/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மூளை வேலை செய்தபடியே இருந்தால் சோர்வு வராது!
/
மூளை வேலை செய்தபடியே இருந்தால் சோர்வு வராது!
PUBLISHED ON : பிப் 11, 2025 12:00 AM

ஓய்வு காலத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொண்ட, தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு: நான் பிறந்தது, கன்னியாகுமரியில் உள்ள குழித்துறை கிராமம். எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், எம்.எஸ்சி., அக்ரி படித்தேன். ஆனால், விவசாயம் சார்ந்து தொடர்ந்து இயங்க முடியவில்லை.
சில நாட்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐ.ஓ.பி., வங்கியில் மேனேஜராகவும் பணியாற்றினேன்; அதுவும் எனக்கு பிடிக்கவில்லை.
அந்த நிலையில் தான் ஐ.பி.எஸ்., படித்து வெற்றி பெற்று, 1987ல் தமிழக காவல் பணியில் சேர்ந்தேன். பல்வேறு இடங்களில் பல்வேறு பதவிகள் வகித்து, 2023 ஜூன் 31ல் ஓய்வு பெற்றேன்.
ஓய்வு பெற்று விட்டால், இன்றைக்கு பலரும் வேறு வேலை செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்; ஆனால், அது தவறு. பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்தான், நமக்கான வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க முடியும் என்பதை மறந்து விடுகின்றனர்.
இன்று என்னை பார்த்து பலரும் கேட்கும் கேள்வி, 'இப்ப என்ன சார் செய்றீங்க?' என்பது தான்.
ஏதோ, நான் சும்மா இருப்பதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், என்னை பொறுத்தவரை செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன.
கிராமத்தில் என் பெற்றோர் வசித்த 100 ஆண்டுகள் பழமையான வீட்டை சீரமைக்க துவங்கினேன். தேவைக்கு அதிகமாக சிறிது இடம் காலியாக இருந்தது தெரிந்தது. அந்த இடத்தில் நுாலகம் அமைத்து, நான் இதுவரை படித்த புத்தகங்கள், படிப்பதற்காக எடுத்து வைத்துள்ள புத்தகங்கள் அனைத்தையும் அங்கு வைத்து உள்ளேன்.
இந்த நுாலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான நுால்களும் இடம் பெற்றுள்ளன. கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் இந்த நுாலகத்திற்கு, தினமும் 50 பேருக்கு குறையாமல் வருகின்றனர்.
மேலும், மாரத்தான் போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். பல இடங்களில் பேச அழைக்கின்றனர். பள்ளி, கல்லுாரி, பல்வேறு அமைப்புகள், பெயர் தெரியாத ஊருக்கெல்லாம் சென்று புதுப்புது மனிதர்களை சந்திக்கிறேன்.
வாழ்க்கையில் மீதி இருக்கும் நாட்களை, நாலு பேருக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்த விஷயங்களில், உங்கள் துறை சம்பந்தப்பட்டவற்றில் தொடர்ந்து ஈடுபடலாம். மூளை வேலை செய்தபடியே இருந்தால் சோர்வு வராது.
தற்போது, சென்னையில் நான் வசிக்கும் வீட்டைச் சுற்றி வாழை, பப்பாளி, மரவள்ளி கிழங்கு, கீரை வகைகளை பயிரிட்டு பராமரித்து வருகிறேன்.
இயற்கைக்கு செய்யும் உதவியாக, ஒருவர் குறைந்தது 50 மரக் கன்றுகளையாவது நட வேண்டும் என்பது என் விருப்பம். இதற்காக, என் ஓட்டம் தொடரும்.

