'வட மாநிலங்களிலும் வலுவான இடத்தை பிடிக்கும் மில்கி மிஸ்ட்!'
'வட மாநிலங்களிலும் வலுவான இடத்தை பிடிக்கும் மில்கி மிஸ்ட்!'
PUBLISHED ON : செப் 18, 2026 12:00 AM

பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும், ஈரோடைச் சேர்ந்த பிரபல, 'மில்கி மிஸ்ட்' நிறுவனத்தின் தலைவர் சதீஷ்குமார்:
ஈரோடில் இருக்கும் தயிர்பாளையம் கிராமத்தில் துவங்கி, இன்று பங்கு சந்தையில் பட்டியலாகும் அளவுக்கு வளர்ந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல; கடும் உழைப்பு மட்டுமே இதற்கு காரணம்.
என் 16 வயதில் குடும்ப தொழிலில் இணைந்தேன். 1994ல் வெறும் 10 கிலோ பனீருடன் துவங்கிய முயற்சி, இன்று பனீர் மட்டுமல்லாமல், தயிர், வெண்ணெய், நெய், 'சீஸ்' எனப்படும் பாலாடை கட்டி, 'யோகர்ட்' எனப்படும் இனிப்பு தயிர், ஐஸ்கிரீம், சாக்லேட் என, பல தயாரிப்புகளை கொண்ட முன்னணி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
காலை முதல் இரவு வரை, மக்களின் அத்தனை உணவிலும் மில்கி மிஸ்ட் இடம் பிடித்திருக்கிறது. பனீர், நெய் போன்றவை பணக்காரர்களுக்கான உணவாக இருந்ததை மாற்றி, அனைவருக்குமான உணவாக மாற்றி இருக்கிறோம். இந்த வளர்ச்சி, எங்களுக்கு பால் கொடுத்து உதவும் 80 ஆயிரம் விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் நுகர்வோராகிய பொதுமக்கள் அனைவராலும் தான் சாத்தியமானது.
பெருந்துறையில் உள்ள உற்பத்தி ஆலையை விரிவுபடுத்தி, நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தென் மாநிலங்களில் பெரும் சந்தை பங்களிப்பை வைத்திருக்கும் எங்கள் நிறுவனம், வடமாநிலங்களிலும் வலுவான இடத்தைப் பிடிக்க, தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஓரிரு ஆண்டுகளில், மஹாராஷ்டிராவிலும் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டிருக்கிறோம்.
தற்போது, 22 நாடுகளுக்கு எங்கள் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம். அடுத்தடுத்து மேலும் பல நாடுகளுக்கு, எங்களுடைய தயாரிப்புகளை அனுப்ப முயற்சி எடுத்து வருகிறோம்.
இளம் தொழில் முனைவோருக்கு நான் சொல்வது இது தான்... நம் தொழிலை ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படை தன்மையுடன் செய்து வர வேண்டும். தொழிலை முறைப்படி செய்து வந்தால் தான், வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்த முடியும்.
அதைவிட முக்கியம், தொழிலில் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் இருந்தால் தான், மக்களின் நம்பிக்கையை பெற முடியும். மில்கி மிஸ்ட் தயாரிப்புகள் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கின்றன. அந்த நம்பிக்கையே, எங்களை இவ்வளவு துாரம் அழைத்து வந்திருக்கிறது.
எங்களது இந்த அசாத்திய பயணம், உள்ளூரில் துவங்கிய ஒரு கனவு, கடும் உழைப்பு, சரியான திட்டமிடலால், தேசிய அளவில் முன்னணி நிறுவனமாக உயர முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
