/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எங்கள் வீட்டில் நானும், மருமகளும் நல்ல நண்பர்கள்!
/
எங்கள் வீட்டில் நானும், மருமகளும் நல்ல நண்பர்கள்!
PUBLISHED ON : அக் 20, 2024 12:00 AM

'பவர்லுாம்' தொழிலில் கலக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், எல்ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த, மாமியார் ராணி - மருமகள் சவுமியா:
ராணி: கணவருடன் சேர்ந்து நெசவு தொழில் செய்து கொண்டிருந்தேன். மகன் பிறந்து, அவனுக்கு திருமணமாகி பேரன், பேத்தி என்று குடும்பம் பெரிதானது; ஆனால், வருமானத்தில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுக்கு தெரிந்தது நெசவு மட்டும் தான். அதனால், மருமகள் யோசனைப்படி, 'பவர்லுாம்' ஆரம்பித்தோம்.
மாமியாரும், மருமகளும் சேர்ந்தால் பிரச்னை வரும்ணு சொல்வாங்க. ஆனால், எங்கள் வீட்டில் நானும், மருமகளும் நண்பர்கள். எந்த வேலையாக இருந்தாலும், சேர்ந்தே செய்வோம். வருமானம் குறைந்து, வீட்டுக்குள்ளே முடங்கிய நெசவு தொழிலை, அனைவரும் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு லாபகரமான தொழிலாக மாற்றியது, என் மருமகள் தான்.
சவுமியா: நானும், அத்தையும் மகளிர் குழு உறுப்பினர்கள். அதனால், எங்கள் பிசினசுக்கு எளிதாக லோன் கிடைத்தது. கூடுதலாக, தனியார் வங்கியிலும் கடன் வாங்கி, 12 பவர்லுாம் மிஷின்களுடன், 18 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழிலை துவக்கினோம். சேலத்தில் இருந்து, தரமான நுால்களை வாங்கினோம்.
வியாபாரிகள், நாங்கள் கேட்கும் வண்ணங்களில், நுால்களை சாயம் போட்டு, பாவு அடிச்சு, ரோலில் ஏற்றிக் கொடுத்து விடுவர். ஒரு ரோல், 18,000 ரூபாய்; அதில், 150 புடவைகள் நெய்யலாம். வெவ்வேறு வண்ணங்களில் மாதம், 12 ரோல்கள் வாங்குகிறோம். எங்களிடம், 400 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை புடவைகள் உள்ளன.
காலை, 5:00 முதல் இரவு 7:00 மணி வரை நெய்தபடியே இருப்போம். அதன்பின், புடவையை அறுப்பது, மடித்து, 'பேக்' செய்வது என, பல வேலைகள் இருக்கும். தற்போது எங்களிடம், எட்டு பணியாளர்கள் உள்ளனர். உற்பத்தியை அத்தையும், விற்பனையை நானும் பார்த்துக் கொள்கிறோம்.
பிசினஸ் ஆரம்பித்த புதிதில், 'நம்மிடம் புடவைகளை யார் வாங்குவர், எப்படி விற்பனை செய்யப் போகிறோம்' என, மலைப்பாக இருந்தது. அதன்பின், எங்கள் தனிப்பட்ட முயற்சியால், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மொத்த வியாபாரிகள் என, எங்கள் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தினோம்.
நாங்கள் உற்பத்தி செய்யும் புடவைகளை, தமிழகம் முழுதும் விற்பனைக்கு அனுப்புகிறோம். மாதம், 1,800 புடவைகள் விற்பனை ஆவதால், 3 லட்சம் ரூபாய்க்கு, 'டர்ன் ஓவர்' செய்கிறோம்.
சென்னை, காஞ்சிபுரம் என பல இடங்களில், 'ஸ்டால்' போட்டும் விற்பனை செய்கிறோம். சில்லரை வியாபாரத்துக்கும் வாங்கிச் செல்கின்றனர். பிசினஸ் நன்றாக போகிறது.
********************
அம்மா கூறிய வார்த்தைகள் தான்வழிநடத்துகின்றன!
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்:
கேரளாவின் பாலக்காட்டில் இருக்கும் கல்பாத்தி தான் பூர்வீகம். என் தந்தை, இளம் வயதில் மும்பையில் குடியேறினார். வறுமையை கடந்து, சி.ஏ., முடித்து, ஆடிட்டராக உயர்ந்தார். அவரை போலவே நானும் ஆடிட்டர் ஆகும் எண்ணத்துடன், பி.காம்., படித்தேன்.
ஆனால், குடும்ப நண்பரான வெங்கடேஷ்வரன் என்ற வழக்கறிஞர், என்னை சட்டத்துறை பக்கம் திருப்பி விட்டார்; அவரிடமே ஜூனியராக சேர்ந்தேன்.
அவர், கடல்சார் சட்டங்களில் இந்தியாவிலேயே பெயர் பெற்ற வழக்கறிஞர். நானும் லண்டன் சென்று கடல்சார் சட்டங்களில் எல்.எல்.எம்., படித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சியை துவங்கினேன்.
வழக்கறிஞர் தொழில் செய்ய துவங்கியபோது, என் அப்பா, மூன்று அறிவுரைகள் கூறினார்...
அதாவது, 'தொழில், பணம் சம்பாதிப்பதற்கான வழி அல்ல... உன்னிடம் வருவோரின் பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று வழி தேடு.
'அதை செய்யும்போது, நியாயமாக கிடைப்பது தான் வருமானம். யாருக்கு என்ன வாக்குறுதி கொடுத்தாலும் அதை செய்து கொடு; செய்ய
முடியாத எந்த விஷயத்திலும் உறுதி சொல்லாதே.
'எப்போதும் உனக்கு கீழே இருப்பவர்களை பார்... அப்போது தான், ஆண்டவன் நம்மை எப்படிப்பட்ட இடத்தில் வைத்திருக்கிறான் என்பது புரியும்' என்று கூறினார். அவற்றை இப்போதும் கடைப்
பிடிக்கிறேன்.என் தந்தை, 'தர்மிஷ்ட மித்ரன்' என்ற சேவை அமைப்பை நடத்தி வந்தார். சொந்தங்கள் எவரும் அருகில் இல்லாத தொலைதுாரத்தில் மரணம் நேர்வது மிகவும் துயரமானது.
அப்படி இறப்பவர்களின் இறுதிச்சடங்குக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரும் சேவை அமைப்பு அது.
உறவுகள் யாரும் இல்லா விட்டாலும், எல்லா கடமைகளையும் இந்த அமைப்பினரே செய்வர். அப்பா மறைவுக்கு பின், அந்த அமைப்பின் துணைத் தலைவராக இருக்கிறேன். ஒவ்வொரு
ஆண்டும், 10 - 15 பேரின் இறுதி அஞ்சலிக்காவது சென்று விடுவேன்.கடந்த 2013 ஜூன் 21ல், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றபோது, என் அம்மா, 'அந்த காலத்தில் நீதி வேண்டும் என்றால், ராஜாவிடம் தான் செல்வர். அவரின் இருப்பிடம் துாரமாக இருந்தால், அருகில் இருக்கும் கடவுளிடம் கண்ணீர் விட்டு முறையிடுவர்.
'இனி, மக்கள் உன்னிடம் தான் வருவர். இந்த வாய்ப்பை கடவுள் உனக்கு கொடுத்திருக்கிறார். அவர்களின் கண்ணீரை துடைப்பதையே உன் கடமையாக நினைத்துக் கொள்' என்றார். அவர் கூறிய வார்த்தைகள் தான், இப்போதும் என்னை வழி
நடத்துகின்றன.