PUBLISHED ON : நவ 12, 2023 12:00 AM

சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் மீனாட்சி பஜாஜ்: எண்ணெய் சேர்க்காத சமையல், நடைமுறையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை.
நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில், என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன, ஒருவர் ஒரு நாளைக்கு அல்லது மாதமொன்றுக்கு எவ்வளவு எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
எந்த ஒரு எண்ணெயும் முழுதும் நல்ல எண்ணெய் என்றோ, முழுதும் கேடானது என்றோ சொல்ல முடியாது. மாவுச் சத்து, புரதச் சத்து போல கொழுப்புச் சத்தும் நம் உடலுக்கு தேவை. 18 வயதான ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, 2,000 கலோரிகள் தேவை என்றால், அதில், 30 சதவீதம் வரை கொழுப்பு சத்து இருக்க வேண்டும்.
பாமாயில் மற்றும் வனஸ்பதியை அறவே தவிர்ப்பதே நல்லது. நெய் பிரியர்கள், ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் உருக்கிய நெய் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
'கோல்டு பிரஸ்டு ஆலிவ்' எண்ணெயில், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. ஆனால், இது, 'சாலட்' மீது ஊற்றி சாப்பிட மட்டும் தான்; சமைப்பதற்கு அல்ல.
நல்லெண்ணெயில் நல்ல கொழுப்பு அதிகம் என்பதால், 18 வயதான ஒருவருக்கு, ஒரு மாதத்திற்கு கால் லிட்டர் நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். செக்கு கடலை எண்ணெய்க்கு பதில், சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.
கடலை எண்ணெய் சீக்கிரம் சூடேறி புகைந்தால், அதில் இருக்கிற நல்ல கொழுப்பும், கெட்ட கொழுப்பாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தவிட்டு எண்ணெயில் இருக்கிற விட்டமின் ஈ, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குறைக்கும். சிறு வயதிலேயே வயதான தோற்றம் வராமல் தடுக்கும். நீரிழிவு இருப்போருக்கு தவிட்டு எண்ணெய் நல்லது.
தேங்காய் எண்ணெயில் இருக்கிற நல்ல கொழுப்பு, உடலால் எளிதாக கிரகிக்கப்படக் கூடியது. ஆனால், இதிலும் கெட்ட கொழுப்பு உள்ளதால், எப்போதாவது எடுத்துக் கொள்ளலாம்.
இதயநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு இருப்போர், சூரியகாந்தி எண்ணெயை அளவுக்கு அதிகமாகவும், தொடர்ந்தும் சமையலில் பயன்படுத்தி வந்தால், அவர்களுடைய பிரச்னை தீவிரமாக வாய்ப்பிருக்கிறது என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
இந்த பிரச்னைகள் இருப்போர், சூரியகாந்தி எண்ணெயை தவிர்க்கலாம் அல்லது குறைவாக பயன்படுத்தலாம். கடுகு எண்ணெயில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு இருப்பவர்களுக்கு நல்லது.
மேலே குறிப்பிட்டதன் அடிப்படையில், எண்ணெய்களை பயன்படுத்தலாம். ஆனால், எந்த எண்ணெயாக இருந்தாலும், மாதத்துக்கு மொத்தம் அரை லிட்டர் மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
'பிரைவேட் கம்பெனி'யை 'பப்ளிக் லிமிடெட்' நிறுவனமாக்கணும்!
மதுரை அருகே புலியூரில் அமைந்துள்ள, 'அருண் கண்ணன் அக்ரோ புட்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜாராம்:
எல்லா
பொருட்களையுமே, பிராண்ட் ஆக மாற்றி விற்பனை செய்யும் காலம் இது.
முன்பெல்லாம் கடைக்கு சென்று, 'நல்ல அரிசி கொடுங்க' என்று கேட்டு,
சாம்பிளாக கொஞ்சம் அரிசியை எடுத்து பார்த்து வாங்குவர்.
இன்று அரிசியிலும் பிராண்ட் வந்து விட்டதால், 'இந்த பிராண்ட் அரிசியை கொடுங்க' என்று, மக்கள் கேட்டு வாங்க துவங்கி விட்டனர்.
இந்த
தொழிலில், 31 ஆண்டுகளாக இருக்கிறேன். வியாபார குடும்பத்தைச் சேர்ந்த நான்,
பிளஸ் 2 முடித்தவுடன் ஒரு ரைஸ் மில்லில், 375 ரூபாய் சம்பளத்தில்,
'ஸ்டாக்' எடுக்கும் வேலைக்கு சேர்ந்தேன்.
ஆர்வமுடன் அங்கு வேலை
செய்ததை பார்த்து, அந்த மில்லையே நிர்வாகம் செய்யும் அளவிற்கு உயர்த்தினர்
உரிமையாளர்கள். அரிசி கொள்முதல், 'பிராசஸ், மார்க்கெட்டிங்' என, தொழிலை
நன்கு கற்றுக்கொண்டேன்.
தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு பின், நாமே
சுயமாக தொழில் செய்யலாம் என்ற ஆர்வம் ஏற்பட, சகோதரர்கள், நண்பர்கள்
சிலருடன் சேர்ந்து, முதலில் அரிசி டிரேடிங் செய்தேன். அதில் கொஞ்சம்
முன்னேறி, தற்போது அதை பெரிய யூனிட்டாக மாற்றினேன்.
சரியான நெல்லை
வாங்கி வந்து, இங்கு பிராசஸ் செய்கிறோம். இன்று, தென் மாவட்டங்களில் பல
கடைகளில் எங்கள் பிராண்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த தொழில் மீதும், மக்கள் மீதும் நாங்கள் காட்டிய அக்கறை, இன்று அரிசி சந்தையில் எங்கள் பெயர் சொல்லும் அளவுக்கு உயர்ந்து உள்ளோம்.
பாரம்பரிய
முறையில் நெல்லை பிராசஸ் செய்ய முடியா விட்டாலும், 'ஹைடெக்' இயந்திரங்கள்
வாயிலாக நெல்லை அவிப்பது, உலர்த்துவது, தரம் பிரித்து பாலீஷ் செய்து,
'பேக்கிங்' செய்வது வரை, மிகவும் கவனமாக இருக்கிறோம்.
தற்போது, என்னிடம், 60 பேர் வேலை செய்கின்றனர். அரிசி தொழிலை, கூடுதல் அக்கறையுடன் செய்தால், யார் வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும்.
நாட்டிலுள்ள
அத்தனை மக்களுக்கும் ஒரே நிறுவனத்தால், அரிசி சப்ளை செய்ய முடியாது;
அதனால், அதிகமானோர் இந்த தொழிலுக்கு வருவதும் நல்லது தான்.
தினமும்,
50 டன் அரிசியை பிராசஸ் செய்கிறோம்; இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
நிதானமாக, தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
இப்போது, நாங்கள், 'பிரைவேட் லிமிடெட்' கம்பெனியாக இருக்கிறோம்; இதை, 'பப்ளிக் லிமிடெட்' கம்பெனியாக மாற்ற வேண்டும்.
