/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தடை, பாரபட்சங்களை கடந்து தான் வெற்றி பெற்றேன்!
/
தடை, பாரபட்சங்களை கடந்து தான் வெற்றி பெற்றேன்!
PUBLISHED ON : அக் 10, 2025 12:00 AM

தமிழக அரசின், 'கல்பனா சாவ்லா' விருது பெற்ற மாற்றுத்திறனாளியான, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன்: பிறவியிலேயே என் இடது கையில் கட்டை விரல் இல்லை; தசை சிதைவு நோயும் தாக்கியிருந்தது.
தோளிலிருந்து, கைக்கு செல்லும் நரம்பு பாதிப்பால், எந்த பொருட்களையும் பிடிக்க முடியாமல், கைகள் மரத்துபோகும் நோயால் பாதிக்கப்பட்டேன்.
இதன் காரணமாக, கைகளில் வலி அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், விபத்து ஒன்றில் சிக்கியதால், இடது கையைத் துாக்கவே இயலாத அளவுக்கு புதிய சிக்கலும் ஏற்பட்டது.
ஆயினும், எனக்கு சிறுவயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். 5 வயது முதலே பேட்மின்டன் விளையாட்டில் ஆர்வம் காட்ட துவங்கினேன். பெரிய அளவில் பொருளாதார பின்புலம் இல்லாதபோதும், என் விளையாட்டு ஆர்வத்தை தந்தை ஊக்குவித்தார்.
திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், ஹைதராபாதில் இயங்கும் பேட்மின்டன் அகாடமி ஒன்றில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டேன். 2023ல், சீன நாட்டின் ஹாங்சூ நகரில் நடந்த ஆசியன் பாரா போட்டிகளில் பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றேன்.
பாரா பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டிகளில், எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
அதேபோல், பிரான்ஸ் நாட்டின் பாரிசில் கடந்த ஆண்டு நடந்த பாராலிம்பிக்ஸ் பந்தயங்களில், மாற்றுத்திறனாளிக்கான ஒலிம்பிக் போட்டியான பெண்கள் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவிலும், வெள்ளிப் பதக்கம் பெற்றேன்.
இதுவரை, இந்த போட்டியில் இந்திய வீராங்கனை எவரும், இரண்டாவது இடம் பெற்றதில்லை. அடுத்தமுறை, நிச்சயமாக தங்க பதக்கம் வென்றே தீருவது என்ற தீர்மானத்துடன் இருக்கிறேன்.
கடந்த 2024ல், பாரா விளையாட்டுகளில் அந்த ஆண்டின், 'ஸ்போர்ட்ஸ் உமன்' என்ற அங்கீகாரத்துடன், மும்பையில் நடந்த விழாவில், எனக்கு, 'ஸ்போர்ட் ஸ்டார் ஏசெஸ்' விருது வழங்கப்பட்டது.
தற்போது, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், நாமக்கல் கால்நடை அறிவியல் மருத்துவ கல்லுாரியில் படித்து வருகிறேன்.
பொருளாதாரம் மற்றும் சமூக அளவில் பல தடைகளும், பாரபட்சங்களும் எனக்கு ஏற்பட்டது. அவற்றையெல்லாம் கடந்துதான், இந்த நிலையை அடைந்திருக்கிறேன்!