PUBLISHED ON : மே 07, 2023 12:00 AM

மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில், பாசனத்திற்கு வாய்ப்பில்லாத பூமியில், இயற்கை முறையில் மானாவாரியாக கலப்பு பயிர் சாகுபடி செய்து வரும் அலமேலு ராமநாத ரெட்டியார்:
எனக்கு வயது, 70. எங்கள் பகுதி முழுக்க மானாவாரி விவசாயம் தான். ஆற்று ஓரத்தில் சில இடங்களில் மட்டும், கிணறு வாயிலாக விவசாயம் செய்கின்றனர். முழுக்க கரிசல் மண் தான்; மழையை நம்பியே விவசாயம்.
இங்குள்ள மண்ணுக்கு, மழை தண்ணீரை சேமித்து வைக்கும் தன்மையிருக்கிறது; 80 சதவீத ஈரத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.
அப்படி உறிஞ்சியது போக, மீதி தண்ணீரை வெளியேற்றி விடும். அந்தத் தண்ணீர் பள்ளமான பகுதியில் வடியும்.
அதனால், அந்த காலத்திலேயே பள்ளமான பகுதியில், ஊருணிகளை வெட்டி வைத்துள்ளனர், நம் முன்னோர்.
எங்கள் பகுதியில் மட்டும், 10க்கும் மேற்பட்ட ஊருணிகள் இருக்கின்றன. இன்றைக்கு பண்ணை குட்டைகள் வெட்டுகின்றனர். ஆனால், இதை அந்தக் காலத்திலேயே செய்து விட்டனர். நாம் தான் பராமரிக்காமல் விட்டு விட்டோம்.
பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு, 3 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது; அதில், முழுக்க கலப்பு பயிர் தான். எங்கள் பகுதியில் கலப்பு பயிர் விவசாயத்தையே, காலம் காலமாக செய்கின்றனர்.
பருத்தி தான் முக்கிய பயிர். ஆனால், அதை மட்டுமே சாகுபடி செய்ய மாட்டோம்; அத்துடன் சேர்த்து, 22 வகையான பயிர்களை சாகுபடி செய்வோம்.
அவரவர் வசதிக்கேற்ற மாதிரி பயிர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வர். நான் மொச்சைப்பயறு, தட்டைப்பயறு, பாசிப்பயறு, உளுந்துடன் பருத்தி விதைத்திருக்கிறேன்.
இதில், ஒவ்வொரு காலத்தில், ஒவ்வொரு பயிர் அறுவடைக்கு வரும்; பருத்தி மட்டும் கடைசி வரைக்கும் இருக்கும்.
விதைத்த, 60வது நாளில் அறுவடை செய்யக்கூடிய பாசிப்பயறு துவங்கி, அடுத்த சீசன் வரை, ஐந்து வகையான பயிர்கள் வாயிலாக வருவாய் வரும்.
ஆண்டு முழுமைக்குமான விவசாயிகளின் குடும்பத் தேவைகளிலிருந்து, அனைத்து வகையான செலவுகளுக்கும், இதன் மூலம் கிடைக்கும் வருமானமே பிரதானம். 45 ஆயிரம் ரூபாய் லாபம் தான்.
பெரியதாக பக்குவம் பார்க்காமல், பராமரிப்பு இல்லாமல் கிடைக்கும் இந்த லாபம், எங்களைப் பொறுத்தவரை நல்ல லாபம் தான். விலங்குகள், பறவைகளால், சின்ன சின்ன இழப்புகள் ஏற்படும்.
அதைத் தவிர, பெரிய அளவு இழப்பு இல்லாமல், மானாவாரி, இயற்கை முறை, நீர், பராமரிப்பு, பாதுகாப்பு பிரச்னை மாதிரி எந்த விதமான சிரமத்தையும் கொடுக்காத கலப்பு முறை சாகுபடி, கரிசல் மண்ணுக்கே உரிய தனிச்சிறப்பு.
விளையாட்டு வர்ணனையாளராக உருவாவது எப்படி?
சமீபத்தில் பெண்களுக்கான, 'பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்த போட்டி களை வர்ணனை செய்து அசத்திய காயத்ரி சுரேஷ்:
நான் பிறந்தது திருப்பதி; ஆனால் வளர்ந்தது, படித்தது சென்னை தான். முதலில், எனக்கு ஏரோநாட்டிக்கல் படிக்க வேண்டும் என்பது ஆசை.
அந்த குரூப் கிடைக்காததால், வேறு பாடப்பிரிவில் இன்ஜினியரிங் முடித்தேன்; அப்போது எனக்குள் வர்ணனையாளராக வேண்டும் என்ற ஆசை வந்தது.
அதற்கு
காரணம், இயல்பாகவே எனக்கு, 'படபட' வென பேசிக்கிட்டே இருக்க பிடிக்கும்.
மற்றவர்களுடன் பேசி, அவர்களின் பிரச்னைக்கு, அவங்க திருப்திபடும் வகையிலான
யோசனை சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்.
அத்துடன், கதை சொல்வதும் பிடிக்கும். அதனால் முதலில், ஆர்.ஜே., எனப்படும், வர்ணனையாளராக சில நிகழ்ச்சிகள் செய்தேன்.
'ஸ்போர்ட்ஸ்' வர்ணனையாளர் ஆகணும்னு கனவு இருந்தது. அதை, 'ப்ரோ கபடி' நிகழ்ச்சி மூலமாக, சித்தார்த் ஷர்மா நிறைவேற்றி வைத்தார்.
அந்த
விளையாட்டுப் போட்டி முடிந்த போது, அப்படியொரு நிறைவும், சந்தோஷமும்
கிடைத்தது. அதைத் தொடர்ந்து, கால்பந்து விளையாட்டுக்கு வர்ணனையாளர்
வாய்ப்பு கிடைத்தது.
அதற்காக, கால்பந்து விளையாட கத்துக்கிட்டு, அந்த ஸ்போர்ட்ஸ் செலிபிரிட்டிகளோட வர்ணனையாளராக வேலை செய்தேன்.
அதன்பின் கிரிக்கெட் விளையாட்டின் வர்ணனையாளராக வேலை பார்த்தது கூட நெகிழ்ச்சியான அனுபவம் தான்.
முதலில்
ஸ்போர்ட்ஸ் பற்றிய அறிவும், நுணுக்கங்களும் ஓரள வுக்கு தெரிந்திருக்க
வேண்டும். அதற்காக கபடி, கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் என எல்லா
விளையாட்டுகளையும் ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி, ஸ்போர்ட்ஸ்
பற்றிய நுணுக்கங்களை, சீனியர்களிடம் எந்தவித தயக்கமும் இல்லாமல் கேட்டு
தெரிந்து கொண்டேன்.
பிரபலமான விளையாட்டு வீரர்களின் போட்டிகளை தேடித்தேடி பார்ப்பேன்; அவர்களை பற்றிய தகவல்களை சேகரிப்பேன்.
இப்படி
ஆர்வத்தோட, தேடுதலோட ஸ்போர்ட்ஸ் பற்றிய அறிவு, நுணுக்கங்கள் பற்றி
தெரிந்து கொண்டால் தான், நிச்சயமாக ஒரு பெண்ணால் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளராக
உருவாக முடியும்.
எல்லாவிதமான ஸ்போர்ட்சுக்குப் பின்னாடியும், சுவாரஸ்யமான கதை இருக்கும்.
அதனால், என் ஆயுள் காலத்திற்குள், உலகத்தில் இருக்கும் எல்லா விளையாட்டுகளையும் வர்ணனை செய்ய வேண்டும்; அதுவே, என் மிகப்பெரிய ஆசை!
