/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எம்புட்டு நேரம் வேண்டுமானாலும் உழைப்பேன்!
/
எம்புட்டு நேரம் வேண்டுமானாலும் உழைப்பேன்!
PUBLISHED ON : பிப் 02, 2025 12:00 AM

சென்னை, கே.கே., நகர் ராஜமன்னார் சாலையில், தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வரும் ரேவதி மற்றும் அவரது மகள் விசாலினி:
நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். டியூஷன் முடிந்து, பெற்றோருக்கு உதவியாக இருக்கலாம் என்று தினமும் இரண்டு மணி நேரம் நானும், அண்ணனும் கடையில் வேலை செய்வோம். ஆரம்பத்தில் அம்மா, 'நீ இந்த வேலையெல்லாம் செய்யாதே' என்று சொல்லும்.
ஆனால், அம்மா, தினமும் இரவு உடம்பெல்லாம் வலிக்கிறது என்று சொல்லி, தைலம் தேய்த்து தான் துாங்குவாங்க; அதனால், என்னால் முடிந்த வேலைகளை செய்கிறேன். கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் என் ஆசை. அதற்காகத் தான் அம்மாவும், அப்பாவும் இவ்வளவு கஷ்டப்படுகின்றனர்.
ஆரம்பத்தில் என் கூட படிப்போர், நான் கடையில் வேலை செய்கிறேன் என்று கிண்டல் செய்வர். அவங்ககிட்ட, 'நான் ஓனர்'னு சொல்வேன். நான் எடுக்குற மார்க்கை பார்த்துட்டு, 'பரவாயில்லையே... வேலையும் பார்த்துட்டு சூப்பரா படிக்கவும் செய்றே'ன்னு பாராட்டுகின்றனர்.
ரேவதி: என் கணவர் ஆட்டோ ஓட்டுநர். அதில் வரும் வருமானம் குடும்பத்திற்கு போதவில்லை. அதனால், சொந்த தொழில் செய்யலாம் என்று எண்ணி, தள்ளுவண்டி கடை ஆரம்பித்தோம்.
நண்பரிடம், 50,000 ரூபாய் கடன் வாங்கி தான் கடை ஆரம்பித்தோம். முதல் நாளே 1,000 ரூபாய்க்கு வியாபாரமானது. அந்த நம்பிக்கையில், நேரம் காலம் பார்க்காமல் உழைத்தோம்.
வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு, மதியம் 12:00 மணிக்கு கடைக்கான சமையல் வேலைகளை ஆரம்பிப்பேன்.
காய், சிக்கன், மட்டன் வாங்குறதெல்லாம் அவர் பார்த்துப்பாரு. மாலை 5:00 மணிக்கு கடை திறந்தால், நள்ளிரவு 1:00 மணிக்கு தான் வீடு திரும்புவோம்.
தினமும் குறைந்தது, 100 பேராவது சாப்பிட வருவாங்க. 5,000 - 6,000 ரூபாய் வரை விற்பனையாகும்.
விடிஞ்சா மூணு வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு யோசித்த காலம் எல்லாம் இருந்திருக்கு. எதிர்காலத்தில் எங்கள் கடையை பெரிதாக மாற்ற வேண்டும் என்று என் மகன் சொல்கிறான்; அது நடக்கும்.
மகளை கலெக்டர் ஆக்க வேண்டும்; மகன் சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்பது தான் என் ஆசை. திருமணமான இந்த, 17 ஆண்டுகளில் நல்ல துணி போடணும்னோ, வெளியிடங்களுக்கு போகணும் என்றோ யோசித்ததில்லை.
பிள்ளைகளை ஆளாக்கினால் போதும்கிறது மட்டும் தான் மூளைக்குள் ஓடிக்கிட்டே இருக்கும். அதுக்காக, எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் உழைப்பேன். 'இட்லிக் கடை ரேவதியின் மகள் கலெக்டர்' என்று ஒரு நாள் செய்தி வரும்.