும் 4 ஏக்கர் வாங்கினோம்.
பூச்சிக்கொல்லி துவங்கி அடியுரம், மேலுரம் வரை நாங்கள் பயன்படுத்துவது அனைத்துமே இயற்கை உரங்கள்தான். செயற்கை மருந்து கலக்காமல், மருத்துவ குணம் கொண்ட நெல் வகைகளை தான் பயிர் செய்கிறேன்.
என்னிடம் இயற்கை விவசாயம் கற்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம், பாரம்பரிய நெல் விதைகளை கொடுத்து விளைவிக்க சொல்வேன். அவர்கள் விளைவித்து, விற்பனை செய்தது போக, உபரியாக இருப்பதை என்னிடம் கொடுப்பர்.
மேலும், 'மகாலட்சுமி பன்னாட்டு இயற்கை உழத்திகள் பவுண்டேஷன்' என்ற அமைப்பு ஒன்றை துவக்கி உள்ளேன். இதன் வாயிலாக தமிழகமெங்கும் இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயிகளை, அவர்களுடைய ஊர்களிலேயே ஒருங்கிணைத்து இயற்கை விவசாயத்தின் பலன்களை கூறுகிறேன்.
பாரம்பரிய நெல் வகைகளை பயிர் செய்ய ஆர்வத்துடன் முன்வருவோருக்கு வழிகாட்டியாக இருக்கிறேன். தவிர நெல்மணிகளாகவோ, அரிசி மணிகளாகவோ விற்பனை செய்யாமல், மதிப்பு கூட்டி, அதிக வருவாய் கிடைக்க பல தொழில் நுணுக்கங்களையும் கற்றுத் தருகிறேன்.
வருவாய் அதிகம் கிடைப்பதால், ஒருவரை பார்த்து ஒருவர் என பலரும் வருகின்றனர். இதை நான் லாபநோக்கில் செய்யவில்லை. இயற்கையையும், பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க என் சொந்த செலவில், தமிழகம் முழுக்க இந்த சேவையை இலவசமாக செய்து வருகிறேன்.
பாரம்பரிய அரிசியை உண்பதால், பண்டைய வீரத்தையும், ஆரோக்கியத்தையும் பெறலாம் என்பது முற்றிலும் உண்மை. மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்க்கை வாழலாம்.நோய்கள் வருவதை தடுக்கவும், ஆரோக்கியமான இயற்கை விவசாயம் செய்யவும் இயற்கை விவசாய டாக்டர்கள் தேவை. அவர்களை தான் தமிழகமெங்கும் உருவாக்கி வருகிறேன். இப்படி ஏராளமான விவசாய டாக்டர்களை உருவாக்குவதே என் லட்சியம்.