'முயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் முன்னேற முடியும்!'
'முயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் முன்னேற முடியும்!'
PUBLISHED ON : செப் 01, 2026 12:30 AM

விளையாட்டு மற்றும் கைவினைத் தொழிலில் சாதனை படைத்து வரும், புதுச்சேரி மாநிலம், சாரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான ராதிகா - அய்யப்பன்:
* ராதிகா: நாங்கள் இருவருமே ஒரே காப்பகத்தில் வளர்ந்து, 2006ல் திருமணம் செய்து கொண்டோம். கணவர் பி.ஏ., நான் பி.காம்., முடித்திருக்கிறோம். இருவரும் பட்டதாரிகளாக இருந்தும், வேலை கிடைக்கவில்லை. அதை தடையாக நினைக்காமல், எங்களுக்குள் இருந்த விடாமுயற்சியை நம்பிக்கையாக விதைத்து முன்னேறினோம்.
கூடைப் பந்தாட்டம் மீதான ஆர்வத்தால், சக்கர நாற்காலி கூடைப்பந்து அணியில் இணைந்தேன். வார இறுதி நாட்களில் இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் தொடர்ந்து பயிற்சி எடுத்து, பல போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் படைத்துள்ளேன்.
கடந்த மே மாத துவக்கத்தில், பெங்களூரில் நடந்த போட்டியில், மூன்றாம் பரிசை வென்றேன். 2023ல் மகளிர் தினத்தை முன்னிட்டு, 'யங் இந்தியன்ஸ் க்ரோன்' சார்பில், புதுச்சேரியில் நடந்த, 'அங்கீகரிக்கப்படாத பெண்களை அங்கீகரிப்போம்' என்ற நிகழ்வில், சாதனை படைத்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்; அதில், நானும் ஒருத்தி என்பது மகிழ்ச்சியான விஷயம்.
* அய்யப்பன்: மாற்றுத்திறனாளிகளுக்கான அருமை மறுவாழ்வு முகாமில், கைவினை தொழிலாளர்களாக மூன்று மாதங்கள் பணிபுரிந்தோம். நாங்களும் சுயமாக கைவினை பொருட்கள் கடை திறக்க ஆசைப்பட்டு, தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில், 1 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தொழில் துவங்கினோம்.
தற்போது, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கைவினை தொழிலில் வெற்றிகரமாக இருக்கிறோம். ஹைதராபாத் முத்து, கண்ணாடி போன்ற பளபளப்பான செயற்கை கற்களை பயன்படுத்தி முத்துமணி, கம்மல், மாலை போன்ற ஆபரணங்களை கலை நயத்துடன் செய்யும் திறமை எங்களுக்கு உண்டு. ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை வடமாநிலங்களுக்கு சென்று தற்காலிக கடை அமைத்து, எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வோம்.
புதுச்சேரியில் தொழில் துவங்கிய ஆரம்ப நாட்களிலேயே, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், காலப் போக்கில் விற்பனை மந்தமானது. அதனால், நாங்கள் தயாரிக்கும் ஆபரணங்களில் புதுமையான வடிவங்களை உருவாக்கினோம். அந்த முயற்சியின் பலனாக, மூன்று ஆண்டுகளாக மீண்டும் மக்களின் ஆதரவும், நல்ல வரவேற்பும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. வெளிமாநில விற்பனைக்கும் அது தான் காரணம்.
மாற்றுத்திறனாளிகள் வீட்டில் முடங்கி இருப்பது, உடல் சவால்களால் அல்ல; மன தயக்கத்தால் தான். முயற்சி செய்யும் மனப்பக்குவமும், தன்னம்பிக்கையும் இருந்தால், எந்த தடையையும் தாண்டி முன்னேற முடியும். இதை அறிவுரையாக சொல்லவில்லை; எங்களின் அனுபவத்தால் சொல்கிறோம்!
