/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
திறமையாக செய்தால் விவசாயத்தில் லாபம் கிட்டும்!
/
திறமையாக செய்தால் விவசாயத்தில் லாபம் கிட்டும்!
PUBLISHED ON : ஜூன் 22, 2025 12:00 AM

'விருட்சம் ஆர்கானிக் பார்ம்' வாயிலாக கீரை, காய்கறிகளை விற்பனை செய்து வரும், சென்னையைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி ஜனா:
எனக்கு பூர்வீகம் நாகர்கோவில். பெற்றோர் இருவருமே அரசு ஊழியராக இருந்ததால், சென்னையில் குடியேறி விட்டோம். எம்.பி.ஏ., முடித்ததும், தனியார் நிறுவனம் ஒன்றில் இரு ஆண்டுகள் பணிபுரிந்தேன். சுயதொழில் துவங்கும் யோசனையில், வேலையில் இருந்து விலகினேன்.
இயற்கை உணவு உற்பத்தி மீது ஆர்வம் ஏற்பட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கினேன். இந்தியா முழுதும் பல விவசாயிகளை தேடி சென்று, அதுகுறித்து தெரிந்து கொண்டேன்.
சென்னை, தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலையில் உள்ள புஷ்பகிரியில், 3 ஏக்கர் பண்ணை நிலத்தை குத்தகைக்கு எடுத்தேன். முதலில் நெல் பயிரிட்டேன்; அதன்பின் கோழிப்பண்ணை, காய்கறி மற்றும் கீரை சாகுபடியை துவக்கினேன். துவக்கத்தில் கீரை விற்பனையில் பல சவால்கள் வரிசைகட்டி நின்றன.
அதனால், நாமே நேரடியாக விற்பனை செய்வோம் என்று, கீரை கட்டுகளை பேட்டரி வண்டியில் ஏற்றி விற்பனை செய்ய ஆரம்பித்தேன்; அது ஓரளவுக்கு பலன் கொடுத்தது. நேரடி விற்பனையை தொடர்ந்து, சொந்தமாக இயற்கை அங்காடியையும் ஆரம்பித்து விற்க ஆரம்பித்தேன்.
மொத்தமுள்ள 3 ஏக்கரில், 1 ஏக்கர் 75 சென்ட் நிலத்தை கீரை சாகுபடிக்கென ஒதுக்கி இருக்கிறோம். மீதி இடத்தில் காய்கறி சாகுபடியும், கோழி வளர்ப்புக்கான கொட்டகையும், மீன் வளர்ப்புக்கான குட்டையும் அமைத்திருக்கிறோம்.
மொத்தம், 12 வகையான கீரைகள் பயிர் செய்து வருகிறோம். கீரை சாகுபடியில் மட்டும், செலவு போக மாதம் 89,000 ரூபாய் லாபம் வருகிறது. கீரை, கோழி வளர்ப்பு, காய்கறி சாகுபடி என எல்லாம் சேர்த்து, மாதத்திற்கு 1.29 லட்சம் ரூபாய் லாபம் எடுத்து வருகிறேன்.
சென்னையை அடுத்த சுண்ணாம்பு கொளத்துாரில், சொந்தமாக இயற்கை அங்காடி நடத்தி வருகிறேன். அதன் வாயிலாக, மாதம் 12 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. சிறிய அளவில் மதிப்பு கூட்டு பொருட்களையும் தயாரித்து வருகிறேன்.
அதை இன்னும் விரிவாக்கம் செய்யும் யோசனையும் இருக்கிறது. இப்பொருட்களை விற்பனை செய்ய இணையளதம், மொபைல் செயலி தயார் செய்து வைத்திருக்கிறோம்.
வார இறுதி நாட்களில், பண்ணைக்கு வெளியே சந்தை நடத்துகிறோம். 'பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்துவிட்டு, விவசாயம் செய்றீங்களே' என்று பலர் கேட்கின்றனர். ஆனால், ஒருநாளும் நான் அப்படி யோசித்ததே இல்லை. விவசாயமும் ஒரு தொழில் தான். திறமையாக செய்தால் லாபம் கிடைக்கும். தொடர்புக்கு: 98840 58834
மாறுகண் பிரச்னைக்கும் தீர்வு காண இருக்கிறோம்!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்:நான், பள்ளிகளுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது, ஒரு சில மாணவர்கள் சீரற்ற பல்வரிசையுடன், கூச்ச சுபாவத்துடன் பேசுவதை கவனித்தேன்.
உதட்டு பிளவு, இதய நோய் உள்ளிட்ட எந்த பிரச்னைகளையும் சரிசெய்வதற்கு காப்பீட்டு திட்டமும், அரசு மருத்துவமனைகளில் வசதியும் இருக்கிறது.
ஆனால், எத்துப்பல் பிரச்னைகளை சரிசெய்வதற்கு எதுவும் இல்லை. இதனால், மாணவர்கள் மனரீதியாக வலுவிழந்து, படிப்பில் கவனம் சிதற விடுவதை கண்டறிந்தேன்.
இதற்கான சிகிச்சைக்கு குறைந்தபட்சம், 25,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும். சிகிச்சைக்குப் பின்னும் தொடர்ச்சியான கவனிப்புகள் அவசியம்.
ஆகவே, இந்த சிகிச்சைக்கான செலவுகள் பொருளாதார ரீதியாக மாணவ - மாணவியரின் குடும்பத்திற்கு சிரமங்களை ஏற்படுத்தும். இந்த இடர்பாடுகளை களைந்து மாணவ - மாணவியருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது தான், 'மலரும் புன்னகை' திட்டம்!
முதலில், மாவட்டம் முழுதும் அரசு பள்ளிகளில், எத்துப்பல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவ - மாணவியரை கணக்கெடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் சமூக சூழல் நிதி திட்டத்தில் நிதியுதவி பெற்று, மாணவ - மாணவியருக்கான சிகிச்சை செலவை ஈடுகட்ட நடவடிக்கை எடுத்தோம். நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லை என்பதால், தனியாரை நாட வேண்டிய சூழல்.
பல் மருத்துவ சிகிச்சையில் பிரபலமாக உள்ள சில தனியார் மருத்துவமனைகளுடன், கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், மதுரையைச் சேர்ந்த பிரபல தனியார் பல் மருத்துவமனை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதற்கு முன்வந்தது. எக்ஸ் -ரே, ஸ்கேன் மற்றும் சிகிச்சைக்கு பின்பான தொடர் பரிசோதனை போன்றவற்றை இலவசமாக செய்துதர ஒப்புக்கொண்டது.
மாணவ - மாணவியர் சிகிச்சைக்காக மதுரை சென்று வரும் செலவு, சாப்பாடு, அவர்களை உடன்இருந்து கவனிப்பதற்கு பெற்றோரை அழைத்துச் செல்லுதல் என அனைத்தையும், மலரும் புன்னகை திட்டத்தின் கீழ் இலவசமாக செய்து கொடுத்தோம்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி எத்துப்பல் நீக்கம், ஸ்கேன், எக்ஸ் - ரே, தொடர் பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கி, மாணவர் ஒருவருக்கு 10,000 ரூபாய் சிகிச்சை செலவாக வழங்கப்படுகிறது.
அடுத்த முயற்சியாக, மாறுகண் பிரச்னைக்கும் தீர்வு காண இருக்கிறோம். மனிதவள மேம்பாடு நோக்கிய திட்டத்தை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் முன்னெடுப்பதில் மகிழ்ச்சி!