தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/முடக்குவாதத்தை வென்ற மலையேற்றம்!

முடக்குவாதத்தை வென்ற மலையேற்றம்!

முடக்குவாதத்தை வென்ற மலையேற்றம்!


PUBLISHED ON : மே 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, போராடி மீண்ட, தஞ்சாவூரை சேர்ந்த 39 வயதான நிஷா:

தற்போது, சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2013ல் எனக்கு குழந்தை பிறந்தது. அப்போது, திடீரென முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டேன். என் நோய் எதிர்ப்பு மண்டலமே என்னை எதிர்க்கும் அளவுக்கு முடக்குவாதம் பாதித்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அது. என்னால், மற்றவர்கள் உதவியின்றி கழிப்பறை செல்வதோ, கதவை திறப்பதோ, தண்ணீர் பாட்டிலை திறக்கவோ முடியாது. அந்த அளவுக்கு என் கால் மூட்டுகள் எல்லாம் வீங்கி, தினசரி வேலைகளுக்கே முழுதாக என் குடும்பத்தை சார்ந்திருக்கிற நிலை வந்தது.

இதனால், வேலையை விட வேண்டிய சூழல் வந்தது. கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் இந்த பிரச்னையை அனுபவித்தேன். அப்படியே இருந்து விடக்கூடாது என்று தோன்றியது. இந்த மாதிரி பிரச்னையில் இருந்து வெளியே வந்த பலரின் காணொளிகளை பார்த்தேன்.

நான் படித்த கட்டுரைகள், வீடியோக்களின் மூலம் பலரும் உடல் ரீதியான செயல்பாடுகள் வாயிலாக மீண்டது தெரிந்தது. படுத்த படுக்கையாக இருந்த நான், பொறுமையாக எழுந்து மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தேன். உடல் எடையை சிறிது சிறிதாக குறைத்தேன். மூட்டுகளை வலிமையாக்க பயிற்சி செய்தேன்.

வலிகள் குறைந்து, உடம்பும், மனதும் வலிமையானதாக உணர்ந்தேன். ஆனால், அப்போதும் என்னால் திருப்தியாக இருக்க முடியவில்லை. மலையேறணும், மாரத்தான் போகணும் என்று தோன்றியது.

உத்தரகண்ட்டில் உள்ள, 'தயாரா புக்யால்' என்ற இடத்துக்கு சென்றேன். இமயமலை தொடரில் அதிக உயரத்தில் இருக்கிறது இந்த ஊர்.

முடக்குவாத பிரச்னையில் இருந்து மீண்டு, அந்த உச்சிக்கு சென்ற நபர் நானாகத் தான் இருப்பேன். உச்சியை தொட்ட அந்த தருணம் என் வாழ்க்கையை மாற்றியது.

தொடர்ந்து நடக்க வேண்டும், உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். நேபாளம், பூடான், ஹிமாச்சல பிரதேசம் என, கடந்த மூன்று ஆண்டுகளில், 15 மலையேற்றங்களை முடித்துள்ளேன்.

எவரையும் சார்ந்திருக்க கூடாது என்று நினைத்து, பல நாடுகளுக்கு தனியாக பயணம் செய்து வருகிறேன். சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பயணத்திற்காக ஒதுக்கி விடுவதால், பொருளாதார ரீதியாக நான் எவருக்கும் பாரமாக இல்லை.

என் வாழ்க்கை அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மற்றவர்களுக்கும் நம்பிக்கையை விதைத்து வருகிறேன்.

**************************

 வருவாயின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்!




சேமிப்பு குறித்து கூறும், சென்னையை சேர்ந்த சிந்துஜா பாலாஜி:

எங்கள் குடும்பம் மிகவும் எளிமையானது. என் அப்பா ஒருவரது சம்பளத்தில் தான் எல்லா செலவுகளையும் சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால், தன் சேமிப்பு உத்தியால் அவர் அதை மாற்றி அமைத்தார்.

எதி ர்காலத்தில் நாங்கள் பணக் கஷ்ட ம் இல்லாமல் வாழ, சேமிப்பின் அவசியம் குறித்து சொல்லி தந்தார். உண்டியல் வாங்கி தந்து, சேமி க்கும் பழக்கத்தை அப்போதே துாண்டினார்.

அப்பாவுக்கு பிடித்த சேமிப்பு என்றால், தபால் அலுவலகத்தில், 'ரெக்கரிங் டிபாசிட்' எனும் தொடர் வைப்பு நிதி கட்டுவது தான்.

'வாழ் க்கையில் பல செலவுகளை எதிர்கொள்ள அது உதவும்' என்பார். நான் கல்லுாரி விடுதியில் தங்கி படிக்கும்போதே, அப்பா அனுப்பிய பணத்தில் ஒரு பகுதியை சேமித்து, 'ரெக்கரிங் டிபாசிட்' கட்ட ஆரம்பித்தேன்.

கல்லுாரியில் கல்வி சுற்றுலா செல்லும் போது, அந்த பணத்தை உபயோகித்துக் கொள்வேன்.

இப்போது எனக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. என் அப்பா சொல்லித் தந்தபடி ரெக்கரிங் டிபாசிட் சேமிப்பை இப்போதும் செய்து வருகிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் .

என் அப்பா செய்தது போல், அவளுடைய கல்வி செலவுக்காக, ரெக்கரிங் டிபாசிட் கட்டி வருகிறேன். என் அப்பா, அவளுக்கும் ஒரு உண்டியல் வாங்கித் தந்து விட்டார்.

வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டலாம் என்று நானும், கணவரும் முடிவு செய்த போது, 'அப்படி செய்ய வேண்டாம். அதற்கு பதில் இரண்டு வீட்டு மனைகள் வாங்குங்கள். ஒரு மனை வாங்க, வங்கி கடன் வாங்குங்கள். ஒரு மனைக்கு நான் பணம் தருகிறேன்.

'சில ஆண்டுகளில் சென்னையில் இடத்தின் மதிப்பு உயரும். அப்போது ஒரு மனையை விற்று, இன்னொரு மனையில் வீடு கட்டலாம். கடன் சுமை பெரிதாக இருக்காது' என்று யோசனை கூறினார்.

அவரது யோசனைப்படியே, இப்போது நாங்கள் புது வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம். 'நம் வருவாயில், முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்' என்று அப்பா அடிக்கடி கூறுவார்.

அவர் அப்போது ரெக்கரிங் டிபாசிட்டில் சேர்த்த பணம், இன்று பல மடங்காக பெருகி, பென்ஷன் போல் மாதாமாதம் ஒரு தொகை வருகிறது.

அவர் எங்களிடம் எதற்காகவும், எந்தவித பண உதவியும் எதிர்பார்ப்பது இல்லை. இப்போதும் அவர் தான் எங்களுக்கு சிரமங்கள் இருக்கும்போது பணம் தந்து உதவுகிறார்.

என் அப்பா பெயர் ராஜா. அவர் பெயரில் மட்டுமல்ல, வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பதிலும், அவர் தான் எங்களுக்கு எப்போதுமே ராஜா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us