/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எம்.எஸ்., அம்மாவாக வாழ்ந்துள்ளேன்!: லாவண்யா வேணுகோபால்
/
எம்.எஸ்., அம்மாவாக வாழ்ந்துள்ளேன்!: லாவண்யா வேணுகோபால்
எம்.எஸ்., அம்மாவாக வாழ்ந்துள்ளேன்!: லாவண்யா வேணுகோபால்
எம்.எஸ்., அம்மாவாக வாழ்ந்துள்ளேன்!: லாவண்யா வேணுகோபால்
PUBLISHED ON : அக் 21, 2024 12:00 AM

நாங்கள் சொந்தமாக நாடகக் குழுவை துவக்குவதற்கு முன், எம்.எஸ்., அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்க தீர்மானித்தோம். அது எந்தளவு சாத்தியமாகும் என்பதை அப்போது யோசிக்கவில்லை. ஆனால், எங்கள் கனவு இப்போது நிஜமாகி விட்டது.
அவரது வாழ்க்கை வரலாற்று நாடகத்தை தயாரித்து, அதில், எம்.எஸ்., அம்மாவாக நானே நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை; ஒரு கனவு போல் தான் இருக்கிறது. இதை, எங்கள் நாடக வாழ்வில், மிகவும் மதிப்பு மிக்க, மகிழ்வான தருணமாக தான் நினைக்கிறேன்.
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ரமணன் எழுதிய, 'காற்றினிலே வரும் கீதம்' புத்தகம் இந்த நாடகத்தை தயாரிக்க மிகவும் உதவியாக இருந்தது; அதற்கு, அவரும் முழுமனதுடன் சம்மதித்தார். நாடக உலக ஜாம்பவான், 'பாம்பே' ஞானம், இந்த நாடகத்தை இயக்க ஒப்புக்கொண்டது எங்களுடைய அதிர்ஷ்டம்.
எம்.எஸ்., அம்மாவாக நானும், சதாசிவம் கதாபாத்திரத்தில் பாஸ்கர் என்பவரும் நடித்தோம். இதற்காக நாங்கள் கடந்தாண்டு முதல் உழைத்து வந்தோம்.
எம்.எஸ்., அம்மாவின் இந்த ஆண்டு பிறந்த நாளுக்காக, இதை சமர்ப்பித்து மேடையேற்ற வேண்டும் என்ற அதீத ஆசையுடன், அதற்கான வேலைகளை ஆர்வத்துடன் செய்தோம்.
கடந்த செப்., 13ல் நாடகத்தின் முதல் காட்சியை அரங்கேற்றினோம். கிட்டத்தட்ட, 45க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்து, எங்கள் உழைப்பை அளித்து, பல மாதங்களாக, 'ரிஹர்சல்' நடத்தினோம்.
எம்.எஸ்., அம்மாவின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் எங்களுடைய தீராத ஆசை. அது நிச்சயம் நடக்கும்; எங்களுடைய நாடக உலக வாழ்வில், 'காற்றினிலே வரும் கீதம்' ஒரு மைல்கல்லாக அமையும்.
அவரது வாழ்க்கையை முழுமையாக காட்சிப்படுத்த, இரண்டரை மணி நேரம் போதாது. ஆனால், முடிந்த அளவிற்கு மிகச் சிறப்பான சம்பவங்களை கோர்த்து அளித்துள்ளோம்.
நான், மற்ற குழுக்களில் இதுவரை நடித்த மேடை நாடகங்களுக்காக, பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளேன். தற்போது எங்கள், 'த்ரீ குழு'வை துவக்கிய பின், 'பாயும் ஒலி' தான் எங்கள் முதல் நாடகம்.
இதற்கு, மயிலாப்பூர் அகாடமியில் சிறந்த நாடக குழுவிற்கான விருது கிடைத்தது. உடன் நடித்த பாஸ்கருக்கும், எனக்கும் சிறந்த, நடிகர் - நடிகையர் விருதுகள் கிடைத்தன.
நாடகத்துறையில், 11 ஆண்டுகள் அனுபவம் எனக்கு உண்டு. இதுவரை, 30 நாடகங்களில், 600க்கும் மேற்பட்ட மேடைகளில் நடித்துள்ளேன். மேலும், இத்துறையில் நிலவும் சிரமங்களும், சங்கடங்களும் பலரும் அறிந்ததே.
தற்போது, நாடகத் துறையை அடுத்த தலைமுறையினரிடம் சேர்க்கும் முயற்சியிலும், நாடகக் கலையில் புதுப்புது முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
நவீன நாடகங்களுக்கு, மக்கள் அதிக வரவேற்பு தர வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் ஆசை!

