PUBLISHED ON : டிச 11, 2025 03:00 AM

திருப்பூரின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக திகழும், 'ஸ்ரீசக்தி' தியேட்டர் உரிமையாளர், 'திருப்பூர்' சுப்பிரமணியம், தன் ஆரம்ப கால போராட்டங்கள் மற்றும் வெற்றியை கூறுகிறார்:
ஜவுளிக்கடை ஊழியராக, என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். 1979ல் ஜவுளிக்கடை வேலையை விட்டு, நானும், நண்பர்கள் மூவரும் சேர்ந்து, ஆளுக்கு, 100 ரூபாய் முதலீடு செய்து, பழைய திரைப்படங்களை வாங்கி, வார இறுதி நாட்களில், திருப்பூரில் உள்ள, யுனிவர்சல் தியேட்டரில், திரையிட ஆரம்பித்தோம்.
ஒரு வேளை காட்சிக்கு, தியேட்டர் வாடகை, 125 ரூபாய் கொடுக்க வேண்டும். வாடகை மற்றும் வரி போக மீதமுள்ள வருமானம், எங்களுக்கு லாபமாக இருந்தது. ஆறு மாதங்கள் திரைப்படங்களை வாங்கி, திரையிடும் தொழிலை செய்தோம். இதில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒரு நண்பர் விலகி விட்டார்.
அடுத்து, வாரம் முழுதும் தொடர்ந்து, சினிமா படங்களை திரையிட தீர்மானித்தோம். அந்த திரைப்படங்கள் நன்றாக ஓடியதால், ஆறு மாதங்களில், ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.
மற்றொரு நண்பரும் விலக, நான் மட்டும் தனியாக, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களை திரையிட, அவையும் நல்ல லாபத்தை கொடுத்தது.
சொந்தமாக ஒரு தியேட்டர் கட்ட முடிவு செய்து, 2002ல், 'ஸ்ரீசக்தி' தியேட்டரை கட்டினேன். திருப்பூரின் முதல், 'ஏசி' தியேட்டர் மற்றும் ஒரே வளாகத்தில், ஆறு படங்கள் திரையிடும் வசதி கொண்ட தியேட்டர், எனது, ஸ்ரீ சக்தி தியேட்டர் தான். தற்போது, எட்டு படங்கள் திரையிடும் வசதிகளுடன், இன்னும் சிறப்பாக செயல்படுகிறது.
'கொரோனா' தொற்றுக்கு முன் இருந்ததை போல, தியேட்டருக்கு மக்கள், இப்போது அதிகமாக வருவதில்லை.
ஏற்கனவே, 'பைரசி' என்ற சினிமா படங்கள் திருட்டு, சினிமா தியேட்டர் தொழிலை வெகுவாக பாதித்துள்ளது. இன்னொரு பக்கம், ஓ.டி.டி., எனும், சமூக வலைதளங்களில் வெளியாகும் சினிமாக்கள், தியேட்டர் தொழில்களுக்கு போட்டியாக மாறியிருக்கின்றன.
ஆயினும், சினிமாவை நேசிப்பவர்கள், சினிமா காதலர்கள் இன்றும் தியேட்டர்களுக்கு வந்து, எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். பிரபல நடிகர்களின் படங்கள், மக்களை பெருந்திரளாக தியேட்டர்களுக்கு வர வைக்கின்றன. அதுபோல, நல்ல கதையுள்ள சின்ன பட்ஜெட் படங்களும் ரசிகர்களை ஈர்க்கின்றன.
ஜவுளிக்கடை ஊழியராக இருந்த போது, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்கள் அனைத்தையும், ஒரே நாளில் பார்க்கும் அளவுக்கு எனக்கு சினிமா ஆர்வம் இருந்தது. ஆனால், அப்போது, சினிமாவே என் தொழிலாக மாறும் என நினைக்கவில்லை.
எந்த தொழிலாக இருந்தாலும், சொந்த முயற்சியையும், உழைப்பையும் நம்பி, தைரியமாக செய்தால், நிச்சயம் ஜெயிக்கலாம்!

