/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கடவுளையே நேரில் பார்த்த மாதிரி இருக்கும்!
/
கடவுளையே நேரில் பார்த்த மாதிரி இருக்கும்!
PUBLISHED ON : மார் 09, 2024 12:00 AM

'வானம் பூமி இடி முழங்க... ஊரு சனமெல்லாம் கதி கலங்க...' என்று கணீர் குரலில் கருப்பசாமியை கொண்டாடியது உட்பட, நாட்டுப்புற இசையில் பக்திப் பாடல்களைப் பாடி அசத்தும் தேவகோட்டை அபிராமி:
எளிய மக்களுக்கான எளிமையான இசை, இலக்கிய வடிவம் தான் நாட்டுப்புறப் பாடல்கள். குறிப்பாக, தமிழர்களோட நாட்டுப்புற இசைக்கு ஒரு தனித்த அடையாளம் இருக்கு. நான் வளர வளர அதில் என் ஆர்வமும் வளர்ந்தது.
தெம்மாங்கு, தாலாட்டு, கும்மிப்பாட்டு, பக்திப் பாட்டுன்னு கலந்துகட்டி பாடினேன். அப்போது எனக்குள்ள எழும்புற மகிழ்ச்சி ஒரு பக்கம்னா, சில நேரங்களில் என் பாடல்களைக் கேட்டு ஆன்மிக பரவசத்தில் சிலர் ஆடத் துவங்குறதை பார்க்கும்போது என்னோட எனர்ஜி லெவலும் எகிறும்.
கூடவே, கண்கள் கலங்கி மனசு நிறைஞ்சு போகும். இசைக்கான உச்சபட்ச அங்கீகாரம், கேட்பவர்களை தன்னிலை மறந்து இயங்க வைக்கிறது தானே! அப்போதெல்லாம் எனக்கு கடவுளையே கண்முன்னால் பார்த்த மாதிரி இருக்கும்!
'தேவகோட்டை அபிராமி மியூசிக்' என்ற பெயரில் யு டியூப் சேனலைத் துவங்கி, நான் பாடிய பாடல்களை பதிவேற்ற துவங்கினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என் குரலை இந்த உலகம் அங்கீகரிக்கத் துவங்கியது.
அது கொடுத்த அடையாளம் காரணமாக எனக்கு கச்சேரிகள் கிடைக்க துவங்கின.
இதுவரை, 40 - 50 தனிப் பாடல்கள் பாடியிருக்கேன். இப்போது என் இசைக்குழுவில், 20 பேர் இருக்காங்க. இசை, பாடல் வரிகள், எடிட்டிங், பாடல் பாடுவது என, ஆளுக்கொடு வேலையை செய்கிறோம்.
பாடல்களை ஒருங்கிணைத்து யு டியூப்பில் வெளியிட்டும், கச்சேரிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாடியும் மக்களை மகிழ்வித்து வருகிறோம்.
என் யு டியூப் சேனலுக்கு இப்போது, 4.41 லட்சம் பார்வையாளர்கள், இன்ஸ்டாகிராமில் 3.61 லட்சம் பேர் என, டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறேன்.
பொதுவாக ஒரு கச்சேரி மூன்று மணி நேரம் நடக்கும். பக்திப் பாட்டு, கிராமியப் பாட்டு, சினிமா பாட்டு, கானா பாட்டுன்னு எல்லா பாடல்களையும் பாடுவோம்.
பாடல்களை பாடுவதோடு இடையிடையே அவங்க கூட பேசி, சிரிச்சு கலகலப்பாக்குவேன்.
நிகழ்ச்சியை பார்க்குற மக்கள் என்னை தங்களோட வீட்டுப் பெண்ணாக நினைத்து, 'தங்கச்சி, ஆத்தா, மகாலட்சுமி'னு கூப்பிட்டு, பாராட்டை அன்போட சேர்த்துக் கொடுக்கும்போது, நெகிழ்ந்து போயிடுவேன்.
சினிமாவில் நிறைய பாடணும். நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமில்லாமல், எல்லா வகையான பாடல்களையும் சினிமாவில் பாடணும்.

