PUBLISHED ON : அக் 28, 2026 12:00 AM

தேசிய அளவிலான, ‘ஹாக்கி’ போட்டிகளுக்கு நடுவராக இருக்கும் வேலுார் மாவட்டம், அரும்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த, 23 வயதாகும் சோனியா:
பெற்றோர் விவசாய வேலை செய்து என்னை படிக்க வைத்தனர். எங்க கிராமத்துக்கு அருகில் உள்ள காரணாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். எங்கள் பள்ளி மைதானத்தில், மாணவர்கள் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து, எனக்கும் விளையாடும் ஆசை வந்தது.
ஆறாம் வகுப்பு முதல் ஹாக்கி விளையாட ஆரம்பித்தேன். ஏழா-ம் வகுப்பில், பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி பிரிவில் ஓராண்டிலேயே மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
அப்போதெல்லாம், வெளியூரில் நடக்கும் போட்டிகளுக்கு சென்று வர பணம் இருக்காது. உடற்கல்வி ஆசிரியர் தான் உதவி செய்வார். இப்போது காரணாம்பட்டு பள்ளியில் படித்த நான்கு பேர், தேசிய ஹாக்கி வீரர்களாக உருவாகி இருக்கிறோம்.
பள்ளி முடித்ததும் வேலுார், டி.கே.எம்., மகளிர் கல்லுாரியில் பி.காம்., சேர்ந்தேன்; அங்கும் ஹாக்கி விளையாடினேன். இரண்டாம் ஆண்டு படித்தபோது பல்கலைகளுக்கு இடையிலான போட்டிகளிலும், பல்கலை அளவிலான குழுவிலும் இரண்டு ஆண்டுகள் விளையாடினேன்.
பி.காம்., முடிச்சதும், சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியில் இளங்கலை உடற்கல்வி படிப்பில் சேர்ந்தேன். ஹாக்கி நடுவர்களை தேர்வு செய்ய, ‘ஹாக்கி இந்தியா’ என்ற தேசிய அளவிலான கூட்டமைப்பின் சார்பில் தேர்வுகள் நடக்கும். மாவட்டம், மாநிலம், தேசியம் என மூன்று நிலைகளில் தேர்வு நடத்துவர்.
ஒவ்வொரு கட்டத்திலும் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு நடக்கும். இவற்றில் தகுதி பெற்றால் மட்டுமே, தேசிய ஹாக்கி போட்டிகளுக்கு நடுவராக பணியாற்ற முடியும். மாவட்ட அளவில் துவங்கி, படிப்படியாக தேசிய அளவிலான தேர்வு வரை எழுதி தகுதி பெற்றேன்.
தற்போது மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பள்ளி மாணவர்கள் சப்- – ஜூனியர், ஜூனியர் அணிகளுக்கான போட்டிகளுக்கு நடுவராக இருக்கிறேன். தமிழகத்தில் என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர் இருக்கிறோம்.
ஒவ்வொரு போட்டி தொடர் துவங்கும் முன்பும் உடற்தகுதிக்கான தேர்வு வைப்பர். அதில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே நடுவர் பணி செய்ய முடியும். அதனால், உடற்பயிற்சி செய்யும் திறனை பராமரித்தே ஆக வேண்டும். தினமும் காலை, மாலைன்னு அட்டவணை போட்டு, ஓட்ட பயிற்சி முதலான தடகள பயிற்சிகளை செய்கிறேன். இதன் வாயிலாக உடல் சோர்வடையாமல், நீண்ட நேரம் போட்டியில் நடுவராக பங்கேற்க முடியும்.
