நாற்று வரிசைக்கு நடுவே நாம் நடந்தால் களை முளைக்காது!
நாற்று வரிசைக்கு நடுவே நாம் நடந்தால் களை முளைக்காது!
PUBLISHED ON : ஏப் 10, 2026 01:02 AM

தஞ்சாவூர் மாவட்டம், நெய்குன்னம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கார்த்திக் குமார்:
என் சொந்த ஊர் நெய்குன்னம் தான். அப்பா விவசாயி. பொறியியல் பட்டதாரியான நான், தனியார் நிறுவனத்தில், நிறைவான ஊதியத்தில் பணியாற்றி வந்தேன்.
இயற்கை விவசாயம் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக பணியை விட்டு, 2 ஏக்கர் நிலம் வாங்கி, 2014ல் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். தற்போது, 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.
இப்போது கருப்பு கவுனி அரிசியும், சீரக சம்பாவும் சாகுபடி செய்கிறேன். நடவு செய்து, 15ம் நாள் வயலில் தண்ணீர் கட்டி, நாற்று வரிசைக்கு இடையில் தோட்ட பணியாளர், நான், என் நண்பர்கள் நடந்து செல்வோம். இதனால், களைச் செடி, புல் எல்லாம் சேற்றில் புதைந்து விடும்; களை எடுக்கும் செலவும் குறையும்.
நெற்பயிர்கள் வளர்ந்து விட்டால், வயலில் நிழல் உருவாகிவிடும்; அடுத்த களைகள் முளைக்காது. குறைவான செலவில், நிறைவான மகசூல் கிடைக்கும். 1 ஏக்கருக்கு சராசரியாக, 18 மூட்டை நெல் கிடைக்கிறது. ஒரு மூட்டைக்கு, 60 கிலோ எனில், மொத்தம் 5 ஏக்கருக்கு, 1,084 கிலோ நெல் கிடைக்கிறது.
அதை அரைக்கும்போது, 684 கிலோ அரிசி கிடைக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என்னிடம் அரிசி வாங்குகின்றனர். சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
அதனால், விற்பனைக்கு பிரச்னையே இல்லை. 1 கிலோ அரிசி, 90 ரூபாய் வீதம் விற்பனை செய்கிறேன். இதன் வாயிலாக, ஏக்கருக்கு, 61,200 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
தவிடு, குருணை, வைக்கோல் விற்பனையில் 5,000 ரூபாய் வரும். ஆக, 1 ஏக்கருக்கு நெல் சாகுபடி வாயிலாக, 66,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எல்லா செலவும் போக, 36,000 ரூபாய் லாபம் எனில், 5 ஏக்கர் நெல் சாகுபடி வாயிலாக, ஆண்டுக்கு 1.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது.
கோடை காலத்தில் எள், நிலக்கடலை, உளுந்து பயிர் செய்கிறேன். 5 ஏக்கர் நிலத்திலும் சேர்த்து, 75,000 ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது. மேலும், நாட்டு பசு மாடுகள் வளர்க்கிறேன்.
நெல் சாகுபடி வாயிலாக கிடைக்கிற வைக்கோல், தவிடை மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து விடுவேன். பாலை, வீட்டுத் தேவைக்கு பயன்படுத்துகிறேன்.
மாட்டின் கழிவுகளை உரமாக பயன்படுத்துகிறேன்.
வரப்பு ஓரங்களில், வீட்டு தேவைக்கான காய்கறிகள் விளைவதால், சத்தான காய்களும் கிடைக்கின்றன. இயற்கை விவசாயம் வாயிலாக ஆரோக்கியமான உணவு, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கிறது. இதை விட வேறு என்ன வேண்டும்!
தொடர்புக்கு: 88704 62434.
